ஆமிர் கான் நடிப்பில் வரும் வாரம் வெளியாகவிருக்கும் படம் ‘தங்கல்’. தங்கல் என்றால் மல்யுத்தம் என்று பொருள். இந்தப் படத்தில் தனக்கு மகள்களாக நடித்திருப்பவர்கள் தன்னைவிடப் பத்து மடங்கு நன்றாக நடித்திருப்பதாகக் கூறியிருக்கிறார் ஆமிர் கான். “இந்தப் படத்தில் எங்களுடைய நடிப்பை என்னை விமர்சிக்கச் சொன்னால், என்னைவிடப் பத்து மடங்கு நன்றாக இந்தக் குழந்தைகள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வேன்.
இதில் மிகைப்படுத்துவதற்கு ஒன்றுமில்லை. இந்தப் படம் வெளியான பிறகு, நீங்களே இதைத் தெரிந்துகொள்வீர்கள். நான் திரைப்படத் துறையில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். இந்தக் குழந்தைகள் மிகவும் திறமைசாலிகள்” என்று பாராட்டுகிறார் ஆமிர் கான். நித்தேஷ் திவாரி இயக்கும் இந்தத் திரைப்படம் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகத் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தன் மகள்கள் கீதா, பபிதா இருவருக்கும் மல்யுத்தம் கற்றுக்கொடுத்து எப்படி ‘காமன்வெல்த்’ போட்டிகளில் பதக்கங்கள் வெல்லவைக்கிறார் என்பதை இந்தப் படம் பின்தொடர்கிறது.
இந்தப் படத்தின் நடிகர்கள் தேர்வு எட்டு மாதங்கள் நடைபெற்றிருக்கிறது. மூன்று மாத ‘ஆடிஷனுக்குப்’பிறகுதான் ஃபாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா, சுஹானி பட்நாகர், ஜாய்ரா வசீம் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தில் அப்பா கதாபாத்திரத்துக்காக ஆமிர் கான் 70 கிலோவிலிருந்து 97 கிலோ உடல் எடையைக் கூட்டி நடித்திருப்பது அவரது ரசிகர்களை வியக்கவைத்திருக்கிறது. வரும் வாரம் ( டிசம்பர் 23) வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தை இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலருக்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் ஆமிர் கான். படம்பார்த்து ஆமிர் கானைப் புகழ்ந்த பிரபலங்களில் ஒருவர் ரஜினி காந்த்.
அவரிடம் “ ‘தங்கல்’ படத்தின் தமிழ் மொழிமாற்றுப் பதிப்பில் எனது கதாபாத்திரத்துக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்” என்று ஆமிர் கான் வேண்டுகோள் வைக்க, “ நீங்கள் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறீர்கள். நான் குரல் கொடுப்பது அதற்குச் சரியாக இருக்காது என எனக்குத் தோன்றுகிறது” என்று கூறி மறுத்துவிட்டாராம். இதுவரை ஆமிர் கானின் படங்கள் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியானதில்லை. ஆனால், அவரது ‘சத்யமேவ ஜெயதே’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழில் மொழிமாற்றப்பட்டு ஒளிபரப்பானபோது அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக அது இருந்தது.