இந்து டாக்கீஸ்

தர்மம்: இரு வேறு உலகங்கள்

ஜெய்

குறும்படங்கள் சினிமாவைப் போலத் தயாரிக்கப்படும் இன்றைய சூழலில், குறும்படத்திற்கான சுதந்திரத்துடன் செறிவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது தர்மம் குறும்படம். மடோனி அஸ்வின் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். சமூகத்தின் இன்றைய நிலை தான் படத்தின் கதைப் பின்னணி.

மூன்று விதமான உலகங்களை ஒரு சரடில் இணைத்திருக்கிறார். சில மணித் துளிகள்தாம் இப்படத்தின் கால நேரம் என்றாலும் அதற்குள் பார்வையாளருக்கு நேர்த்தியாகக் கதையைச் சொல்லிவிடுகிறார். படம் தொழில்நுட்ப ரீதியிலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. பள்ளி மாறுவேடப் போட்டியில் கலந்துகொள்ளத் தன் மகனுக்குப் பிச்சைக்காரன் வேடம் அணிவிக்கும் பெற்றோர்; இது முதல் காட்சி. இதிலும் இயக்குநர் தேர்ந்தெடுத்துள்ள காட்சிக் கோணம் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தக் காட்சியிலேயே சிறுவனையும், அவனுடைய பெற்றோரையும் வெவ்வேறு ப்ரேமில் காண்பித்திருப்பது அர்த்தச் செறிவு.

போலீஸ் வேலையில் முதன்முதலாகச் சேரும் இளைஞன் அடுத்த காட்சியில் அறிமுகமாகிறான். அதே காட்சியில் வரும் வயதான பிச்சைக்காரர், இளைஞனுடன் ஒரே ப்ரேமில் இணைந்து கொள்கிறார். பிச்சைக்காரன், சிறுவன், நேர்மையான போலீஸ்காரர் ஆகிய மூவரும் மனத்தால் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். மற்ற பாத்திரங்கள் லஞ்சம் வாங்கும் காவல் துறை ஆய்வாளர், சிறுவனின் பெற்றோர், லஞ்சம் கொடுக்கும் பைக் இளைஞன்.இந்த இரு வேறு உலகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை இயக்குநர் தன் திறமையின் மூலம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பாத்திரங்கள் எதுவும் அளவுக்கு மீறி வசனம் பேசவில்லை. சினிமா ஒரு காட்சி மொழி என்பதையும் இப்படத்தின் மூலம் இயக்குநர் நிரூபிக்கிறார்.

SCROLL FOR NEXT