மதுரையில் பசுமையும் தொழில் நுட்பமும் நிறைந்த ஒரு கிராமம். பணிமாற்றல் காரணமாக அந்த ஊருக்கு வரும் தபால் நிலையப் பணியாளர் தமயந்தி (ரோகிணி), தனது மகன் சக்திவேலுடன் (சசிகுமார்) அங்கே குடியேறுகிறார். படித்து முடித்து அரசு வேலைக்காகக் காத்திருக்கும் சக்திவேலுக்கும் அந்தக் கிராமத்தில் கேபிள் டிவி நடத்திவரும் ராதுவுக்கும் (வளவன்) ஏற்படும் உரசல் ஒரு கட்டத்தில் மோதலாக முற்றுகிறது. ராதுவின் சூழ்ச்சியால் சக்திவேல் சிறைக்குச் செல்ல, அவர் அரசு வேலைக் குச் செல்வது கேள்விக்குறியாகி விடுகிறது. அதன் பிறகு ராதுவை சக்திவேல் எப்படி வீழ்த்துகிறார் என்பது தான் கதை.
கிராமத்தைக் களமாகக் கொண்டு, பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து தரும் சசிகுமார் பாணி படம்தான் இதுவும். ஆனால் கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் என எல்லாமும் அவசரத்தில் அள் ளித் தெளித்த அலங்கோலமாக இருக் கின்றன.
ஊரின் அழகான பெண்ணை நாய கனுக்குப் பிடித்துவிடுவதும், அவரை ஒருதலையாகக் காதலித்துத் துரத்து வதும், முதலில் முரண்டு பிடிக் கும் பெண் பின் கனிந்து காதலில் விழுவது மான சித்தரிப்பை இன்னும் எவ் வளவு காலம்தான் காட்டிக்கொண்டிருப் பார்கள்?
நாயகி மகளிர் சுயஉதவிக் குழுவில் வேலைசெய்கிறார் என்பதைத் தவிர அவரது கதாபாத்திரத்தில் எந்தப் புதுமையும் இல்லை. ‘செஃல்பி காத்தாயி’ யாக வரும் கோவை சரளா- சங்கிலி முருகன் தம்பதி அவரைக் காதலிக்க சசிகுமாருக்கு உதவும் காட்சிகளில் உத்தரவாதமான நகைச்சுவை என்று எதுவுமில்லை.
தனது ஊழியரின் கையை நாய கன் உடைத்துவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுகிறார் வில்லன். அதை நம்பி நாயகனைக் கைது செய்து வழக்குத் தொடுக்கிறது போலீஸ். ஆனால், ஊரில் யாரும் டிஷ் ஆன்டனா வைத்துக்கொள்ளக் கூடாது என்று மிரட்டும் வில்லனின் அராஜகம் மட்டும் காவல் நிலையத்தின் காதுகளுக்கு எப்படி எட்டாமல் போகிறது?
தனது பாணியில் காதலிப்பது, அன்பைப் பொழிவது, வில்லனை நொறுக்குவது, அம்மாவுக்குப் பாசமான பிள்ளையாக இருப்பது என்று சசி குமாருக்கு வழக்கமான வேலை தான். அதில் அவர் குறைவைக்க வில்லை. ஆனால் அது மட்டும் போதுமா என்பதை அவர்தான் யோசிக்க வேண்டும்.
‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ மனோரமாவின் கதாபாத்திரத் தோற்றத்தைப் பிரதிபலிப்பதைத் தவிர கோவை சரளாவின் பாத்திரத்தில் சொல்லிக்கொள் ளும்படி எதுவும் இல்லை. கதை நகர்வுக்கோ கலகலப்புக்கோ அவரது பாத்திரம் பெரிதாக உதவவில்லை. மிகையான நடிப்பால் பாத்திரத்துக்கும் செயற்கைத்தன்மையைத் தந்துவிடு கிறார்.
அறிமுகக் கதாநாயகி தான்யா ரவிச்சந்திரன், தாத்தாவின் கவுரவத்தைக் காப்பாற்றிவிட்டார் என்று சொல்லலாம். அழகாகச் சிரிப்பது, தேவையான அள வுக்கு நடிப்பது என்று கவர்ந்துவிடுகிறார்.
வில்லனின் குரூரத்தை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பாலா சிங். பொறுப்பும் தைரியமும் மிக்க அம்மாவாக ரோகிணி இயல்பாக முத்திரை பதிக்கிறார். ஏனைய துணைக் கதாபாத்திரங்கள் ‘உள்ளேன் ஐயா’ சொல்வதோடு சரி.
ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் வழுதூர் கிராமம் பசுமையும் வண்ண மும் நிறைந்து கவர்கிறது. பின்னணி இசையைக் கச்சிதமாகத் தந்திருக் கும் இசையமைப்பாளர் தர்புகா சிவா, பாடல்களில் கவரத் தவறிவிடு கிறார்.
அடுக்குகளோ பெரிய சிடுக்குகளோ இல்லாத ஒரு கதையை நகைச்சுவை, காதல், பாசம், பகை ஆகிய உணர்வுகளைக் கலந்து பொழுது போக்குச் சித்திரமாகத் தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் சோலை பிரகாஷ். அவரது முயற்சியில் புதுமைகள் இருந்திருந்தால் ‘பலே’ என்று பாராட்டியிருக்கலாம்.