பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்தியத் தண்டனைச் சட்டம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை 21 பிரிவுகளின் கீழ் தண்டிக்க முடியும் என்கிறது. எத்தனை இருந்தும் என்ன? வயது வேற்றுமையின்றி, பெண்களை பாலியல் இச்சையுடன் நோக்கும், அணுகும், தீங்கிழைக்கும் மனிதர்கள் சமூகத்தில் நீக்கமற எங்கும் நிறைந்தே இருக்கிறார்கள். இதைப் பெரும் ஆதங்கத்துடன் ஒரு பேய்க் கதைக்குள் நுழைத்து ‘181’ படத்தைக் கொடுத்திருக்கிறார் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் மூலம் நடுநடுங்க வைத்த இயக்குநர் இசாக்.
முதல் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதையுடன் தயாரிப்பாளர்களைத் தேடி அலைகிறார் ஜெமினி. ஆனால், இளைஞர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கமர்ஷியல் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கதையோடு வாருங்கள் என்று பல தயாரிப்பாளர்கள் திருப்பி அனுப்புகிறார்கள். ஒரு தயாரிப்பாளர், ‘இவ்வளவு நல்ல கதை பண்ணத் தெரிஞ்ச உனக்கு, கமர்ஷியல் கதையும் செய்யத் தெரிஞ்சிருக்கும். இன்னைக்கு தியேட்டருக்கு வர்ற சின்னப் பசங்களுக்குப் பிடிச்சமாதிரி உடனே வேறொரு திரைக்கதை எழுதிக்கொண்டு வா… உடனே ஷூட்டிங்கைத் தொடங்கலாம்.” என்கிறார். அந்த வாய்ப்பை விட விரும்பாத ஜெமினி, திரைக்கதை எழுதத் தனியிடம் தேடிக் கிளம்புகிறார். அப்போது மனைவியும் கூடவே ஒட்டிக்கொள்ள, வனப்பகுதியை ஒட்டிய ஒரு பண்ணை வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கே தங்கி, பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்கும்போது எங்கிருந்தோ கேட்கிறது ஒரு ஈனமான அழுகுரல். அதற்குச் சொந்தமானவரை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஜெமினிக்கும் அவரது மனைவிக்கும் அங்கே அடுத்தடுத்து அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுகின்றன. முடிவில் அவர்கள் அந்த அமானுஷ்யத்தின் முகத்தைப் பார்த்தார்களா? ஜெமினி எழுத விரும்பிய திரைக்கதையை எழுதி முடித்தாரா என்பது கதை.
பழகிய கதைக்களம் என்றாலும் இயக்குநர் அவற்றைக் காட்சிப்படுத்திய விதம் நம்மை பயமுறுத்தவே செய்கிறது. அதேநேரம் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் காட்சிக்குக் காட்சி சாத்தியமாகியிருந்த நேர்த்தியும் திகிலும் இதில் மிஸ்சிங். பட்ஜெட்டில் தயாராகும் பேய் மற்றும் ஹாரர் படங்களின் கிராஃபிக்ஸ் தரம் உயர்ந்திருப்பதை 181 படம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இன்னும் காதலின் பின்னால் மனித நாடகங்கள் இருக்கவே செய்கின்றன என்பதைக் காட்டிய விதம் சினிமாத்தனமாக இருந்தாலும், கூட்டமாக சேர்ந்து குற்றம் செய்யும் மனநிலை, ‘குற்றத்துக்கான தடயங்களை மறைத்துவிடுவது’ என்கிற அசட்டுத் துணிச்சலில் இருந்தும் பிறக்கிறது என்பதை நிறுவியவிதம் நன்று. அதேபோல், நாயகன் எழுத வேண்டியத் திரைக்கதையை தன்கதையாகப் பேய் எழுதிக் கொடுத்துவிடுவதாகக் காட்டியிருக்கும் திருப்பம் ரசனையான திடுக்!
கதாநாயகனாக வரும் ஜெமினி, ஒரு அறிமுக இயக்குநருக்கானக் கதாபாத்திரம் அறிந்து மிகையில்லாத நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் ரீனா கிருஷ்ணன் தோற்றத்தால் ஈர்த்தாலும் நடிக்கத் தெரியாமல் பல காட்சிகளில் சமாளித்திருக்கிறார். ஆனால், இறுதிக் காட்சியில் ரீனா காட்டும் ஆவேசமும் துணிந்து எடுக்கும் முடிவும் ‘ஓ! இவருக்கும் நடிக்க வருகிறது’ எனக் கூற வைக்கிறார். மற்றொரு நாயகினான காவ்யாவின் நடிப்பு இரண்டாம் பாதிப் படத்தைக் காப்பாற்றுகிறது. மிகவும் கடினமான ஒரு கதாபாத்திரத்தை துணிந்து ஏற்று நடித்திருக்கிறார். மற்றொரு எதிர்மறை நாயகனான வரும் விஜய் சந்துரு, அவருடைய நண்பர்களாக வருபவர்கள் கசப்பான கதாபாத்திரங்கள் என்பதை அறிந்தும் தயக்கமின்றி நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.
ஷமீலின் இசையில் ஒலிக்கும் பாடலும் ஒரு ஹாரர் த்ரில்லர் கதைக்கான பின்னணி இசையும் படத்துக்கு வலிமை சேர்த்திருக்கின்றன. வனப்பகுதியில் உள்ள தனிமையான பண்ணை வீடு, அதன் சுற்றுப்புற தனிமை ஆகிவற்றில் நிறைந்திருக்கும் மர்மத்தை இருள் மற்றும் ஒளியின் கலவையில் அட்டகாசமாகப் பதிவு செய்திருக்கிறார்பிரசாந்த். ஆனால், வண்ணக் கலவை சரியில்லாததால் பல இடங்களில் மிகை வண்ணம் கண்களை தொந்தரவு செய்கிறது. இயக்குநர் இசாக்கிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கலாம் என்கிற மதிப்பீட்டைத் தந்துவிடுகிறது இந்த ‘181’.