இந்து டாக்கீஸ்

நிருபர் டைரி: ‘பல்ஸ்’ தெரிந்த ரஜினி

ஸ்கிரீனன்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது அருணாசலம். அதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது 30 நாட்களில் ரஜினி தனது பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டு, ஹோட்டலைக் காலி செய்யும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர் சுந்தர்.சி

திடீரென்று ரஜினி, “சுந்தர்.. நான் அறையில் படுத்திருக்கிறேன். அந்த ஹோட்டலின் மேலாளர் வந்து என்னை எழுப்பி வெளியேபோங்கள்” என்று சொல்வது மாதிரி வைத்தால் எப்படியிருக்கும் என்று கேட்டிருக்கிறார். "ஸ்டார் ஹோட்டலில் யாருமே அப்படிச் சொல்லமாட்டார்கள். படத்தில் தவறாகத் தெரியும் சார்" என்று பதிலளித்திருக்கிறார் சுந்தர்.சி.

"இந்த இடத்தில் நீங்கள் உணர்வுபூர்வமான காட்சியாகப் பாருங்கள், லாஜிக் எல்லாம் பார்க்காதீர்கள்" என்று ரஜினி தெரிவித்திருக்கிறார். மேலும், “மேலாளர் வந்து என்னை எழுப்ப, நான் சோகமாக நடந்து வருவது போல் படமாக்குங்கள். உங்களிடம் யாராவது எப்படி இது சாத்தியம் என்று கேட்கட்டும். நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்” என்று ரஜினி கூறியுள்ளார்.

ரஜினி சார் சொல்கிறாரே என்று சுந்தர்.சியும் படமாக்கி இருக்கிறார். பின்னணியில் ‘தலைமகனே கலங்காதே’ என்ற பாடலோடு அக்காட்சி படத்தில் இடம்பெற்றது. தயாரிப்பாளருக்குத் திரையிட்டுக் காட்டியதிலிருந்து இப்போது வரையும் யாருமே அதைப்பற்றி கேட்டதில்லை. லாஜிக் பற்றிய ஒரு கேள்வியை அவரிடம் கேட்டபோது இந்தச் சம்வத்தை சுந்தர்.சி கூறினார். மேலும் அப்போது முதல் கதையோட்டம் வலுவாக இருக்கும் பட்சத்தில் யாருமே லாஜிக்கை பார்க்கமாட்டார்கள் என்ற நிலை பாட்டுடன் தன் படங்களுக்குத் திரைக்கதை அமைத்து வருகிறார்.

அருணாசலம் படத்தில் ஒரு காட்சி. ஊருக்குப் புறப்படப் பேருந்தில் ஏறி அமர்ந்து இருப்பார் ரஜினி. அப்போது எங்கிருந்தோ வரும் குரங்கு ஒன்று கழுத்தில் அவர் அணிந்திருக்கும் ருத்ராட்ச மாலையைப் பறித்துக்கொண்டு ஓடும். அதை பின்தொடர்ந்து செல்வார் ரஜினி. அப்போதுதான் அவரது பின்னணி தெரியவந்து வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். அந்த காட்சியில் ரஜினியுடன் நடித்த அந்தக் குரங்கின் பெயர் ராமு. பல படங்களில் நடித்திருந்த அந்தக் குரங்கு 33 வயதில் சமீபத்தில் காலமானது.

SCROLL FOR NEXT