‘இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் புகைப்பழக்கத்தை ஆதரிக்கவில்லை, பரிந்துரைக்கவில்லை’ என்ற வாசகத்தை ஒரு சடங்குபோல திரைப்படங்களை ஒளிபரப்புவதற்கு முன்னால் சில தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். ஆங்கிலப் படங்களை ஒளிபரப்பினாலும் இதைக் காட்டத் தவறுவதில்லை. ஆச்சரியகரமாக சார்லி சாப்ளின் படங்களுக்கும்! அவரோ அவரது சக நடிகர்களோ இது குறித்து என்ன எண்ணம் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்?
பாலைவனத்தின் நாயகன்
இங்கிலாந்துக்காரர் என்றாலும் அரேபியர்களுக்கு ஆதரவாகவும் பணியாற்றிய மனிதாபிமானம் மிக்க ஒரு ராணுவ ஜெனரலைப் பற்றிய படம்தான் ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’. ஸ்டார் மூவீஸ் ஒளிபரப்பான இந்த அந்தக் காலப்படம் பெரும் பிரமிப்பை அளித்தது. பாலைவனத்தின் பல கோணங்களை மிகச் சிறப்பாகக் காட்டியிருந்தார்கள். அலெக்ஸ் கின்னஸ், பீட்டர் ஓ டூல், ஒமெர் ஷெரீஃப் போன்ற நடிப்பு ஜாம்பவான்களின் திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய படம்.
அம்மாவுடன் நீச்சல்!
வசந்த் டிவியில் ‘பெண்ணோவியம்’ என்ற பகுதியில் நீச்சல் வீராங்கனை பக்தி சர்மாவைப் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டார்கள். அண்டார்டிகாவில் ஒரு டிகிரி வெப்பத்தில் இவர் நீச்சலடித்தது வியப்பை அளித்தது. இவரும் இவர் அம்மா லீனா சர்மாவுமாக 2008-ல் ஒரே சமயத்தில் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்த செய்தி மேலும் வியப்பளித்தது. மீன்குஞ்சுக்கு நீச்சல் அடிக்கத் தெரியாதா என்ன?
பறவை மனிதர்கள்
வேந்தர் டிவியில் அரிசோனா பாலைவனத்தில் நடைபெற்ற ஒரு மிக வித்தியாசமான போட்டியை ‘விழியில் விரியும் உலகம்’ என்ற பகுதியைக் காட்டினார்கள். இதற்குப் பெயர் ‘விங்-சூட்’ போட்டி. உடலில் பாரசூட்டையும், பறவை போன்ற உடையையும் அணிந்து கொள்கிறார்கள். ஹெலிகாப்டரில் 8000 அடி உயரத்துக்குச் சென்று அங்கிருந்து குதித்து ஒரு பறவைபோல சுற்றிச்சுற்றி வந்து மெல்ல இவர்கள் தரை இறங்கும்போது பார்க்க அழகாக இருந்தது.