‘பாசக்கார நண்பர்கள்’, ‘கீரிப்புள்ள’ஆகிய படங்களின் வழியே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான யுவனுக்கு அடையாளம் தந்த படம் ‘சாட்டை’. தற்போது வரலாற்றுக் கதைக்களம் கொண்ட ‘இளமி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர், அடுத்து இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிக்கத் தயாராகிவருகிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
உங்களது முதலிரண்டு படங்களுமே உங்களை ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டின. ஆனால், உங்களது மூன்றாவது படத்தின் தலைப்பு உங்களுடன் ஒட்டிக்கொண்டுவிட்டதே?
‘சாட்டை’ ஆசிரியர்கள் எப்படி இருக்கணும், மாணவர்கள் எப்படி நடந்துக்கணும்ன்னு சொன்ன படம். அதோட வெற்றி முழுக்க இயக்குநர் அன்பழகனுக்கும் அந்தப் படத்தைத் தயங்காம தயாரிச்ச பிரபு சாலமன் சாருக்கும்தான் போய்ச் சேரும். சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யான்னு அருமையா நடிக்கிற ரெண்டு பெரிய இயக்குநர்களோட அந்தப் படத்துல நடிச்சேன். அதுவே பெரிய அனுபவம். அந்தப் படத்தோட வெற்றி எனக்கு ப்ளஸ் ஆயிடுச்சு.
ஆனா நான் நடிச்ச முதலிரண்டு படங்களும் என்னோட அப்பா ஃபெரோஸ்கான் கஷ்டப்பட்டு உழைச்சு எடுத்த படம். அந்த ரெண்டு படங்களோட ஸ்கிரீன்பிளே, கேரக்டரைஸேஷன் அவ்ளோ நல்லா இருக்கும். எனக்குச் ‘சாட்டை’ படத்துல வாய்ப்பு கிடைச்சதுன்னா அதுக்குக் காரணம் இந்த இரண்டு படங்களும்தான். என் அப்பாவோட உழைப்பும் அவர் என் மேல வெச்ச நம்பிக்கையும் வீண் போகல. அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.
உங்களை யாரும் டூப் போடுற ஹீரோன்னு சொல்லிடக் கூடாதுங்கிறதுக்காகவா ‘கீரிப்புள்ள’படத்தோட இசை வெளியீட்டு விழாவில் ‘லைவ் ஸ்டண்ட் ஷோ’ செய்து காட்டினீர்கள்?
7 வயசுலேர்ந்து கராத்தே, குங்ஃபூ இரண்டும் கத்துக்கிட்டேன். 19 வயசுல பிளாக் பெல்ட் வாங்கிட்டேன். இந்த ரெண்டு தற்காப்புக் கலைகளையும் சும்மா ஒப்பேத்த முடியாது. எனர்ஜி லெவல், வேகம் ரெண்டும் இல்லன்னா பிளாக் பெல்ட் வரைக்கும் போக முடியாது. அந்த அங்கீகாரத்தை விடாமுயற்சியால் வாங்கினேன். இதைப் பார்த்துட்டு எனக்காக அப்பா எழுதின பாக்ஸிங் ஸ்டோரிதான் ‘பாசக்கார நண்பர்கள்’.
அந்தப் படம் சரியாகப் போகலன்னாலும் படம் பார்த்தவங்க போன் பண்ணி பாராட்டினாங்க. என்னோட ஸ்டண்ட் டேலண்ட் தெரியனும்ன்னுதான் அப்பா கீரிப்புள்ள கதையும் எழுதினார். இந்தப் படங்களுக்காக நான் டூப் போடல. சின்னப் பையன், ஸ்டண்ட் சீன்ல எல்லாம் ஏதோ ட்ரிக் பண்ணி எடுத்திருக்காங்கண்ணு ஆடியன்ஸ் நினைக்கக் கூடாது இல்லையா? அதுக்காகத்தான் அந்தப் படத்தோட ஆடியோ ஃபங்ஷனை லைவ் ஸ்டண்ட் ஷோவா நடத்தினோம்.
அந்தப் படத்தோட கிளைமாக்ஸ்ல நீங்களும் ஹீரோயினும் செத்துப்போகிற மாதிரி முடிவு இருந்ததைப் பார்த்துட்டுத்தான் இயக்குநர் பாலா உங்களை அடுத்த படத்துக்குத் தேர்வு செஞ்சாரா?
அது எனக்குத் தெரியல. திடீர்ன்னு ஒருநாள் பாலா சார்கிட்டயிருந்து ஒரு போன். அடிச்சுப் பிடிச்சு அவர் ஆபீஸுக்குப்போய் நின்னா “டேய் பக்கத்துல வா” ன்னார். கொஞ்சம் பதற்றத்தோடதான் பக்கத்துல போனேன். இழுத்துப் பக்கத்துல உட்கார வெச்சுட்டு…. “ டேய் உன்னையும் சூப்பர் சிங்கர் பிரகதியையும் செலக்ட் பண்ணியிருக்கேன்”னு சொன்னார். எனக்கு உடம்பு நடுங்கிப்போச்சு. ஒரு சின்ன போட்டோ ஷூட் நடந்திருக்கு. மத்த எதப் பத்தியும் வாய் திறக்க மாட்டேன்.
தற்போது நடித்து முடித்திருக்கும் ‘இளமி’ படத்தில் என்ன கதாபாத்திரம்?
18-ம் நூற்றாண்டு மாடுபிடி வீரனா நடிச்சிருக்கேன். ஜல்லிக்கட்டுல மாடு பிடிக்கிறவன். ஆனால், என் வீரத்தால் பல பெண்களோட மனசையும் பிடிக்கிறேன். ஜல்லிக்கட்டு நம்ம தமிழ் மக்களோட வாழ்க்கையில எப்படி ரத்தமும் சதையுமா கலந்து இருந்துச்சுங்கிறதுதான் இந்தப் படம். அந்தக் காலகட்டத்தில புழக்கத்தில இருந்தது வடம் ஜல்லிக்கட்டு. இன்னைக்கு அது அடியோட அழிஞ்சுபோச்சு. ஜல்லிக்கட்டில பல வகை இருந்தாலும் வடம் ஜல்லிக்கட்டு உயிரைப் பணயம் வைச்சு விளையாடுற வீர விளையாட்டு.
அழிந்துபோன கலாச்சாரத்தை ஞாபகப்படுத்தணும்கிறதுதான் இயக்குநர் ஜூலியன் பிரகாஷோட குறிக்கோள். அதுக்காக இந்தக் கதையை எழுதுறத்துக்கு முன்னாடி நிறையப்பேர சந்தித்துச்சுப் பேசி, ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கிறார். எங்கிட்ட சொன்ன கதையைவிடப் பல மடங்கு சூப்பரா எடுத்திருக்கிறார். கலை இயக்குநர் கலக்கியிருக்கிறார். நாம இப்போ ஜல்லிக்கட்டை இழந்து வாழ்ந்திட்டு இருக்கோம் இந்த நேரத்துல ‘இளமி’ நமக்கு முக்கியமான படமா இருக்கும்.
இந்தப் படத்துக்காக நிஜமான ஜல்லிக்கட்டுக் காளைகளைப் பயன்படுத்தினீர்களா?
ஆமா! புளுகிராஸ் உதவியோட ஜல்லிக்கட்டுக் காளைகளைப் பயன்படுத்தினோம். ஆனால், காளைகளோட களத்துல இறங்க அனுமதி இல்லை. ஆனால் அந்தக் குறை தெரியாத மாதிரி கிராஃபிக்ஸ்ல மிரட்டலா உருவாக்கியிருக்கோம். நிஜமா மாட்டை அடக்க முடியலையேங்கிற வருத்தம் எனக்கு இருக்கு. ஆனா மறுபடியும் நம்ம ஜல்லிக்கட்டு நம்மகிட்ட வந்துடுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.