‘இருமுகன்’ வெற்றிக்குப் பிறகு முழுவீச்சில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் விக்ரம். மீண்டும் ‘இருமுகன்’ தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் உடன் கரம் கோத்திருக்கிறார். இது ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘சாமி 2’ படத்துக்காக. விக்ரமுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் ஈர்ப்பான நட்சத்திரங்களில் இன்னொருவர் பாபி சிம்ஹா. விக்ரமுக்கு இவர்தான் வில்லன். நகைச்சுவைக்கு சூரி. ‘சிங்கம்’ படத்தில் நடித்த பிரபு, இதிலும் இருக்கிறார். இம்முறை தேவி ஸ்ரீபிரசாத்துடன் இசைக் கூட்டணி அமைத்திருக்கும் இயக்குநர் ஹரி, தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியனுடன் இந்தப் படத்திலும் பயணிக்கிறார். டெல்லியில் தொடங்கி திருநெல்வேலிவரை இந்தியாவின் முக்கியமான ஏழு நகரங்களில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தில் ஒரே மூச்சில் படத்தை முடிக்க இருக்கிறார் இயக்குநர்.
இதற்கிடையில் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா ஜோடி நடித்து முடிக்க இருக்கும் ‘ஸ்கெட்ச்’ படமும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்து முடித்துள்ள படம் ‘அறம்’. ஆயுதபூஜைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தை தற்போது தீபாவளிப் பந்தயத்தில் இறக்கிவிட இருப்பதாகக் கூறுகிறார்கள். விஜய்யின் ‘மெர்சல்’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’, சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஆகிய படங்களோடு ‘அறம்’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘தேவி’. இந்தக் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. தற்போது சாய் பல்லவி நடிப்பில் ‘கரு’ என்ற படத்தை இயக்கிவரும் விஜய், அடுத்து பிரபு தேவாவை இயக்க இருக்கிறார் என்கிறார்கள். இதற்கிடையில் நடிகர் சங்கக் கட்டிட நிதிக்குப் படத்தின் முழு லாபத்தையும் கொடுப்பதாகக் கூறி, கார்த்தி, விஷால் இணைந்து நடிக்கும்‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தை பிரபு தேவா இயக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது அந்தப் படத்தை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.