‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். ‘பிரேமம்’ படத்துக்குப் பின்னர் மலையாளத்தில் பிருத்விராஜ் - நயன்தாரா நடித்த ‘கோல்டு’ என்கிற படத்தை இயக்கினார். தற்போது நேரடித் தமிழ்ப் படம் ஒன்றை இயக்க கோலிவுட் வந்துள்ளார்.
இப்படத்தை ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விஷேசம்’ உள்ளிட்ட பல படங்களைக் கொடுத்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகும் இப்படத்துக்கான நடிகர்கள் தேர்வு சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. அதற்கு ஒரே நாளில் ஆயிரம் பேர் ஆர்வமுடன் குவிந்தனர்.
மூன்றாம் முறைக் கூட்டணி! - ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ படங்களின் மூலம் இயக்குநர் எம். மணிகண்டன் - விஜய்சேதுபதி கூட்டணி மிகவும் பேசப்பட்டது. தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியின் தயாரிப்பில் உருவாகும் இணையத் தொடரில் இக்கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்திருக்கிறது. விஜய்சேதுபதி தமிழ் இணையத் தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை.
இத்தொடரின் படப்பிடிப்பு மதுரை அருகேயுள்ள உசிலம்பட்டியில் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. 7சி எண்டெர்டெயிண்மெண்ட் சார்பாக பி. ஆறுமுகக்குமார் தயாரிக்கும் இத்தொடருக்கான ஒளிப்பதிவை சண்முகசுந்தரம் கவனிக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைக்க இருக்கிறார்.