“நான் வெறுமனே எனது வாழ்க்கையின் மிச்ச நாட்களை கழிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு நாளையும் வாழ விரும்புகிறேன்” என்று 28 வயதில் போலியோ தாக்குதலுக்குள்ளாகி மூன்று மாதங்களில் மரணச்சீட்டு அளிக்கப்பட்ட நாயகன் ராபின் கேவண்டிஸ் சொல்கிறான். மருத்துவர்கள் ஊகத்தை மீறி, உலகம் முழுக்கவுள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பேசும் வழக்கறிஞராக வரலாற்றில் இடம்பெறும் அவன் பிரிட்டனிலேயே அதிக காலம் வாழ்ந்த போலியோ சாதனையாளனாகவும் ஆகிறான். கழுத்துக்குக் கீழே உடல் செயலிழந்த அவனை, அவனுடைய மனைவி டயானாவின் காதல்தான் வாழ வைக்கும். டயானா கொடுக்கும் சுவாசத்தின் கதைதான் ‘ப்ரீத்’.
மெல் கிப்சனின் ‘ஹேக்ஸா ரிட்ஜ்’, மார்டின் ஸ்கார்சசியின் ‘சைலன்ஸ்’ படங்களில் நடித்த ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆண்ட்ரூ கர்பீல்ட்தான் இந்தப் படத்தின் நாயகன். டயானாவாக நடித்திருப்பவர் க்ளேர் பாய்.
படத்தின் பெரும்பான்மையாக காட்சிகளில் ராபின் கேவன்டிஷ் கதாபாத்திரம் இயக்கமேயின்றி சக்கர நாற்காலியில் இருக்க வேண்டும். “சக்கர நாற்காலியிலேயே இருந்தாலும் ராபினுக்கும் டயானாவுக்கும் இடையிலிருக்கும் ரொமாண்டிக்கான ஈர்ப்பையும் நாங்கள் காண்பிக்க வேண்டும். டயானா அவனது ஆத்மசினேகிதி மட்டுமல்ல. வெளியுலகத்துக்கான ஒரே தொடர்புப் பாலம். அதனால் உணர்வுரீதியாக அவள் மேல் ராபின் வைத்துள்ள பிணைப்பைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதை நிகழ்த்த வேண்டும். அந்தச் சாதனையை அற்புதமாகச் செய்துள்ளார் ஆண்ட்ரூ கர்பீல்ட்” என்கிறார் அறிமுக இயக்குநர் ஆண்டி செர்கிஸ்.