வி
ண்வெளி அறிவியல் புனைவை மையமாகக் கொண்ட ஹாலிவுட் படம் என்றாலே அதன் பிரம்மாண்டம் முதுகைத் தண்டை சில்லிட வைக்கும். கிராஃபிக்ஸை முழுவீச்சில் பயன்படுத்தத் தொடங்கிய 80-களின் சாதனையாகப் பார்க்கப்பட்ட ‘ஸ்டார் வார்ஸ்’ முதல் சமீபத்தில் வெளியான ‘ஏலியன் கோவணன்ட்’ எனும் ஹாலிவுட் குப்பை வரை பணத்தை மில்லியன்களில் கொட்டி பில்லியன்களில் அள்ளுவார்கள். தற்போது ‘ஜியோஸ்ட்ராம்’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘மூன் 44’, ‘இண்டிபென்டன்ஸ் டே’ போன்ற விண்வெளி அறிவியல் புனைவுப் படங்களை இயக்கிப் புகழ்பெற்ற டீன் டேவ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்புக்கும் தயாரிப்பில் பிரம்மாண்டத்துக்கும் பஞ்சமே இல்லாமல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் டீன் டேவ்.
பூமியை இயக்கும் செயற்கைக்கோள்களால் எதிர்காலத்தில் உலகுக்கு என்ன ஆபத்து வரும் என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. பருவநிலையைக் கட்டுப்படுத்தும் ஒரு செயற்கைக்கோளில் திடீரெனக் கோளாறு ஏற்படுகிறது. இதன்பிறகு அந்தச் செயற்கைக்கோளிலிருந்து புறப்படும் சிறு சிறு துண்டுகள், பூமியின் மீது விழுந்து இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால் அந்தச் செயற்கைக்கோளின் இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபர் உத்தரவிடுகிறார். விண்வெளி வீரராக வரும் நாயகன் ஜெரார்ட் பட்லரும் அவரது டீமும் இதற்காகக் களமிறங்குகிறது. விண்வெளிக்குப் பறக்கும் அவர்களுக்கு அங்கே மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டு, உலகைக் காப்பாற்ற என்ன செய்கிறார்கள் என்பதைப் படு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்களாம்.
இயற்கைப் பேரழிவுக் காட்சிகளை இன்றைய அதிநவீன கிராஃபிக்ஸ் நுட்பங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார்களாம். வானுயரக் கட்டிடங்களை சுனாமி விழுங்கும் இப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் மூலம் கண்களை அகல விரிய வைத்திருக்கிறார் இயக்குநர். தீபாவளி தினத்திலிருந்து இரண்டு தினங்கள் தள்ளி, அக்டோபர் 20-ம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது.