பெண்களை அடிபணியவைத்து ஆட்டிப்படைக்கும் குடும்ப அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் முயற்சி ‘மகளிர் மட்டும்’.
1970-களில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா ஆகிய 3 பேரும் அடிமைத்தனத்தை விரும்பாமல் ஆட்டம், பாட்டம் என்று சுதந்திரமாக இருப்பவர்கள். ரஜினி, கமல் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகும் ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்ப்பதற்காக ஹாஸ்டல் சுவர் ஏறிக் குதித்து செல்கின்றனர். திரையரங்குக்குள் செல்வதற்குள் ஹாஸ்டலில் இருந்து ஆட்கள் தேடி வந்து விடுகின்றனர். பின்னர், மூன்று தோழிகளும் திசைக்கொன்றாகப் பிரிகின்றனர். தொடர்பின்றி அதோடு முடிகிறது அவர்களது நட்பு. இளைப்பாறக்கூட நேரமின்றி குடும்ப சுமைகள் அவர்களை அழுத்துகின்றன.
ஊர்வசியின் வருங்கால மருமகளான ஜோதிகா, ஃபேஸ்புக் மூலம் அவர்கள் மூவரையும் சேர்த்து வைக்கிறார். அவர்களது அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுவித்து ஜாலி ட்ரிப் அழைத்துச் செல்கிறார். இது அவர்களது வாழ்வில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது மீதிக் கதை.
ஆவணப்பட இயக்குநர், சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துவைக்கும் சமூகப் போராளி, துணிச்சலாக முடிவெடுப்பவர் என நடுத்தர வயதுப் பெண்களின் சுதந்திர தேவியாக வசீகரிக்கிறார் ஜோதிகா. தாஜ்மஹாலுக்கு கொடுக்கும் விளக்கம் கிளாஸ்!
‘வீட்ல நாங்க என்ன சும்மாவா இருக்கோம்’ என்று படத்தில் வரும் டயலாக்குக்கு ஏகப்பட்ட கைதட்டல்.
வெகுளித்தனமான நடிப்பதில் ஊர்வசியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. கேமராவை மறந்து கதாபாத்திரத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கிறார். ஜோதிகாவை ஊர்வசியின் மகளாகக் காட்டாமல் மருமகளாக வடிவமைத்ததற்கு பிரம்மாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால், ஜோதிகா கதாபாத்திரத்தைத் தூக்கிப்பிடிப்பதற்காக ஒட்டுமொத்தமாக மற்ற அனைவரையும் ஏன் அடிமுட்டாளாகக் காட்ட வேண்டும்?
சரண்யாவின் கணவனாக வரும் லிவிங்ஸ்டன் குடிகார கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ‘நீ குடிக்குற, நான் என்ன செய்யணும்?’ என சரண்யா கேட்கும் காட்சியில் பெண்ணினத்தின் வலி உடைந்து தெறிக்கிறது. ‘‘அந்த ஆற்றையும், சாமியையும் யாரும் மதிக்கல, பராமரிக்கல’’, ‘‘கல்யாணமே ஒரு மாயாஜால ஜெயில்’’ என ஜோதிகா சில இடங்களில் வகுப்பெடுத்தாலும், அதையும் ரசிக்கும்படியே கடந்து போக வைக்கிறார் பிரம்மா. ‘‘பொம்பளை இருக்கிற வீட்ல சாப்பாட்டுல முடி விழத்தான் செய்யும்’’ என்று லேடி மிலிட்டரி ஆபீஸர் பேசுவது அருமை. ஆச்சரிய என்ட்ரி கொடுக்கும் மாதவனும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். வடஇந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் தோற்றம், பேச்சுமொழி, நடை, பாவனையில் நாசரும், அவரது மகன்களாக வரும் பவேல் நாகநீதன், கோகுல்நாத்தும் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள்.
பிளாஷ்பேக்கை ஒருங்கிணைத்து சொல்லாமல், ஒவ்வொருவர் கோணத்திலும் மீண்டும் மீண்டும் காட்டுவது சோர்வை ஏற்படுத்துகிறது. மிஷனரி ஹாஸ்டல் பெண் நிர்வாகி, யாரும் பார்க்காதபோது டை அடித்துக்கொள்வது, மூன்று தோழிகளும் சேர்ந்து பாவ மன்னிப்பு வழங்குவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். கணவன் என்றாலே மோசமானவர்தான் எனக் காட்டிய விதத்தையும் சிறிது குறைத்திருக்கலாம்.
தோழிகள் மூவரும் இணையும் வரை பிளாஷ்பேக் படத்துக்கு பலம். அந்தக் காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை, காட்சிகளோடு இழைகிறது. இரண்டாம் பாதியில் கானகத்தை அழகாக காட்டுகிறது மணிகண்டனின் ஒளிப்பதிவு.
கருப்பு - வெள்ளை காலத்தின் இறுதிக்கட்டத்தில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘அவள் அப்படித்தான்’. அதை சித்தரிக்கும் வகையில் காட்டிய காட்சிகள், திரையரங்கில் டிக்கெட்டை கிழித்துப் போட்டு மகிழ்வது, வாணவேடிக்கை, பட்டாசு சத்தம் கேட்பது ஆகியவை தத்ரூபம்!
‘36 வயதினிலே’ போன்ற ஜோதிகாவை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு சிறிது ஏமாற்றம்.
கழுத்து நிறைய நகைகளோடு, நடுராத்தியில் தனியாக நடந்து வருவது மட்டுமே அல்ல பெண் சுதந்திரம்; மனதுக்குப் பிடித்தவனை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதும்தான் என்னும் தத்துவத்தை உரக்கக் கூறும் மகளிர் மட்டும்.. மகளிர்க்கு மட்டுமல்ல; அனைவருக்குமானது!