ஐஸ்லாந்து என்றாலே பனிக்கட்டிகள் சூழ்ந்த ஆர்டிக் நாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மைதான்! ஆனால், அதற்கு நேர் எதிராக 130 எரிமலைகளைக் கொண்டிருக்கும் நாடு அது. அவற்றில் 30 எரிமலைகள் இன்னும் குழம்பைக் கக்கிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல; குளிருக்கு இதமான சுடுநீர், குடிநீராக இயற்கையாகவே அங்கே கிடைக்கிறது என்றால் எத்தனை ஆசீர்வதிக்கப்பட்ட தேசம் அது! எரிமலை வெடிப்புகள் காரணமாக உடைந்து கரையும் பனிப் பாறைகள் ‘ஜியோ தெர்மல்’ முறையில் சூடான தண்ணீராக இருப்பதுதான் அங்கே இயற்கையின் ஜாலம். இந்தத் தண்ணீரில் நம் உடலுக்கு நண்மை செய்யும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், 100 டிகிரி வெப்பத்தைத் தாண்டாத இந்த இயற்கையான சுடு நீர் ‘ஸ்பா’வில் குளிப்பதற்காகவே உலகம் முழுவதிலுமிருந்து செல்வந்தர்கள் இங்கே சுற்றுலா பயணிகளாக குவிகிறார்கள்.
இயற்கையின் ஆசீர்வாதமும் ஐஸ்லாந்துக்கு அதிகம். அவற்றில் மற்றொன்று ‘நார்த்தன் லைட்ஸ்’ என்று சொல்லப்படுகிற பச்சை நிற வண்ணஜாலம் காட்டும் இரவு நேர விண்மீண் மேகங்கள் ஒளிர்ந்து நகர்வதை கண்கொட்டாமல் காணலாம்.
மனதளவிலும் மனிதம் காப்பதிலும் ஐஸ்லாந்து மக்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். பாலின சமத்துவம் தொடங்கி, போரால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது வரை மனித மனங்களிலும் வாழும் இடத்திலும் மாசற்ற தேசமாகப் பெயர் பெற்றிருக்கிறது ஐஸ்லாந்து.
அப்படிப்பட்ட ஐஸ்லாந்திலிருந்து சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதுப் பிரிவுக்கு அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்ட ‘ப்யூட்டிஃபுல் பீயிங்ஸ்’ (Beautiful Beings) 20வது சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடப்படுகிறது.
கதை இதுதான். 14 வயது பாலியின் தாய் உளவியல் பிரச்சினை கொண்டவர். மிகக் கடினமான சூழ்நிலையில் வளரும் அவனை, பள்ளியிலும் வெளியிடங்களிலும் சில சக மாணவர்கள் பாடாய்ப் படுத்துகிறார்கள். தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் அவனைத் தங்களிடன் விளையாட்டுப் பொருள்போல் ஆக்குகிறார்கள். பதின்மர்களின் வன்முறையில் சிக்கும் பாலியை மீட்டெடுக்க ஓடி வருகிறான் அவனது வயதையொத்த நண்பன். அவனது உதவியுடனும் உளவியல் சிக்கலிருந்து விழிப்பு பெறும் அவனது தாயின் உதவியுடனும் பாலி எப்படி மீண்டு வருகிறான் என்பதுதான் கதை.
ஐஸ்லாந்தின் தற்கால இளைய சமூகத்தை பிரதிபலிக்கும் கதையாக குதுமுந்த் ஆர்தர் குதுமுந்தசன் எழுதி இயக்கியிருக்கும் இந்த ஐஸ்லாண்டிக் படத்தை காணத் தவறாதீர்கள்.
தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in