மி
ஷ்கின் உடனான உரையாடல் என்பது அவரது படங்களைப்போலவே திருப்பங்களும் விறுவிறுப்பும் நிறைந்தது. விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கி முடித்து, அதன் பின் தயாரிப்புப் பணிகளில் பரபரப்பாக இருந்தவரை சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
தமிழ்த் திரையுலகில் தனியார் துறை துப்பறிவாளர்களைப் பற்றி படம் வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. தமிழ் சமூகத்துக்குத் தனியார் துப்பறிவாளர்கள் பழக்கம். சினிமாவில் அது இருந்ததா எனத் தெரியவில்லை.
ஒரு வழக்கு வருகிறது, அதை விசாரிக்கப் போகும்போது அது மோசமான மனிதர்களை நோக்கிப் போகிறது. அந்தப் பாதை சொந்த வாழ்க்கையில் எப்படி எதிரொலிக் கிறது, நாயகன் எதை இழக்கிறான் என்பதைக் கடந்து சட்டத்தின் முன் எப்படி மோசமானவர்களைக் கொண்டுவந்து நிறுத்துகிறான். மர்ம முடிச்சுகளை உடைத்து எப்படி ஜெயிக்கிறான் என்று சொல்லியிருக்கிறேன். கதையாகப் பார்த்தால் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கிற கதை தான். முழுமையான கமர்ஷியல் படமாக இருந்தாலும் சில இடங்கள் மனதை உலுக்கும், நிறைய இடங்களில் சிரிப்பீர்கள். உடம்பை முறுக்குவது போன்ற சண்டைகள் உள்ளன. இப்படி எல்லாம் கலந்த ஓரு நல்ல கலவைதான் ‘துப்பறிவாளன்’.
சினிமாவை எப்போதும் யதார்த்தமாகவே பார்க்கக் கூடாது. நிஜ வாழ்க்கையின் யதார்த்தமாக என் சினிமாவைப் பார்க்கவில்லை. ஒரு வினாடிக்கு 24 பொய்கள் என்பதாக மட்டுமே சினிமாவைப் பார்க்கிறேன். ஒரு யதார்த்தத்தைத் திரையில் காட்டி அதற்குள் 2 மணி நேரம் வாழ்ந்துவிட்டு வாருங்கள் என்று சொல்கிறேன். நிஜ வாழ்க்கையிலிருக்கும் சில விஷயங்களை எடுத்துவிட்டுப் படமாக்குவதுதான் சினிமா.
நிஜ வாழ்க்கையில் இருக்கும் துப்பறிவாளர்கள் போன்று என் கதாநாயகன் இருக்க மாட்டான். ஆஜானுபாகுவாய் 6 அடிக்கு இருப்பான். அவனைப் பெரிய நாயகனாகக் காட்ட வேண்டும் என ஆசைப்படுகிறேன். விஷால் கதாபாத்திரத்துக்கு விஜய், சிம்பு, தனுஷ் ஆகியோர் எல்லாம் சரியாக இருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. என் கதாநாயகர்களை அனைவரும் நிமிர்ந்து பார்க்க வேண்டும். நேருக்கு நேர் பார்க்க வேண்டுமானால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பார்த்துவிடலாமே.
சினிமாவில் கூறப்படும் பொய்யில் பெரிய சுவை இருக்கிறது. எம்.ஜி.ஆரால் கண்டிப்பாக 100 பேரை அடிக்க முடியாது என்று பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், என்னால் முடியாததை நீங்கள் அடியுங்கள் என்று திரையில் ரசிகன் காண ஆசைப்படுகிறான். இரண்டரை மணி நேர கதையில் பார்ப்பவர்கள் திளைத்துப் போக வேண்டும் என நினைக்கிறேன்.
இதுவரை விஷால் நடித்த படங்கள் எதையுமே பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் ‘சண்டக்கோழி’ படத்தின் ஓரிரு காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அவன் எப்படி நடிப்பான், சண்டை போடுவான் எதுவுமே தெரியாது. என்னுடன் பழகியவர்களில் ரொம்ப அன்பாகவும் நேர்மையாகவும் என்னைக் குழந்தை மாதிரி கொண்டாடியவன் விஷால். விஷால் ரசிகர்களுக்கு இது முக்கியமான படம். என் படத்தை ரசிப்பவர்களுக்கும் பிடிக்கும். என்னுடைய குரங்குத் தனங்கள், காலைக் காட்டும் ஷாட் எல்லாம் வேண்டுமென்றே வைத்திருக்கிறேன். விமர்சனங்கள் நிறைய வர வேண்டும் என்பதற்கான விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளேன். ஆண்களின் உலகம் தான் படமாக இருந்தாலும், பெண்களுக்கும் பிடிக்கும். ஒரே ஒரு பாடல்தான். படத்தில் காதலே இல்லை. ஆனால், காதலைச் சொல்லியிருக்கிறேன்.
