இந்து டாக்கீஸ்

குத்துப் பாடலுக்கு ஆடுவது தவறில்லை!- காஜல் சிறப்பு பேட்டி

கா.இசக்கி முத்து

‘‘ரா ணாவுடன் ஒரு தெலுங்குப் படம், அஜித் படம் ஆகியவற்றில் நடித்துவருகிறேன். செளந்தர்யா ரஜினிகாந்த இயக்கும் படம் இன்னும் உறுதியாகவில்லை. ராணாவுடன் நடிப்பது ஒரு அரசியல் கதை. நான் அரசியல்வாதியாக நடிக்கவில்லை. ஆனால் ஒரு புதுமையான கதாபாத்திரம்’’ என்று சிரிப்புடன் தொடங்கினார் காஜல் அகர்வால்.

‘பாயும் புலி' படத்துக்கும் தற்போது வெளியாகவிருக்கும் ‘கவலை வேண்டாம்' படத்துக்கும் இடையே ஒரு வருட இடைவெளி விழுந்துவிட்டதே…

இப்படத்தின் கதையை மும்பையில் வந்து என்னிடம் சொன்னார் இயக்குநர் டி.கே. படத்தின் முதல் 20 நிமிடங்கள் கேட்டவுடனே இந்தக் கதையில் நாம் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். 20 நிமிடங்களுக்குப் பிறகு இந்தக் கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே முழுக் கதையையும் கேட்டேன். மிகவும் யதார்த்தமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். நான் எப்படி நிஜத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேனோ அப்படியே ஒருசில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.

படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருப்பது போன்று தெரிகிறதே...

இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவெல்லாம் இப்படிப்பட்ட வசனங்களைத் திணிக்கவில்லை. முழுக்க நண்பர்களுக்குள் நடைபெறும் கதை. அப்படிப்பட்ட கதையில் நண்பர்களுக்குள் எப்படிப் பேசுவார்களோ அப்படித்தானே இயக்குநர்கள் வசனங்களை அமைக்க முடியும்.

அதே வேளையில், ட்ரெய்லரைப் பார்த்த பலரும் நாயகனுக்கு இரண்டு காதல்கள் இருப்பதாக உணர்கிறார்கள். அங்கேதான் சஸ்பென்ஸ். படம் பார்க்கும்போது உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும்.

‘கவலை வேண்டாம்' படத்தில் எந்தக் காட்சி உங்களுக்குக் கடினமாக இருந்தது?

இறுதிக் காட்சிதான்! அது மிகவும் உணர்ச்சிகரமான காட்சி. அதற்கு நேர்மாறாக, முழு நகைச்சுவைக் காட்சி ஒன்று இருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும், நானோ முகத்தை சீரியஸாக வைத்திருக்க வேண்டும். அந்தக் காட்சியும் எனக்குச் சவாலாக இருந்தது.

கன்னடத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறீர்கள். ஏன் தமிழில் இன்னும் பாடவில்லை?

எனக்கு கன்னடம் தெரியாது. எனினும் நான் பாடுவதற்கான சூழல் ஏற்பட்டதால் கன்னடம் கற்றுக்கொண்டு பாடினேன். நான் பாடகி அல்ல; நடிகை மட்டுமே. பாடுவது பிடிக்கும் என்பதால் பாடினேன். தமிழிலும் அப்படி ஒரு சூழல் அமைந்தால் பாடுவேன். இதனால் முழுநேரப் பாடகியாகிவிடுவேன் என்றெல்லாம் கிடையாது. ஆசைக்காகப் பாடினேன், அவ்வளவுதான்.

முன்னணி நடிகையாக வலம்வரும் நீங்கள், எப்படி ‘ஜனதா கேரேஜ்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டீர்கள்?

ஜூனியர் என்.டி.ஆர். எனக்கு நல்ல நண்பர் என்பதால் ஆடினேன். அந்தப் பாடலும் நன்றாக இருந்தது. வழக்கமான குத்துப் பாடல் நடிகைக்கான பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஆடினேன். மேலும், நான் ஏன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடக் கூடாது என்று நினைக்கிறீர்கள்? ஒரு நடிகையாய் ஒரு சிறிய வட்டத்துக்குள் இருந்துகொண்டு மட்டுமே நடிப்பது தவறு என்றே நினைக்கிறேன்.

முதன்முறையாக அஜித்துடன் நடித்துவருகிறீர்கள். அந்தப் படத்தைப் பற்றி...

அந்தப் படத்தில் நானும் அஜித்தும் இளம் வயது தம்பதிகளாக நடிக்கிறோம். அந்தப் படத்தில் என்னை இணைத்துக்கொண்டது குறித்து நான் பெருமைப்படுகிறேன். அஜித் சார் மீது மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளேன். அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு அற்புதமான மனிதர். படப்பிடிப்புத் தளத்தில் யாராக இருந்தாலும் அவர் மரியாதையாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது எனக்குப் பயங்கர ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகரிடம் இவ்வளவு எளிமையா என வியந்த நாட்கள் நிறைய இருக்கின்றன.

SCROLL FOR NEXT