இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: நெருப்புடா

செய்திப்பிரிவு

சிறு வயதில் இருந்தே, தீயணைப்பு வீரர் ஆகும் கனவோடு வளர்கிறார் விக்ரம் பிரபு. அவரது 4 நண்பர்களும் அப்படியே. சொந்தமாக தீயணைப்பு வண்டியை வைத்துக்கொண்டு, எங்கு தீப்பிடித்ததாக தகவல் கிடைத்தாலும் உடனே ஓடிச்சென்று அணைக்கின்றனர். இதை வெகுவாகப் பாராட்டும் தீயணைப்பு அதிகாரி நாகிநீடு, இவர்களுக்கு தீயணைப்புத் துறையில் வேலை வாங்கித்தர விரும்புகிறார். கூடவே, நாகிநீடுவின் மகளான நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு மீது காதலும் மலர்கிறது. இந்நிலையில் விக்ரம் பிரபுவின் நண்பர் வருண், எதேச்சையாக ஒரு ரவுடியுடன் மோதுகிறார். அதில், ரவுடி இறக்க, விக்ரம் பிரபு அன் டீம் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அவர்களது கனவு, காதல் நிறைவேறியதா? என்பது கதை.

ஆக்சன் பின்னணியில் காதல், பாசம், சேவை மனப்பான்மை என்று சுழலும் திரைக்கதை. தீயணைப்பு வீரர்களின் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை முதல் காட்சியில் அழகாகச் சொல்லிவிடுகிறார் அறிமுக இயக்குநர் அசோக் குமார். பற்றியெரியும் குடிசைகளில் இருந்து குழந்தைகள், முதியவர்களை விக்ரம் பிரபு காப்பாற்றும்போது பரபரப்பும், பதற்றமும் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. ஆனால், அந்தக் காட்சியோடு, பரபரப்பும், சுவாரசியமும் நம்மிடம் இருந்து விடைபெற்றுவிடுகின்றன.

தனது உயரம், ஆக்சனால் பாத்திர வார்ப்புக்குச் சரியாகப் பொருந்துகிறார் விக்ரம் பிரபு. நண்பர்களுக்காக வாழ்வது, ரவுடியுடன் நெஞ்சை நிமிர்த்தி மோதுவது, பார்த்தவுடன் காதல் நெருப்பு பற்றிக்கொள்வது என ஸ்கோர் செய்கிறார். மருத்துவ மாணவியாக வரும் நிக்கி கல்ராணிக்குக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையை இயக்குநர் கொடுக்கவில்லை. விக்ரம் பிரபுவின் அப்பா பொன்வண்ணன், கழிவுநீர் அகற்றும் தொழிலாளியாக சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். அவர்கள் இடையிலான தந்தை – மகன் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.

படத்தின் க்ளைமாக்ஸில் திருநங்கையாக வந்து வெடிக்கிறார் சங்கீதா. தோற்றம், பாவனை, உடல்மொழியில் பாத்திரத்துக்கு நன்கு பொருந்தி நடித்திருக்கிறார். ஆனால், அத்தனை ரவுடிகளையும் ஓரே இடத்தில் கொலை செய்வது நம்பும்படி இல்லை. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இன்னும் எத்தனை காலத்துக்குதான் மொக்கை காமெடிகளை செய்யப்போகிறாரோ தெரியவில்லை. ‘ஆடுகளம்’ நரேன் விரைப்பான போலீஸ் கமிஷனராக வருகிறார். ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்யவேண்டும் என முடிவெடுக்கும் அவர், ஒரு அறைக்குள் அமர்ந்துகொண்டு வெறும் பேச்சளவிலேயே இதைப் பேசிக் கடத்துவது, படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. திடீர் மோதலில் இறக்கும் ரவுடி, அவருக்காக துடிதுடிக்கும் மற்றொரு ரவுடி என்று படத்தில் திருப்பம் கொடுக்க முயற்சித்து உள்ளே வரும் புதிய கதாபாத்திரங்கள் அனைத்தும் சுவாரசியமின்றி நகர்வது பெரிய பலவீனம்.

ஷான் ரோல்டனின் இசையில், ‘ஆலங்கிளியே..’ பாடல் தாளம் போட வைக்கிறது. தீ ஜுவாலையை உஷ்ணம் குறையாது படம்பிடித்துள்ளார்ஆர்.டி. ராஜசேகர். சிலேட்டர்புரம் ஏரியா பின்னணியில் ஆங்கிலேயர் கால மணிக்கூண்டு கோபுரத்தை வடிவமைத்த கலை இயக்குநர் எம்.பிரபாகரனின் உழைப்பும், ரசனையும் அழகு.

‘பற்றியெரிகிற நெருப்பு என்னத்த வேணாலும் எடுத்துட்டுப் போகலாம். ஆனா ஒரு உயிரைக்கூட எடுத்துக்கிட்டுப் போக விடமாட்டோம்’ என்று நெருப்போடு பயணிக்கும் இளைஞர்களின் வேகம், அரைமணி நேரத்துக்கு ஒருமுறை வலிய திணிக்கப்பட்ட ட்விஸ்ட்களால் வேகம் இழந்து நகர்கிறது. தலைப்பில் இருந்த ‘நெருப்பை’ திரைக்கதையே தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டது!

SCROLL FOR NEXT