இந்து டாக்கீஸ்

ஒளிரும் நட்சத்திரம்: ரஜினி

ஆர்.சி.ஜெயந்தன்

1. பாலசந்தர் ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் சூட்டியதும் “நல்ல வில்லனாக வர ஆசீர்வாதம் செய்யுங்க “ என்று விரும்பிக் கேட்டார் ரஜினி. “வில்லன் எதற்கு, மிகப் பெரிய நடிகனாக வருவாய்” என்றார் குரு. இந்த 67 வயதிலும் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் ஒரே இந்திய நடிகர் ரஜினிகாந்த். நாயகன் வேடங்களை எந்த அளவுக்கு விரும்பி நடிக்கிறாரோ அதே அளவுக்கு வில்லன் வேடங்களில் நடிக்க இப்போதும் விரும்புகிறார்.

2. பெங்களூருவில் பேருந்து நடத்துநராக ரஜினி வேலை செய்துவந்த காலத்தில் அவரது நடிப்புக்குத் தீனிபோட்டவை ‘குருஷேத்திரம்’, ‘எச்சமநாயாகா’ போன்ற புராண அமெச்சூர் நாடகங்கள். அவற்றில் ரஜினி வில்லனாக நடித்த காட்சிகளில், கதாயுதத்தை இடது, வலது என வேக வேகமாகத் தோள் மாற்றி ஸ்டைலாக நடித்து காண்பித்துக் கைதட்டல் பெற்றார்.

அந்தக் கைதட்டல்தான் அவரைச் சென்னை திரைப்படக் கல்லூரிவரை துரத்திக்கொண்டுவந்தது. அவரது அடையாளமான சுறுசுறுப்பும் ஸ்டைலும் நாடகத்திலேயே தொடங்கிவிட்டன. ரஜினிக்குள் இருக்கும் நாடக ரசிகன் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதால் அவ்வப்போது நாடகம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

3. பெங்களூருவில் எந்த இடத்தில் என்ன கிடைக்கும் என்பது ரஜினிக்கு அத்துப்படி. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பெங்களூரு சென்றால் குட்டள்ளியின் தெருவோரக் கடைகளில் நண்பர்களுடன் சாப்பிடுவார். சிறு வயதில் தான் பார்த்து மகிழ்ந்த சந்தோஷ் தியேட்டருக்கு எதிர்ப்புறமுள்ள கடைகள் அடைக்கப்பட்டு ஊர் அடங்கிய பின் அங்கே அமர்ந்து, தனது படத்தை இரவுக் காட்சி பார்த்துவிட்டுத் திரும்பும் ரசிகர்களின் முகங்களையும் அவர்களது பேச்சுக்களையும் கவனித்துக்கொண்டிருப்பார். ரசிகர்களின் சந்தோஷத்தைக் கண்டதும் அவரது முகம் சந்தோஷத்தில் ஒளிரும்.

4. ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் இவருக்குச் சூட்டப்பட்டபோது அதைப் பணிவுடன் ஏற்க மறுத்தார். இவரின் பட வெளியீடு இன்றும் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் பெருநிகழ்வாய்த் தொடர, தனது படவெளியீட்டு தினத்தில் பரீட்சை எழுதிய மாணவனைப் போல் வீட்டை விட்டு எங்கும் நகராமல் அமைதியாக அமர்ந்திருப்பார். எத்தனை வெற்றிகள் வந்தாலும் அவற்றுக்கு மயங்காதவர். தனது படம் தோல்வி அடைந்தால் அதை முழுமனதுடன் ஏற்கும் ரஜினி, நஷ்டப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை தருவதை இன்றும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

5. ரஜினி ஒரு சிறந்த வாசகர். போயஸ் கார்டன் வீட்டிலும், பெங்களூரு பிளாட்டிலும் ஏராளமான தமிழ், மராத்தி நூல்களை வரவேற்பறையில் காணலாம். கடந்த பத்து ஆண்டுகளாக வாசிப்பை நிறுத்திவிட்டு, ஆடியோ புத்தகங்களை விரும்பிக் கேட்டுவருகிறார். ‘பொன்னியின் செல்வன்’, ‘அம்மா வந்தாள்’ ஆகியன அவருக்குப் பிடித்தமான தமிழ் நாவல்கள். ரஜினிக்குக் கதை சொல்லிகளைப் பிடிக்கும். யார் என்ன கதை சொன்னாலும், கைகளைக் கட்டிக்கொண்டு குழந்தைபோல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டிருப்பார்.

6. மாறுவேடமிட்டு, தனது பழைய பியட் காரில் சென்னையிலும் அதன் புறநகர்களிலும் வலம் வருவது ரஜினிக்குப் பிடித்தமான விஷயம். சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னர் இப்படி வலம்வருவதை நிறுத்திவிட்டார். தற்போது தனிமையில் இருப்பதைத் தவிர்த்துவருகிறார். ஆனால், போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் வரை பலமுறை தனியே நடந்து வந்திருக்கிறார்.

