இந்து டாக்கீஸ்

CIFF 2022 | ஒரு துளி வானம்!

ஆர்.சி.ஜெயந்தன்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, சுவிட்சர்லாந்தின் பனி மலைகளிலும் அம்மலைகளின் வசந்த காலப் புல்வெளிகளிலும் படமாக்கப்பட்ட விஜய், அஜித் உள்ளிட்ட கோலிவுட் மாஸ் ஹீரோ படங்களில் டூயட் பாடல்களைக் காண்டிருப்பீர்கள். ஆனால், சுவிட்சர்லாந்தின் அதே இயற்கையின் மடியில், மரண வலிக்கு நடுவே உயிர்த்திருக்கும் காதல் ஒன்றைப் படமாக்கியிருக்கிறார் அந்நாட்டின் சுயாதீன இயக்குநரான மைக்கேல் கோச். சுவிட்சர்லாந்து நாட்டின் சார்பில், சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான பிரிவில் ஆஸ்கருக்கு அனுப்பட்ட அந்தப் படம் 'எ பீஸ் ஆஃப் ஸ்கை’ ‘A Piece of Sky’ (2022). 20வது சென்னை சர்வதேசப் படவிழாவில் கவனம் ஈர்க்கும் ஆஸ்கருக்கு தேர்வான 4 படங்களில் ஒன்று இது.

சுவிட்சர்லாந்தின் தொலைதூர மலை கிராமம் ஒன்றில் உறை பனி காலத்தில் கதை நடக்கிறது. அந்த கிராமத்துக்கு வரும் மார்கோ சற்று எடை கூடிய இளைஞன் என்றாலும் வலுவான உடலைக் கொண்டவன். அந்த கிராமத்தில் கால்நடைகளை வளர்க்கும் அலாய்சியஸ் என்பவருக்கு பண்ணையாளாக பணியில் அமர்கிறான். அதே கிராமத்தில் வசிக்கும் அன்னா விவாகரத்தானவள். 7 வயதே ஆன ஜூலியா என்கிற மகளுடன் வசிக்கிறாள். இருவரும் ஈர்க்கப்படுகின்றனர். ஊர் மக்களோ இந்தக் காதல் தாக்குப் பிடிக்காது என கிசு கிசுக்கிறார்கள். ஆனால், மார்கோவும் அன்னாவும் எளிய வார்த்தைகளின் வழியாக காதலை வளர்த்து, ஒவ்வொரு ஸ்பரிசத்தின்போதும் காதலை உணர்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்கள்.

காதல் எனும் மருந்து

ஆனால், அவர்களது மண வாழ்வின் தொடக்கத்தில் மரண அடி விழுகிறது. மார்கோவைத் தாக்கும் திடீர் சோர்வு, அன்னாவைக் கலக்கமடையச் செய்கிறது. மார்கோவுக்கு செய்யப்படும் மருத்துவப் பரிசோதனையின் முடிவு பேரிடியாகத் தாக்கினாலும் அந்தச் சூழலை மார்கோவும் அன்னாவும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைப் பேசுகிறது படம். காதலின் இயற்கை என்பது அதன் வலிமையில்தான் இருக்கிறது. அதனோடு வாழிட இயற்கையும் இணைந்து பெரும் மாயம் செய்வதை காட்சி மொழியின் சாத்தியங்கள் வழியாகக் கண்டுகொள்கிறார் இயக்குநர் மைக்கேல் கோச். மண வாழ்வின் கொண்டாட்டமும் வலியும் மிகுந்த உணர்வுகளை மைக்கேல் கோச் எலும்பை ஊடுருவும் குளிருடன் சித்தரித்திருப்பதைப் படத்தில் காட்சிகள் கண்கள் கொள்ளமால் காணலாம்.

இந்தப் படத்துக்காக தொழில்முறை நடிகர்களைத் தேடாமல் அந்தப் பகுதியின் மக்கள் கூட்டத்திலிருந்தே முதன்மைக் கதாபாத்திரங்களுக்கும் துணைக் கதாபாத்திரங்களுக்கும் நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இப்படத்தை உருவாக்க மொத்தம் 7 ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கும் மைக்கேல் கோச்சின் முந்தைய மூன்று படங்களும் உலக சினிமா அரங்கில் விமர்சகர்களின் பாராட்டுகளை கணிசமாகப் பெற்றவைதான்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT