‘காஷ்மோரா’படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோனாலும் காத்திருந்து பழிவாங்கும் இளவரசியாகக் கலக்கியிருந்தார் நயன்தாரா. அவரைப் பற்றிய திருமணச் செய்திகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற புகழுரைக்கு ஏற்ப தற்போது முழு நீள ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறாராம். சக்ரி டோலட்டி இயக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தில், படம் முழுவதும் ஆக்ஷன் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்கிறது இயக்குநர் வட்டாரம்.
இந்தப் படம் வெளியாகும் முன்பு அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் தற்போது நயன்தாரா நடித்துவரும் 'அறம்' படம் வெளியாகுமாம். இந்தப் படத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக நடித்துவருகிறார் நயன்தாரா. இதில் சகாயம் ஐ.ஏ.எஸ். போலவே கடமையும் துணிச்சலும் மிக்க அதிகாரியாக நயன்தாரா கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறாராம் இயக்குநர்.
கொம்பு சீவும் ப்ரியா
கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ‘முத்துராமலிங்கம்’ படத்தில் அவருக்கு ஜோடி ப்ரியா ஆனந்த். முதல் முறையாகப் படம் முழுவதும் தாவணி கட்டிக் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறாராம். அறிமுக இயக்குநர் ராஜதுரை இயக்கிவரும் இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் ஒரு சிலம்ப வீரர். அவரை ஒரு வழக்கில் கைது செய்ய வருகிறார் காவல்துறை அதிகாரியான வம்சி கிருஷ்ணா. “வீரமிருந்தால் சிலம்ப விளையாட்டில் ஜெயித்துவிட்டு அவரைக் கைதுசெய்யுங்கள்” என்று போலீஸ் அதிகாரிக்குக் கொம்பு சீவிவிடுகிறாராம் ப்ரியா ஆனந்த். இதற்காக அதே ஊரில் சிலம்பம் கற்றுக்கொள்கிறாராம் காக்கி உடையில் வில்லன் வேடம் ஏற்றிருக்கும் வம்சி.
மோதும் சந்தானம்
‘பைரவா’ 2017 பொங்கல் வெளியீடு என்று அறிவித்துவிட்டே நடிக்க ஆரம்பித்தார் விஜய். விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் தனது ‘கத்தி சண்டை’ படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த இரண்டு படங்களோடு தற்போது மூன்றாவதாக சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ படமும் பொங்கல் ரேஸில் குதித்திருக்கிறது.
வேகம் காட்டும் விஷ்ணு
விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து இதுவரை ஒன்பது படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். அவர் கடைசியாக நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ விமர்சகர்களிடம் வசைகளை வாங்கிக் குவித்தது. ஆனால் அதுவும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட். ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி அந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். ‘கதாநாயகன்’ எனும் புதிய படத்தைத் தனது இரண்டாவது தயாரிப்பாக அறிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் தனது தயாரிப்பாக மூன்றாவது படத்தையும் அறிவித்துவிட்டார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை இயக்கிய எழிலிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய செல்லா இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.
நட்புக்கு மரியாதை
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. நடிப்பதிலிருந்து விலகியிருந்த நகைச்சுவை நடிகர் செந்தில், இயக்குநர் சுரேஷ் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். தற்போது சூர்யாவின் குடும்ப நண்பரான நடிகர் சத்யன் இந்தக் குழுவில் புதிதாக இணைந்திருக்கிறார். விஜய் படங்களில் அதிகம் நடித்து வந்த சத்யன் தற்போது சூர்யா படத்துக்குத் திரும்பிவிட்டார்.
ஜூனியர் ரவி
ஜெயம் ரவி விண்வெளி வீரராக நடித்துவரும் அறிவியல் புனைவுப் படம் `டிக் டிக் டிக்'. இதில் சிறுவயது ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் தனது மகன் ஆரவ்வையே நடிக்க வைத்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.