எடிட்டிங் பணி முடிந்தவுடன், படம் முடிந்துவிட்டதாகக் கருதிவிடுவேன். படம் வெளியான அன்று, மதியம் போல் உதவியாளர்களிடம் படத்தைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் எனக் கேட்பேன். அடுத்த படத்துக்குள் சென்றுவிடுவேன் அவ்வளவுதான்.
அப்படிச் சொன்னால், அதற்கொரு விமர்சனம் ஆரம்பிக்கும். சரியான விமர்சகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் பெரிய பொய். அதற்குள் போக விரும்பவில்லை. அனைவருமே விமர்சனம் செய்வதற்கான இடமாக இணையம் வந்துவிட்டது. எங்கே சென்றாலும் சினிமாவை விமர்சிப்பவர்களைப் பார்க்கிறேன்.
‘அஞ்சாதே’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பற்றியெல்லாம் நிறையப் பேர் விமர்சித்துள்ளார்கள். அதைப் படிப்பதில் ஆர்வமில்லை. அவர்களுடைய அறிவிலிருந்து ஒரு நியாயம் சொல்கிறார்கள். அதெல்லாம் எனக்குத் தெரிந்தது தானே.
‘நந்தலாலா’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ மாதிரியான படங்களை எல்லாம் கீழே தானே இவர்கள் தூக்கிப் போட்டார்கள். தமிழ் மக்களுக்கு நல்ல கதை சொல்லியாகவும் கதை ஊடகமாகவும் என் படங்கள் இருந்தால் போதும் என நினைக் கிறேன்.
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பத்திரிகை விமர்சனமும் சரியில்லை என்பது போல் தெரிகிறதே...
உலகத்தில் வரும் அனைத்து விமர்சனங்களுமே ரசிகர்கள் விமர்சனமாகிவிட்டது. திரையுலகைப் பற்றிப் படித்து, இலக்கியங்கள் படித்து விமர்சனங்கள் செய்பவர்கள் ரொம்ப குறைந்துவிட்டார்கள். இதையெல்லாம் படித்து விமர்சனம் செய்யும்போது, சில இடங்களில் சினிமாக்காரர்களைவிட விமர்சகர்கள் மேலே சென்றுவிடுகிறார்கள். இங்குள்ள விமர்சனங்கள் எதுவுமே என் அறிவைத் தூண்டவில்லை.
தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் வேலையைப் பார்க்கலாம். அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். நல்ல படமெடுத்தால் மக்களால் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட்டுவிடும்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து விட்டீர்களே?
250 தயாரிப்பாளர்கள் என்னை நம்பி வாக்களித்ததே பெரிய விஷயம். எனக்கு ஓட்டு போடும் அளவுக்குத் தகுதி இருப்பதாக நினைக்கவில்லை. எனக்கு ஏன் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என நினைக்கிறீர்கள். எனக்கென்ன இமேஜ் இருக்கிறது? ஆனால்
இப்போதும் அடிக்கடி தயாரிப்பாளர் சங்கம் செல்கிறேன். தர்மமாகத் தயாரிப்பாளர் சங்கம் நடந்து கொண்டிருக்கிறது. பலமுறை இவர்கள் பதவிக்கு வந்தால், தமிழ் சினிமாவை முழுமையாக மாற்றி நல்வழிப்படுத்திவிடுவார்கள்.
படம் எடுப்பது எளிதாக இருக்கிறது. ஆனால், வெளியிடுவது கடினமாகி விட்டது...
தமிழ் சினிமா அதலபாதளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. சில படங்கள் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ராமின் ‘தரமணி’நன்றாக இருக்கிறது என அனைவரும் சொன்னார்கள். ஒரு புதிய படம் வந்தவுடன், ஓடிக்கொண்டிருந்த நல்ல படத்தை எடுத்துவிட்டார்கள். இதைக் கேட்டால் நிறையப் பணம் கொடுத்துள்ளோம் என்று நியாயம் சொல்வார்கள். ஒரு குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு குழந்தையைக் கொல்வது என்ன தர்மம்?
இன்றைக்கு படம் எடுக்க வேண்டும் என்று வருபவர்களை மிகவும் கவனமாக இருங்கள் என்று சொல்கிறேன்.