திரைப்படப் பாடல்களாகவும் அதற்கு அப்பாலும் கஜல் பாடல்கள் இன்றும் உயிர்ப்புடன் விளங்குவதன் அடிப்படை காரணம் உருது மொழி. உருதுச் சொற்கள் இல்லாமல் எந்த மொழியிலும் ஒரு சிறந்த கஜல் பாடலை எழுத முடியாது (தமிழ் மொழியில் கஜல் எழுதப்படாமல் இருப்பதற்கு இது ஒரு காரணம்). குறிப்பிட்ட மாத்திரை அளவில், ஒரே பொருளும் நேர் எதிரான பொருளும் தரக்கூடிய மென்மையான உச்சரிப்புக் கொண்ட பல ஆயிரக்கணக்கான மோனைச் சொற்கள் அம்மொழியில் கொட்டிக் கிடக்கின்றன. இவை, அன்றாட இந்தி மொழிப் பேச்சு வழக்குடன் எவ்வித மொழிக் கலப்புச் சிக்கலும் இன்றி அழகாகப் பின்னிப் பிணைந்து இந்தித் திரைப் படப் பாடலின் இசைக்கும் காட்சிக்கும் மெருகு கூட்டி மேன்மைப்படுத்துகின்றன.
பள்ளிக்கூடக் காலத்திலிருந்தே உருது மொழியில் மிக்க ஆர்வமும் நல்ல பயிற்சியும் கொண்டிருந்த ராஜேந்திர கிஷன், சிதார் வாத்தியம் எழுப்பும் மெல்லிய சோக உணர்வைத் தன் இசையின் ஜீவனாகக் கொண்ட மன்மோகன் என்ற பாரம்பரிய இசை அமைப்பாளருடன் இணைந்தபோது இந்தித் திரை உலகில் கஜல்கள் கால் கொண்டு நடந்தன.
‘அதாலத்’ (நீதிமன்றம்) என்ற திரைப்படத்திற்காக மன்மோகன் இசையில் ராஜேந்திர கிஷன் எழுதிய மூன்று கஜல் பாடல்கள் இந்தித் திரையின் தலைசிறந்த, 100, அல்ல, 50 அல்ல, 20 கஜல்கள் என்று சலித்து எடுத்தாலும் அப்பட்டியலில் இடம்பெறத் தக்கவை.
‘ஜானாத்தா ஹம்சே தூர், பஹானா பனாலியே,
அப் தும் கித்னா தூர், டிக்கானா பனாலியே,
ருக்சாத் கீ வக்த் தும்னே ஜோ ஆசு ஹமே தியே
உன் ஆசு ஸே ஹம்னே ஃபசானே பனே லியே
தில்கோ மிலே ஜோ தாக் ஜிகர் கோ மிலே ஜோ தர்த்
உன் தலௌத் ஸே ஹம்னே கஜானா பனாலியே’ –
இந்தப் பாடலின் தமிழாக்கம் இப்படி அமையும்:
(என்னைத் தவிக்கவிட்டு) விலகுவதற்காகவே,
வேறு ஏதோ காரணம் உனக்கு அமைந்தது
இப்போது நீ எத்தனை தொலைவில் இருக்கிறாய்
என்னை விட்டு நீங்கும்போது
நீ தந்த கண்ணீர் தேங்கியது எனக்குள் ஒரு சோக கீதமாய்
எண்ணத்தில் படிந்த கறை இதயத்தில் எழுந்த வலி,
இந்தச் செல்வங்களே ஆனது என் சுரங்கமாக
நம்மை விட்டு மறைந்துவிட்ட நமது அன்புக்குரியவர்களை நினைத்துப் பாடும் இப்பாடலில் இழைந்தோடும் சோகம், தன்னிரக்கம், ஆற்றாமை, எள்ளல் கலந்த சினம் ஆகிய எல்லா உணர்வுகளையும் மிகச் சிறப்பாக இந்தச் சிறிய கஜல் வெளிப்படுத்துகிறது.
அதாலத்
‘உன்கோ யே ஷிக்காயத் ஹை கே ஹம் குச் ந கஹதே ஹை, அப்னி தோ யே ஆதத் ஹை, கே ஹம் குச் ந கஹ்தே’ என்று தொடங்கும் இப்படத்தின் இரண்டாவது கஜல், பொதுவாகத் திரையில் நாம் காண இயலாத ஒரு சூழலில் அமைந்த பாடல். சந்தர்ப்பவசத்தால் பாலியல் தொழிலாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட நாயகியிடம், நடந்த உண்மையைக் கூறும்படி உடனிருப்போர் வலியுறுத்துவார்கள். அப்போது, கழிவிரக்கத்திலும் விரக்தியிலும் ஆட்பட்ட நாயகி பாடுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
அவர்களுக்கு ஆதங்கம்
நான் ஒன்றும் சொல்லவில்லையே என
எனக்குத்தான் பழக்கமாகிவிட்டதே
இப்படி எதுவும் பேசாமல் இருப்பதற்கு
நிர்ப்பந்திக்கிறது உள்ளம் வாயைத் திற என்று
நிதர்சனம் என்னவோ எதுவும் பேசாமல் இருப்பதற்கு
சொல்லுவதன்றால் அதிகம் உண்டு சொல்லுவதற்கு
பொல்லாத இந்த உலகத்தின் கவலை
நான் எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று
நான் எதையாவது சொல்லிவிட்டால்
இங்கு எல்லாம் புயலாக மாறிவிடும்
வேறு வழி என்ன இதற்கு?
நான் பேசாமல் இருப்பதுதான்
இந்தத் திரைப்படத்தின் மூன்றாவது கஜலாக ராஜேந்திர கிஷன் எழுதிய பாடல், அக்காலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களின் வீடுகளில் நடைபெறும், ‘முஜ்ரா’ என்ற அறைக்குள் ஆடும் நாட்டிய வகையைச் சார்ந்தது. முக்கிய விருந்தினராக அங்கு வரும் சீமானுக்குத் தன் உள்ளத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் வரிகள் அமைந்திருக்கும்.
மேலும் இரண்டு கஜல்களும் உள்ள இந்தப் படத்தில் ‘சோக நாயகி’ நர்கீஸ், நாயகன் பிரதீப் குமார், வில்லன் பிரான் ஆகியோரின் நடிப்பும் பாரட்டத்தக்க வண்ணம் அமைந்திருந்தது.