இந்து டாக்கீஸ்

இரண்டு முகங்கள் நான்கு கேள்விகள்

ஆர்.சி.ஜெயந்தன்

மியா ஜார்ஜ், இஷாரா நாயர். கேரளத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கும் புத்தம்புது நாயகிகள். மோகன்லால் தொடங்கிக் குஞ்சக்க போபன் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மலையாளத்தில் பத்துப் படங்களை முடித்துவிட்டு ‘அமர காவியம்’ வழியாகத் தமிழுக்கு வந்திருக்கிறார் தனது வசீகரக் கண்களில் கைது வாரண்டை ஏந்தியிருக்கும் மியா.

இஷாராவைப் பார்த்து உஷாராகியிருக்கிறார்கள் களத்தில் நிற்கும் கதாநாயகிகள். ‘வெண்மேகம்’ படத்தில் அறிமுகமானாலும் இரண்டாவது படமான ‘பப்பாளி’ முந்திக்கொண்டு வெளியாகிவிட, சிம்ரன் ஜோதிகா கலவையில் கவர்ந்திழுக்கும் இஷாரா கோலிவுட்டில் நிகழ்ச்சிகளில் தோன்றினாலே குலவை பாடி வரவேற்கிறார்கள். இப்போது கையில் இரண்டு படங்கள். இருவரிடமும் கேட்கப்பட்ட ஒரே கேள்விகளுக்கு அவர்கள் தந்த க்யூட்டான பதில்கள்:

கேரளத்தில் ரொம்ப பிடிச்ச ஊர்?

மியா: சொந்த ஊர்தான் எல்லாருக்கும் பிடிச்ச ஊர். கோட்டயம் பக்கத்துல இருக்கும் பாலாதான் என்னோட சொந்த ஊர். அடுத்த வருஷம் பெத்லஹேம் போகப் பிளான் வெச்சிருக்கேன். அப்பா, அம்மா, அக்கா குடும்பத்தோட போகணும்.

இஷாரா: திருவனந்தபுரமும் பெங்களூருவும் ரொம்பப் பிடிக்கும். கொச்சின்ல இருந்தா இன்னும் ரொம்ப பிடிக்கும். அதுதான் நேட்டிவ். மாடலிங்குக்காக நான் எங்கயும் அலையல. கொச்சின்லயே நிறைய வாய்ப்புகள் வந்தது.

கதை கேட்டுத்தான் தமிழ்ல நடிச்சீங்களா?

மியா: கண்டிப்பா. எனக்குப் பெரிய ஹீரோக்கள்கூட நடிக்கணும்னு ஆசை கிடையாது. நான் நடிச்சிருக்க எல்லாப் படத்துலயும் கதையும் கேரக்டர்ஸும் பேசப்பட்டிருக்கு. ஆக்டர்ஸ் அப்புறம்தான். அமர காவியம்ல இயக்குநர் ஜீவா சங்கர் கதைய எனக்கு ஈ-மெயில் பண்ணினார். படிச்சு முடிச்சதும் இந்தப் படம்தான் தமிழ்ல எனக்கு முதல் படமா இருக்கணும்னு முடிவு பண்ணினேன்.

இஷாரா: கதையில் என்னோட கேரக்டர் மட்டும் என்னன்னு கேட்டுப்பேன். நல்ல டீம் இருந்தாலே கதையில் கோட்டை விட மாட்டாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

படப்பிடிப்புல ஷாக்கான அனுபவம்?

மியா: அமர காவியம்ல கார்த்திகா கேரக்டர் ரொம்ப போல்ட். காதலை மனசுல போட்டு ஒளிச்சு வைக்காம பளிச்சுன்னு சொல்ற கேரக்டர். ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கண்ணடிச்சா அவளைத் தப்பா பார்க்கிற சொசைட்டி நம்மளோடது. ஆனால் கார்த்திகா அதப் பத்தியெல்லாம் கவலைப்படாத ஃப்ரீ பேர்ட். என்னோட கேரக்டர் பண்ற சேட்டைகளை ஷூட் பண் ணினப்போ யூனிட்லயே பலபேர் முகத்துல அதிர்ச்சியப் பார்த்தேன். உங்களுக்கும்கூட ஷாக்கா இருக்கலாம். ஆனா படம் உங்களை சாக அடிச்சிடும். கார்த்திகாவை நீங்க மறக்க மாட்டீங்க பாருங்க.

இஷாரா: பப்பாளி படத்துல சுப்புலட்சுமி கேரக்டர். முதல்ல லவ்வர். அப்புறம் ஹவுஸ் ஒய்ஃப். ஹீரோ என்னைப் பப்பாளி பப்பாளி கூப்பிடுற மாதிரி சீன். முதல் ஷெட்யூல் படம் முடிஞ்சதும் என்ன இந்த டைரக்டர் ஒரு டைப்பான படமா எடுக்கிறாரா, நாம வசமா சிக்கிட்டமோன்னு நினைச்சேன். அப்புறம் படம் வளரவளர எனக்கு டைரக்டர் மேல மரியாதை வந்திடுச்சி. இது யூத் எல்லோருக்கும் ஒரு ஹார்லிக்ஸ் ஸ்டோரி. ஒரு காட்சியில் இயக்குநர் என்னை வெட்கப்படச் சொன்னார். எனக்கு வெட்கப்படத் தெரியல. கோபமாகி மைக்கைத் தூக்கி தரையில அடிச்சிட்டு போயிட்டார். வயிறு கலங்கிடுச்சு.

தினசரி மறக்காமல் செய்வது?

மியா: டான்ஸ் பிராக்டீஸ். பரதம் எனக்கு இன்னொரு ஃபிரெண்ட். தினசரி 1 மணிநேரம் ஆடலேன்னா அவ்வளவுதான். வேற யோகா, ஜிம் ஓர்க் அவுட் எதுவும் தேவைப்படாது. அப்புறம் மார்னிங் அண்ட் நைட் பிரேயர்ஸ்.

இஷாரா: டெய்லி ஒரு மணிநேரம் ஒர்க் அவுட் பண்றேன். ஜிம் இருக்கிற ஹோட்டல்தான் தங்குவேன். ஜிம் இல்லேன்னா வார்ம் அப்ஸ் அப்புறம் ப்ரீத் எக்ஸர்சைஸ்.

SCROLL FOR NEXT