“நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராகப் பணியாற்றவில்லை. சினிமா தொடர்பான புத்தகங்களையும் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் வெளியான ‘சினிமா ரசனை’ தொடரின் கட்டுரைகளையும் படித்து சினிமாவைக் கற்றுக்கொண்டேன். இயக்குநர் ஆவதுதான் என் கனவு. நான் நாயகன் ஆகக் காரணம் கதாநாயர்களின் புறக்கணிப்புதான்” என்று கூறி ஆச்சரியமூட்டுகிறார் ‘என்னோடு நீ இருந்தால்’ படத்தை எழுதி, இயக்கி, கதாநாயகனாக அறிமுகமாகும் மூ.ரா. சத்யா.
சினிமாவைப் புத்தகங்கள் வழியாகவும் கட்டுரைகள் வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்?
சினிமா சொல்லித்தரும் எத்தனை இலவசப் படிப்புகள் ஆன்லைனில் கிடைக்கின்றன தெரியுமா? தமிழ்ப் புத்தக உலகம் முன்புபோல இல்லை. சினிமட்டோகிராஃபி, டிஜிட்டல் சினிமா பற்றி தமிழில் எத்தனையோ தரமான புத்தகங்கள் வந்துவிட்டன. ஹாலிவுட்டின் திரைக்கதைப் பிதாமகன்களில் ஒருவரான ஷித் ஃபீட்டின் புகழ்பெற்ற திரைக்கதைப் புத்தகமான ‘ஷாட் பை ஷாட்’ இணையத்தில் கிடைக்கிறது. அதை முழுமையாகப் படித்தேன். உலக இயக்குநர்களின் ஸ்டைல்களைத் தெரிந்துகொள்ள இந்து டாக்கீஸில் வெளியான ‘சினிமா ரசனை ’தொடரே போதுமானதாக இருந்தது.
அந்தத் தொடரில் குறிப்பிடப்பட்ட நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களைப் பார்த்தேன். இன்று கிடைக்கும் கேமராக்கள், லென்சுகள், எக்யூப்மெண்ட்கள் பற்றி இங்கே புட்டுப்புட்டு வைக்கிறார்கள். எனது படத்தின் ஒளிப்பதிவாளர் நாக. சரவணன் எனக்கு ஒளிப்பதிவு நுட்பங்களை அருமையாகச் சொல்லிக்கொடுத்தார். நாம் கற்றுக்கொள்வதில் எவ்வளவு வேகமாக இருக்கிறோம், கற்றுக்கொண்டதை எப்படி சோதித்துப் பார்க்கிறோம், தவறுகளைச் சரிசெய்துகொண்டு எப்படி முன்னேறுகிறோம் என்பதுதான் மட்டும்தான் முக்கியம்.
சினிமாவைப் பற்றித் தெரிந்து கொண்டு நீங்கள் ஹீரோவாக அல்லவா ஆகியிருக்கிறீர்கள்?
எனது ஏரியா சினிமா இயக்கம்தான். எழுத்துதான் எனது பலமே. நான் எழுத்து என்று சொன்னது சினிமாவைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கும் முன், போதை ஒழிப்பு பற்றி ஒரு புத்தகம், இரண்டு தன்னம்பிக்கை புத்தகங்கள், அன்றாட வாழ்வில் நாம் எதை ஆன்மிகமாக நினைக்க வேண்டும் என்பதைச் சின்னச் சின்னச் சிதறல்களாக எடுத்துக்கூறும் ஆன்மிகப் புத்தகம் என நான்கு கட்டுரை நூல்களை எழுதியிருக்கிறேன். கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பிறகு சிறுகதைகளை எழுதிப்பார்த்தால் என்ன என்று தோன்றியதால் எழுத ஆரம்பித்தேன்.
இன்று பத்திரிகைகளுக்குச் சிறுகதை என்ற தேவையே இல்லாமல் போய்விட்டதால் திரைக்கதை எழுதும் ஆர்வத்தில் போய் முடிந்தது. நான் எழுதியவற்றில் ‘என்னோடு நீ இருந்தால்’ திரைக்கதையை முதலில் முயற்சி செய் என்று நண்பர்கள் கூறினார்கள். இந்தக் கதையுடன் பல கதாநாயகர்களை சந்திக்கப் பல வழிகளிலும் முயற்சித்தேன். எந்த வழியில் போனாலும் திரைக்கதைப் புத்தகமாகக் கொடுத்தாலும் “உங்களுக்கு முன் காத்திருப்பவர்களுக்கே இன்னும் முடிவாகவில்லை” என்று கூறி அனுப்பிவிடுகிறார்கள். இதன் பிறகுதான் நண்பர்களின் அறிவுரையை ஏற்று நானே ஹீரோ ஆவது என்று முடிவு செய்தேன்.
படத்தின் தலைப்பைப் பார்த்தால் ஒரு வழக்கமான காதல் கதைபோல் தெரிகிறதே?
தலைப்பில்தான் விஷயமே இருக்கிறது. இது வெறும் காதல் கதை அல்ல; இன்றைய இளைஞர்களோடு ஒட்டிக்கொண்டிருப்பது காதல் மட்டுமே இல்லை. இதுவொரு க்ரைம் த்ரில்லர். எது அவர்களோடு இருந்தால் பிரச்சினை வருகிறது என்பதுதான் திரைக்கதையில் விஷயமே. கதையில் அது காதல் மட்டுமே அல்ல. சமூகத்துக்கு விழிப்புணர்வு தர வேண்டிய முக்கிய பிரச்சினையை இதில் டீல் செய்திருக்கிறேன்.
படத்தின் கதை என்ன?
இன்று படித்துவிட்டு வேலைக்காகத் திண்டாடும் இளைஞர்களுக்கு உடனே கிடைப்பது ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங் வேலை. அதில் படிப்படியாக முன்னேறும் நாயகன், ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறான். ஒருநாள் அவள் திடீரென்று காணாமல் போகிறாள். அவளைத் தேடியலையும் நாயகனைச் சுற்றி மர்மமான சில சம்பவங்கள் நடக்கின்றன. அந்தச் சம்பவங்களின் பின்னணியை அறிய முற்படும் நாயகன் மீண்டும் காதலியைச் சந்தித்தானா இல்லையா என்பதுதான் கதை.
உங்கள் தொழில்நுட்பக் குழு?
சந்திரபோஸிடம் நீண்ட காலம் உதவியாளராகப் பணியாற்றிய கே.கே. கதையின் வேகத்துக்குத் தடை ஏற்படுத்தாத அருமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். நடன இயக்குநர் கேசவன் இந்தப் படத்துக்குப் பிறகு புகழ்பெறுவார். பாடல் காட்சிகள் உட்பட ஒவ்வொரு காட்சியையும் இயல்பாகச் சித்தரிக்க எஸ்.சுப்ரமணியின் கலை இயக்கம் எனக்குப் பெரிய பலம். ராஜ்கீர்த்தி எடிட்டிங் செய்திருக்கிறார். கதையின் நாயகன் கிஷோராக நான் நடித்திருக்கிறேன். கதையின் நாயகி பூஜாவாக கேரளத்திலிருந்து மானசா நாயரை அறிமுகப்படுத்துகிறோம். எங்களோடு ரோகிணி, அஜய் ரத்னம், மீரா கிருஷ்ணன், வெண்ணிற ஆடை மூர்த்தி எனப் பலர் நடித்திருக்கிறார்கள்.