நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப்ரியங்கா சோப்ரா தமிழ் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார். 2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நட்சத்திரங்களில் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானது தமிழ் சினிமாவில். அதன் பிறகு அவர் கடந்த 14 ஆண்டுகளாக பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகி. இப்போது அமெரிக்க டிவி சீரியல், ஹாலிவுட் திரைப்படம் என்று எங்கேயோ போய்விட்ட அவர் கோலிவுட் பக்கம் தலைகாட்டவே இல்லை. ஆனால் தெலுங்கில் இதுவரை நான்கு படங்களில் நடித்துவிட்டார். ராம்சரண் தேஜா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தூபான்’ என்ற தெலுங்குப் படத்தில் ராம்சரண் ஜோடியாக ப்ரியங்கா நடித்திருக்கிறார். இது ‘சூப்பர் போலீஸ்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.
அதிரவைக்கும் சரண்யா
பாசமுள்ள அப்பாவி அம்மா ஆவேச முகம் காட்டினால் எப்படி இருக்கும்? ‘அச்சமின்றி’ படத்தில் சரண்யா பொன் வண்னனின் கதாபத்திரத்தைப் போல இருக்கும். இயக்குநர் ராஜபாண்டி - விஜய் வசந்த் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘அச்சமின்றி’. சமுத்திரக்கனி, ராதாரவி தொடங்கிப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்தில் பரத்ரெட்டி, ஜெயகுமார் என்று இரண்டுபெரிய வில்லன் நடிகர்கள் வேறு. ஆனால் இந்த வில்லன்களுக்கெல்லாம் சவால்விடும் வண்ணம் ‘ராஜலட்சுமி’ என்ற தொழிலதிபர் கதாபாத்திரத்தில் அதிர வைத்திருக்கிறாராம் தமிழ் சினிமாவில் விதவிதமான அம்மாவாக நடிப்பதில் சாதனை படைத்திருக்கும் சரண்யா.
“இதுவரை எல்லோரும் என்னைப் பாசமுள்ள அப்பாவி அம்மாவாகவே பார்த்திருப்பார்கள். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, நான் இப்படிக்கூட நடிப்பேனா என்று எண்ணும் அளவுக்கு இந்தப் படத்தில் எனது கேரக்டர் அமைந்துவிட்டது. கதையைக் கேட்கும்போதே பயந்தேன், நெகட்டிவ் கதாபாத்திரம் எனக்குப் பொருந்தாது என்றேன், படப்பிடிப்புக்கு முதல்நாள்கூட இயக்குநருக்கு போன் செய்து நான் நடிக்கல விட்டுடுங்க என்றேன். அவர் என்னை நம்பிக்கையோடு நடிக்க வைத்தார்” என்கிறார். பாசமான அம்மாவுக்கு பஞ்ச் வசனங்கள் எடுபடுமா? ரசிகர்கள் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் சரண்யா.
உலகத் தமிழன் விருது
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு (Global Organisation Of Tamil Origin) என்ற பன்னாட்டுத் தமிழர் சங்கம் ஜனவரி 6-ம் தேதி சென்னையில் நடத்தவிருக்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘உலகத் தமிழன் விருது’ அளிக்க இருக்கிறார்களாம். உலக அரங்கில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாகத் தத்தமது துறையில் சாதித்த சுந்தர் பிச்சை, சிவா அய்யாதுரை, நவநீதம் பிள்ளை, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய நால்வர் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள்.
திரையிசையின் வழி தமிழ் கலாச்சாரத் தூதுவராகவும் தமிழ் பேசும் நாடுகளியையே (Tamil DIASPORA ) தன் இசைப் பணி மூலம் பாலமாகச் செயல்படுவதாலும் ஆஸ்கர் விருது பெறும்போது உலக அரங்கில் தாய்த் தமிழை நினைவுகூர்ந்து பேசித் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்ததாலும் இந்த விருதை ரஹ்மானுக்கு அளிக்க இருக்கிறார்களாம்.
ரகசிய சினிமா
பணமதிப்பு இழப்பு பிரச்சினை மட்டும் வராமல் இருந்திருந்தால் வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28' இரண்டாம் பாகம் இன்னும் வசூலை அள்ளியிருக்கும் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இந்தப் படத்தின் மூலம் தோல்வியிலிருந்து மீண்டெழுந்த வெங்கட் பிரபு, இந்தப் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவை வைத்து தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டாராம். முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு அறிவிக்கலாம் என்று குழு தீவிரமாக வேலை செய்துவருகிறது. இரண்டாம் பாகத்தைத் தயாரித்த அம்மா கிரியேஷன் டி.சிவாவே இந்தப் படத்தையும் தயாரிக்க, ஒரு புதிய கதாநாயகி மட்டும் இந்த அணியில் இணைய இருக்கிறார் என்று தகவல்.
மதுரை டூ தேனி -2
‘சிங்கம்', 'வேலையில்லா பட்டதாரி' போன்று நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களுக்கு மட்டும்தான் இரண்டாம் பாகம் வெளிவர வேண்டுமா என்ன?
ஆறு ஆண்டுகள் முன் மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு வசூல்சாதனை செய்த படம் ‘மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி'. மண் வாசனை ‘ரோட் மூவி’யாக ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவிட்டது. தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஒளிப்பட, காணொளிக் கலைஞர்கள் தங்கள் கூட்டு முயற்சியில் எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்கள். 'மதுரை டூ தேனி - 2' எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, தமிழ் சினிமாவைச் சுற்றிதான் நடக்கிறது.
விஷுவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களது கனவு முயற்சி நிறைவேறியதா, இல்லையா என்பதை காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஷ்யங்களோடு தரவிருக்கிறதாம் இந்தப்படம். எழுதி, இயக்கிப் படத்துக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் எஸ்.பி.எஸ்.குகன்.
ஒரு அறை ஒரு நேர்காணல்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தமிழ் சினிமாவின் முகத்தை உலக சினிமா சந்தைக்கு ஏற்றபடி மாற்றாமல் இருக்க முடியும்? இப்படியொரு கேள்விக்கு கதை, திரைக்கதை, மேக்கிங் என எல்லாவற்றிலும் ஹாலிவுட்டுக்குப் பக்கத்தில் வைக்கிற மாதிரி ‘சிங்கிள் ரூம்’ த்ரில்லரை உருவாக்கியிருக்கிறார் குறும்படங்களின் மூலம் புகழ்பெற்ற கண்ணன் ரங்கசாமி.
ஒரு அறையில் நேர்காணல் நடக்கிறது. நேர்காணலுக்குப் பிறகு அந்த அறையில் நடக்கும் அதிரடிகள்தான் இரண்டு மணிநேர இருக்கை நுனி த்ரில்லர் என்கிறார் இயக்குநர். அப்படியானால் ‘சா’ ,‘எக்ஸாம்’ போன்ற ஹாலிவுட் படங்களின் தழுவலா என்றால் அவற்றின் கதைக்கருவோ அல்லது ஒரு காட்சியின் சாயலோ இருந்தால்கூட என் சட்டையைக் கொத்தாகப் பிடித்து நீங்கள் கேள்வி கேட்கலாம் என்கிறார்.
இப்போதே யூடியூப்பை மிரட்டிக்கொண்டிருக்கிறது இந்தப் படத்தின் ட்ரைலர். பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி அதிகப் பெண் ரசிகைகளைப் பெற்ற சந்தோஷ் பிரதாப் இந்தப் படத்தின் கதாநாயகன். அந்த நேர்காணல் அறையில் இவருக்குத் தண்ணிகாட்டும் அந்த முகமுடி மனிதன் கதாபாத்திரம் தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட்டுக்குப் பயணித்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார் இயக்குநர். அதையும்தான் பார்த்துவிடலாம்.