இந்து டாக்கீஸ்

16 வயதினிலே - 40 ஆண்டுகள்: என்றும் வாழும் ‘மயில்!’

இந்திரா செளந்தர்ராஜன்

டந்த 2001-ம் ஆண்டு ‘ஆளவந்தான்’ வெளியானது. அதில் கமல் ஹாசன் ஒரு காட்சியில் நிர்வாணமாகத் தோன்றுவது போன்ற ஓர் ஒளிப்படம், அப்போதைய வார இதழ்களில் வெளியானது. அதைப் பார்த்த அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கமலைத் திட்டித் தீர்த்தார். அதைத் தவிர பெரிய சலசலப்புகள் ஏதுமில்லை.

அந்தப் படம் வெளியாவதற்குச் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு, ‘16 வயதினிலே’ வெளியானது. அதில் கமல் கோவணத்துடன் தோன்றினார். படம் பார்த்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. ஒரு முன்னணிக் கதாநாயகன், மூக்குத்தி போட்டுக்கொண்டு, வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு தோன்றினால் அதிர்ச்சி ஏற்படாமல் என்ன செய்யும்?

ஆனால் அந்த அதிர்ச்சிதான் அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. தமிழ்த் திரைப்பட உலகில் ‘16 வயதினிலே’ ஒரு மைல் கல். ‘திரைப்படம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும்’ என்ற கற்பிதங்களை உடைத்த படம்.

இன்று, படத்தில் நிர்வாண நடிப்பு சாதாரணம். அன்று, கோவணம் கட்டிக் கொண்டு நடிப்பதே பெரிய விஷயம். ஒரு தலைமுறை கலாச்சார மாற்றத்தை, சிந்தனைப் போக்கை, அது சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் ‘சப்பாணி’ கமலுக்கு இருந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும், ‘ஆளவந்தான்’.. ‘நந்து’ கமலுக்கு இருக்கவில்லை!

இந்தியாவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில், ஆசிரியராகக் கனவு காணும் ஒரு பெண்ணின் வாழ்க்கைதான் படத்தின் ஒரு வரிக் கதை. அதை, கிராம வாழ்க்கையின் உயிர்ப்புடன் சொன்னதில் வெற்றி பெற்றார் அன்றைய புதுவரவு இயக்குநர் பாரதிராஜா. அவரே கதை எழுதி, அவரே இயக்கிய மிகச் சில படங்களில், இந்தப் படம் மிகவும் முக்கியமான படம்.

‘சப்பாணி’, ‘மயில்’, ‘பரட்டையன்’ என்று படத்தின் டைட்டிலில் முக்கியமான கதாபாத்திரங்களின் கதாபாத்திரத்தின் பெயரையே ஓடவிட்டதிலிருந்து அந்தப் படத்தின் புதுமை தொடங்குகிறது. ‘சப்பாணி’ என்ற கேரக்டரே அன்றைக்குப் புதுமைதான். கமல் கோமண உடையில் தோன்றுவது ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றால், ரஜினியின் முகத்தில் ஸ்ரீதேவி துப்பும் காட்சி இன்னொரு வித அதிர்ச்சி.

இந்தப் படம், கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோருக்குத் தங்களின் ‘கரியரில்’ ஒரு லிஃப்ட் ஆகப் பயன்பட்டது என்றால், சிலருக்கு ‘லான்ச் பேட்’ ஆக உதவியது. குறிப்பாக, கவுண்டமணிக்கு. இவர் ‘ராமன் எத்தனை ராமனடி’ உட்பட துணை நடிகராகப் பல கறுப்புவெள்ளைப் படங்களில் தலைகாட்டியிருந்தாலும் இந்தப் படத்தில் ‘கெளண்டன் மணி’யாக அறிமுகமானார். பாராதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தப் படத்தில் ஜொலிக்காமல் போன ஒரு கதாபாத்திரம் சத்தியஜித்தான். ‘மைல்’, ‘மைல்’ என்று அழைத்த அந்த டாக்டரை பிறகு எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை.

பி.எஸ்.நிவாஸின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் இசையும் படத்தை வேறொரு இடத்துக்கு எடுத்துச் சென்றன. ‘செந்தூரப்பூவே’ பாடலுக்காகப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, தேசிய விருது வென்றார். ஆனால், அந்த ஆண்டில் தமிழின் சிறந்தபட விருது யாருமே பார்த்திராத ‘அக்ரஹாரத்தில் கழுதை’க்குத்தான் வழங்கப்பட்டது. செந்தூரப்பூவே பாடலின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், பாடலின் ஆரம்பத்தில் சூரியன் அஸ்தமிக்கும் பின்னணியில் ஸ்ரீதேவியை ‘ஸ்லோ மோஷனில்’ ஓடவிட்டு, ‘சில் அவுட்’டாகப் படம் பிடித்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில் ‘ஸ்லோ மோஷன்’ காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவுக்கு அந்தப் படத்தின் பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை. எனவே, ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி, படம் பிடித்திருப்பார்கள். பார்க்கும் நமக்கு, ‘ஸ்லோ மோஷனில்’ ஸ்ரீதேவி ஓடுவது போலத் தெரியும். இந்தத் தகவலை கமலே மேடை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

முதலில் இந்தப் படத்தை ‘மயில்’ என்ற தலைப்பில், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலமாகக் கறுப்பு வெள்ளையில் எடுக்க நினைத்திருந்தார் பாரதிராஜா. ஆனால் கடைசி நேரத்தில் அந்தக் கழகம் கைவிரித்துவிட, ‘16 வயதினிலே’வாக வேறொரு வடிவமெடுத்தது.

எவ்வளவோ வசதிகள் இருக்கும் இந்தக் காலத்தில், இந்தப் படத்தை மீண்டும் ‘ரீமேக்’ செய்ய நினைக்கலாம். ஆனால் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அப்படியே செய்தாலும், இந்தப் படம் அன்று பெற்ற வெற்றியை, இன்று பெற முடியாது என்பதும் உண்மை. என்ன காரணம் தெரியுமா? ‘மயிலி’ன் குழந்தைமைதான் அது!

‘என்னோடு பேரு குயில் இல்ல… மயில்’ என்று கனவுலகில் சஞ்சரிக்கும் மயில்… இடுப்பளவு நீர் உள்ள குளத்தில் தன் தாவணியைத் தூக்கிக் கொண்டு வரும்போது கொட்டக் கொட்டப் பார்க்கும் டாக்டரைப் பார்த்துச் சிரிக்கும் மயில்… டாக்டரால் கைவிடப்படும்போது ஆதரவற்று நிற்கும் மயில்… ‘சப்பாணின்னு கூப்பிட்டா சப்புனு அரைஞ்சிடு’ என்று ஆதரவாக நிற்கும் மயில்… என எல்லாக் காட்சிகளிலும் தன் முகத்தில் குழந்தைமையைத் தாங்கி நின்றிருப்பார் ஸ்ரீதேவி. அந்தக் குழந்தைமையை இன்று வேறு எந்த ஒரு நடிகையிடமும் காண முடியாது என்பதுதான் நிதர்சனம்! அதனால்தான் இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்ய முடியாது. அதனால்தான், ‘மயில்’ 40 வருடங்கள் கழித்தும் நம் மனதில் நிற்கிறாள்!

SCROLL FOR NEXT