7. ஒரு கதையைத் தேர்வு செய்த பின் அதன் ‘ஒன்லைன் ஆர்டரை’ப் படித்துப் பார்த்து, எந்த அம்சம் குறைவாக இருக்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே கூறிவிடுவார் ரஜினி. அதன் பிறகு திரைக்கதை விவாதத்தில் கலந்துகொள்ள மாட்டார். பிரபல திரைக்கதையாளர்களும், இயக்குநரும் அவரது குழுவும், ரஜினியின் நலம் விரும்பிகளும் கதை விவாதத்தில் கலந்துகொள்வார்கள்.

கலந்துகொண்ட அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதாக என்பதை ரஜினி உறுதிப் படுத்திக்கொள்வார். திரைக்கதை இறுதி செய்யப்பட்ட பின் இயக்குநரிடம் கதையைக் கேட்டு ‘வெல்டன்’ என்று அவர் பாராட்டிவிட்டால் அதன் பிறகு கதையில் மாற்றங்கள் கேட்க மாட்டார். ‘கபாலி’வரை கடந்த 35 வருஷங்களாக ரஜினி படங்கள் இப்படித்தான் உருவாகின்றன.

8. குரு, பாலசந்தரிமிருந்து கற்றுக்கொண்ட பழக்கங்களில் சக கலைஞர்களை வாழ்த்திக் கடிதம் எழுதும் பழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றிவருகிறார். தன்னைச் சந்திக்க விரும்பும் திரையுலகினரை ரஜினி இதுவரை தவிர்க்க விரும்பியதே இல்லை. அதேபோல் தான் பார்க்க விரும்பியவர்களையும் தனது வீட்டுக்கு அழைப்பார். தாம் மருத்துவமனையில் இருந்தபோது, பூரண குணம்பெற்றுத் திரும்ப வேண்டி சோளிங்கர் நரசிம்மர் மலைக்கோவிலின் 1305 படிக்கட்டுகளை முட்டிபோட்டு ஏறி பிரார்த்தனை செய்த ரசிகரை வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்தார்.

9. அவ்வப்போது வயிற்றைக் காயப்போடுவது ரஜினிக்குப் பிடிக்கும். பகல் முழுவதும் நீராகாரத்தை உட்கொண்டு, இரவு அசைவ உணவுகளை விரும்பி உண்பது, ரஜினியின் நீண்டநாளைய உணவுப் பழக்கம். தற்போது ரஜினி அசைவ உணவுகளைத் தவிர்த்துவருகிறார்.

10. “ரஜினி போல் இன்னொரு மனிதரை ஆன்மிகத்தால் உருவாக்க முடியும் என்றால், ஆன்மிகத்தைக்கூட நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்'' என்று கமல் புகழ்ந்துரைக்கும் அளவுக்குப் பிரபலமானது ரஜினியின் ஆன்மிக ஈடுபாடு.

‘கடமையைச் செய் பலனை எதிர்பார்’ என்று நவயுகத்துக்கான தத்துவத்தை வரையறுக்கும் ரஜினிக்கு, ரசிகர்கள், கட்சிகள் ஆகிய மட்டங்களிலிருந்து அரசியல் அழைப்புகள் தொடர்ந்துவரும் நிலையில், அரசியல் விஷயத்தில் தாமரை இலைத் தண்ணீராகவே இருந்து வருகிறார்.

நண்பரின் பார்வையில் ரஜினி

தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பிரிவில் ரஜினி படித்தபோது அங்கே ரஜினிக்கு அறிமுகமான சக மாணவர் விட்டல் பிரசாத். அன்று தொடங்கிய இவர்களது நட்பு 41 ஆண்டுகளாக அப்படியே பசுமையாகத் தொடர்கிறது. இனி விட்டல் பிரசாத் பார்வையில் ரஜினி: “இன்ஸ்டியூட்டில் சேர்ந்த முதல் நாள் ரஜினியுடன் ஏற்பட்ட சந்திப்பு இப்போதும் பசுமையாக இருக்கிறது. மிகச் சுருக்கமாகப் பேசுவார். கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். இந்தப் பையன் எப்படி இங்கே காலம் தள்ளப்போகிறேன் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், ரஜினியிடம் ஒரு உறுதி இருந்தது. ஒரு வகுப்பைக்கூட மிஸ் பண்ண மாட்டார். பாலசந்தரை இன்ஸ்டிடியூட்டில் படித்தபோதே குருவாக நினைத்துப் பேசிக்கொண்டிருப்பார். அவரது எண்ணமே அவரை பாலசந்திரிடம் கொண்டு சேர்த்தது.

ரஜினி, கடந்த காலத்தை மறக்க விரும்பாதவர். ராயப்பேட்டை மாடியில் கீற்று வேய்ந்த குடிசையில் வசித்த காலத்தை என்றும் மறக்காதவர். அதனால்தான் ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள அவரது அலுவலகமும் கீற்று வேய்ந்த குடிசையாக இன்னும் இருக்கிறது.

ரசிகர்கள் அவரைக் கடவுளாகவும், ரசிகர்களை அவர் கடவுளாகவும் பார்க்கிறார். இது ரஜினியிடம் நான் காணும் ஆன்மிகத்தின் இன்னொரு பரிமாணம்”.

(அடுத்த வாரமும் ஒரு சூப்பர் ஸ்டார்)

SCROLL FOR NEXT