இந்து டாக்கீஸ்

திரை நூலகம்: விறுவிறுப்பான கலை வாழ்க்கை

செய்திப்பிரிவு

சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற தமிழ் நாடக மேதைகளின் வரிசையில் அவர்களை அடுத்து தமிழ் மேடைக்கு புது ரத்தம் பாய்ச்சியவர்கள் டி.கே.எஸ். சகோதரர்கள். அவர்களது தலைமுறையைச் சேர்ந்த தனிப்பெரும் நாடக ஆசிரியர் எஸ்.வி.எஸ். என வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட எஸ்.வி. சகஸ்ரநாமம். நாடகம், திரை ஆகிய தளங்களில் தனித்து தடம்பதித்தார் இந்தச் சாதனையாளர். சாதனையாளர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்து செல்வதில்லை. அப்படிச் செய்துவிட்டால் அது அந்தச் சாதனை மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கைப் பதிவாக மட்டும் இல்லாமல் ஒரு காலகட்டத்தின் வரலாற்றில் ஒரு பகுதியாகவும் மாறிவிடும் அற்புதம் நிகழ்ந்துவிடுகிறது. அப்படியொரு அற்புதத்தை நிகழ்த்திச் சென்றிருக்கிறார் சகஸ்ரநாமம்.

விரிவாகவும் தெளிவாகவும் அவர் எழுதி யிருக்கும் வாழ்க்கை வரலாற்றுக்கு ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் புத்தக வடிவம் கொடுத்திருக்கிறது எஸ்.வி.எஸ் நூற்றாண்டு விழாக் குழு. இந்த நூலுக்கு மணியம் செல்வம் வரைந்த சகஸ்ரநாமத்தின் போர்ட்ரேய்ட் ஓவியம் புத்தகத்தின் அட்டைக்குக் கலையழகு சேர்த்திருக்கிறது.

1913-ல் கோவை சிங்காநல்லூரில் பிறந்து, வளர்ந்து, சிறுவனாக இருக்கும்போதே நாடகத் துறையைத் தேர்தெடுத்து பாய்ஸ் கம்பெனியில் பயிற்சி பெற்று நாடக நடிகரான உருவான தொடக்க நாட்களிலிருந்து தொடங்குகிறது புத்தகம். அதன் பிறகு கலைவாணருடன் நட்பு ஏற்பட்ட நாட்களின் நிகழ்வுகள், அவருடன் நட்பு ஆழமான சம்பவங்கள், கலைவாணர் சிறைசென்ற நேரத்தில் அவரது நாடகக் குழுவை ஏற்றுத் திறம்பட நடத்தி, அவரது வழக்குக்கு உதவுவதற்காக சகஸ்ரநாமம் போராடிய காலகட்டம் என விறுவிறுப்பாக விரிந்து செல்கிறது புத்தகம்.

சகஸ்ரநாமம் ஒரு நாடக ஆசியராக உயர்ந்து நின்றது அவரது சேவாஸ்டேஜ் நாடகக் குழுவின் தீவிர செயல்பாட்டுக்குப் பிறகுதான். ராமநரசன், கலாசாகரம் ராஜகோபால் போன்ற கலைஞர்களை இணைத்துக்கொண்டு அவர் தொடங்கிய நாடகப் பயணத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் நவீனத் தமிழ் நாடக மேடையில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட புதிய நாடக உத்திகளை நமக்கு சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது. கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன் போன்ற சிறந்த எழுத்தாளர்களை நாடகம் எழுதத் தூண்டியவர் சகஸ்ரநாமம். நாட்டின் விடுதலை இயக்கத்திலும் முற்போக்கு இயக்கங்களிலும் பங்கேற்று நாடகக் கலையை ஒரு சமூக சீர்திருத்த ஆயுதமாக நிலைநிறுத்திய சகஸ்ரநாமம், சிவாஜி முதல் சத்தியராஜ் வரை பல கலைஞர்களைக் கண்டறிந்து கலையுலகத்துக்கு அளித்த பேராசான் என்பதை உணர்ந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.

- ஆர்.சி.ஜெ.

SCROLL FOR NEXT