இந்து டாக்கீஸ்

மாயப்பெட்டி: இது வேறு ரா ரா...

ஆபுத்திரன்

கதாகாலட்சேபம் செய்வது சிரமமானது. தொடர்ந்து பேச வேண்டும். நடுநடுவே சரியாகப் பாட வேண்டும். இரண்டுக்கும் நடுவே இடைவெளி கிடையாது. இந்தக் கலையை விசாகா ஹரி சிறப்பாகவே கற்றிருக்கிறார். ‘ரா ரா’ பாடலை ஜெயா டிவியில் மார்கழி மகோற்சவத்தில் இசைவாகப் பாடினார். இது சந்திரமுகி சமாசாரம் இல்லை. நீலமேக ஜோதியாக ராமனை தரிசனம் செய்தவுடன் தியாகய்யர் பாடிய ‘ரா ரா தேவாதி தேவா’ என்று தொடங்கும் பாடல்.

உற்சாகம் அளித்த நடனம்

ஸ்டார் மூவிஸில் ‘பென்குவின்ஸ் ஆஃப் மடகாஸ்கர்’ திரைப்படம் ஒளிபரப்பானது. மடகாஸ்கர் தொடரின் நான்காவது பகுதி (நமது சிங்கம் சீரியலின் எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது). மூன்று பென்குவின் சகோதரர்கள் ஒரு முட்டையைத் தேடி அலைந்து அதைப் பல ஆபத்தான சூழல்களிலிருந்து காப்பாற்றிக் கொண்டுவரும் கதை. இடையில் சில நிமிடங்களே இடம்பெறும் துள்ளலான இசைக்கு மூன்று பென்குவின்களும் நடனமாடும் காட்சி மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது.

ஆட்டத்தை நகர்த்தியவர்

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் மார்ஸேலின்ஹோவுக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது. சும்மாவா? இந்திய சூப்பர் லீக் போட்டிகளில் டெல்லி டைனமோஸ் குழுவுக்காக மிக அதிகமான கோல்களை (10) போட்டவராயிறறே. ஃபார்வேர்டு விளையாட்டுக்காரரான இவர் கோவா அணிக்கு எதிராகத் தான் அடித்த கோலை மிகச் சிறப்பானது என்று கூறினார்.

அடுத்த பரிமாணம்?

புதிய தலைமுறை சேனலில் ‘போகன்’ திரைப்படத்துக்கான விளம்பர விழா (முதலில் ஒரு சந்தேகம். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கேமராவை மேடையில் நின்று பேசுபவரை நோக்கி ஃபோகஸ் செய்துவிட்டு வீடியோக்காரர் நகர்ந்துவிடுவாரோ? பேசுபவர் பிறரைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது பேசப்படுபவரின் ரியாக்‌ஷனை எல்லாம் காட்டுவதே இல்லை). விழா நாயகனான ஜெயம் ரவி, ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்தில் தன்னோடு நடித்தபோது ஹன்சிகா ஒரு பள்ளி மாணவியைப் போல இருந்ததாகவும், அடுத்து தன்னோடு இணைந்த ‘ரோமியோ-ஜூலியட்’டில் கல்லூரி மாணவியைப் போல் மாறியதாகவும், மூன்றாவதாக இணைந்துள்ள ‘போகன்’ திரைப்படத்தில் அவர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவராக விளங்குபவராகவும் குறிப்பிட்டார். இனி மீண்டும் ஜோடி சேரும்போது ஹன்சிகாவின் கல்வித் தகுதி எப்படி உயருமோ?

SCROLL FOR NEXT