மோகன்லால், மம்மூட்டி எனக் கதாநாயக பிம்பப் படங்களுக்கு மத்தியில் வெளியாகி, கதைக்காக எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது ‘ஞண்டுகளுட நாட்டில் ஒரிடவேள’ மலையாளத் திரைப்படம்.
மலையாள எழுத்தாளர் சந்திரமதி தனக்கு ஏற்பட்ட புற்றுநோய்ப் பாதிப்பைக் குறித்து எழுதிய அனுபவக் கட்டுரைத் தொகுப்புக்கான தலைப்பை அனுமதி வாங்கிப் படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். ‘நண்டுகளின் ஊரில் ஒரு இடைவேளை’ என்பதுதான் பொருள். இதிலிருந்து இந்தப் படம் புற்றுநோயை மையமாகக் கொண்டது என்பது தெளிவாகிறது.
மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் அறிமுகமான
‘பன்னீர் புஷ்பங்கள்’ சாந்தி கிருஷ்ணா, இந்தப் படத்தில் மையக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். மலையாளத்தில் அவர் 21 வருடங்களுக்குப் பிறகு நடிக்கும் படம் இது. லால் அவருடைய கணவராக நடித்துள்ளார்.
சாந்தி கிருஷ்ணா தீர்க்கமான பெண்ணாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நேர் எதிரானது லாலின் கதாபாத்திரம். அவர், புதியதை மட்டுமல்ல, பழையதையும் கண்டும் அஞ்சக்கூடியவர். அவரது இந்தத் தன்மை குறித்துக் கேள்வி வரும்போதெல்லாம், “என் குடும்பமே கோழைத்தனத்துக்குப் பேர்போனது, தெரியுமா உனக்கு?” எனப் பெருமையாகச் சொல்கிறார்.
ஒரு சாதாரண காலையில் வீட்டின் முற்றத்தில் செய்தித்தாள் விழுவதைப் போல் அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் சம்பவம் லேசாகத் தலை தூக்குகிறது. சாந்தி கிருஷ்ணா குளிக்கும்போது தன் உடலில் சிறிய கட்டி ஒன்றை உணர்கிறார். அது என்னவாக இருக்கும் என்ற சிந்தனை அவரைப் பீடித்துக்கொள்கிறது. அவரது வழக்கமான நடவடிக்கைகள் தடம் புரள்கின்றன. தைரியமில்லாத தன் கணவனிடம் இதை எப்படிச் சொல்ல எனத் தயங்குகிறார். ஆனால், ஒரு வழியாகச் சொல்லிவிடுகிறார். அத்துடன் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டிய பொறுப்பையும் ஒப்படைத்துவிடுகிறார்.
நோய்ப் பாதிப்பைப் பற்றிய படங்கள் பெரும்பாலும் சோக நாடகமாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் படம் ‘மலையாள மேடை நகைச்சுவை’ அரங்கேற்றத்தைப் போல் வெடிச் சிரிப்புகளால் பின்னப்பட்டுள்ளது.
சாந்தி கிருஷ்ணா – லால் தம்பதியினரின் மகனாக, லண்டன் வாசியாக நிவின் பாலி நடித்திருக்கிறார். அவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும்கூட. எப்போதும் லேய்ஸ் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொறுப்பற்ற இளைஞன் வேடம் அவருக்கு. தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். கல்யாணம் என்னும் இன்ப அதிர்ச்சி கொடுக்கத்தான் தன்னை லண்டனிலிருந்து அவசரமாக தன் அம்மா வரச் சொல்லியிருக்கிறார் எனக் கற்பனையில் மிதக்கிறார் நிவின். அவரது தங்கைக்கு செவ்ரோலேட் பீட் வாங்க வேண்டும். இதுபோல பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயங்கள், ஆசைகள். இதற்கிடையில் நோய் பற்றிப் பிள்ளைகளிடம் எப்படிச் சொல்வது என லால் திணறிப்போகிறார். தத்துவங்களையும் வானத்து நட்சத்திரங்களையெல்லாம் துணைக்கு அழைத்துப் பார்க்கிறார். ஆனால், அவரது சேட்டைக்காரப் பிள்ளைகள் எல்லாவற்றையும் விளையாட்டாக்கிவிடுகிறார்கள்.
‘பிரேமம்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனின் பள்ளித் தோழனாக வரும் அல்தாஃப் சலீம்தான் இந்தப் படத்தின் திரைக்கதையும் இயக்கமும். புத்திசாலித்தனமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை கர்த்தாவான ஸ்ரீனிவாசனை நினைவுபடுத்தும் வகையிலான திரைக்கதையமைப்பு. யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாத அல்தாஃபுக்கு, முகேஷ் முரளீதரனின் ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது. முகேஷ், ராஜீவ் ரவியிடமும் தொழில் பயின்றவர்.
படத்தின் முன்பகுதி, உணர்ச்சிகரமான விஷயத்தை நகைச்சுவையாகச் சொல்லியதற்கு நேர் எதிராக, அதன் இறுதிப் பகுதி உணர்ச்சியின் வசமாகிவிட்டது. பொறுப்பற்ற, சுயநலமுடைய பிள்ளைகளுக்குத் திடீரெனப் பொறுப்பு வந்துவிடுகிறது. அதன் காரணத்தைப் படம் விளக்கவில்லை. நிவினுக்கு ஒரு காதல் வேறு. அந்தக் காட்சிகள் மிகப் பலவீனமானவை. அந்தப் கதாபாத்திரத்துக்கான தேவையும் இல்லை. இவை எல்லாவற்றையும் மீறி, குடும்பத்துக்குள் பிள்ளைகளிடம் நெருக்கமானவர்களின் மரணத்தை, கொடூர நோய் பாதிப்பை, விபரீதத்தைப் பரிமாறிக்கொள்வதில் நமக்கு இருக்கும் மனத் தடையை இந்தப் படம் கேள்விக்குள்ளாக்குகிறது. அப்படியான ஒரு விபரீதம் சம்பவிக்கும்போது அதைச் சாதகமாக எதிர்கொள்வதைப் பற்றியும் விவரிக்கிறது. அந்த விதத்தில் இந்தப் படம் வரவேற்கப்பட வேண்டியது.