இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: திரையுலகைத் துரத்தும் வில்லன்

திரை பாரதி

தென்னிந்தியத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்ற இரண்டு சின்னதிரைக் கதாநாயகியரின் தற்கொலைகள் (?). சென்னையில் சபர்ணா ஆனந்தும் கேரள மாநிலம் திருச்சூரில் ரேகா மோகனும் தங்களது அப்பார்ட்மெண்டுகளில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இருவரது மரணங்களுக்கான உண்மையான காரணம் இனிமேல்தான் தெரியவரும் என்றாலும், தனித்து வாழும் நடிகைகளை மட்டும் மரணங்கள் ஏன் துரத்துகின்றன என்பது விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது. திரையுலகம், சின்னத்திரை வட்டாரங்களைச் சேர்ந்த சில நட்சத்திரங்களிடம் இதுபற்றிப் பேசியபோது அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அதிர்ச்சி அளித்ததுடன் உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளையும் அடையாளம் காட்டின.

தனிமைக்குத் தள்ளும் பெற்றோர்

“தற்கொலையை நாடும் மனநிலை இளம் நடிகைகளை மட்டும் தாக்குவதற்கான காரணம் எனக்குத் தெரிந்து அம்மா, அப்பா தரும் மன அழுத்தத்தால் உருவாவதுதான். தொடக்க நிலையில் சில கண்டிப்புக்களையும் கெடுபிடிகளையும் காட்டும் பெற்றோர், பிரபலமான பிறகு பிடியை இரக்கமில்லாமல் இறுக்குகிறார்கள். அவளது வருமானத்தில் கருத்தாக இருக்கும் அவர்கள், அவளுக்கு எந்த வகையாக அரவணைப்பு தேவை என்பதை மறந்துவிடுகிறார்கள். அவளது நடிப்புத்தொழிலோடு தொடர்புடைய ஆண்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள்.

அவளைக் கேட்காமல் பெற்றோர் எடுக்கும் பல தன்னிச்சையான முடிவுகள் ஒரு கட்டத்தில் வற்புறுத்தலாக மாறிவிடுகின்றன. இதனால் பெற்றோரைத் தற்காலிகமாக பிரிந்து வாழ்வது தலைவலி இல்லாமல் இருக்கும் என்று முடிவெடுத்துத் தனித்து வாழ முயற்சிக்கிறார்கள். இங்கிருந்துதான் அடுத்த கட்ட சிக்கல்கள் அத்தனையும் ஆரம்பிக்கின்றன” என்கிறார் பிரபல தொலைகாட்சித் தொடரில் கதாநாயகியாக நடித்துவரும் முகம் காட்ட விரும்பாத சின்னத்திரை நாயகி.

இன்னும் விலகாத பனிமூட்டம்

“சினிமா உலகமும் சின்னத்திரையும் தொழில் ரீதியாக எவ்வளவு புரொஃபஷனலாக மாறினாலும் இளம் பெண் கலைஞர்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை பாலியல் தொந்தரவு. வாய்ப்பு பெறுவதற்கும் வாய்ப்புத் தருகிறவர்களுக்கும் லேப் டாப், ஐபோன் போன்று பரிசுப் பொருட்களை வாங்கித்தருவது, தனது சம்பளத்தில் ஒரு பகுதியைத் தருவது என்று வாய்ப்புகளுக்காக இளம் ஆண் நடிகர்கள் பிரயத்தனம் செய்வதை நான் கண்டுகொண்டுதான் இருக்கிறேன்.

அவர்களாகவே விரும்பிக் கொடுப்பதை ஒருசிலர் வேண்டுமானால் மறுக்கலாம். இது பெண்கள் விஷயத்தில் வேறுவித அணுகுமுறையாக மாறிவிடுகிறது. விலகாத பனிமூட்டம்போல பாலியல் தொந்தரவுகள் இன்னும் தொடரவே செய்கின்றன. பெற்றோர், உறவினர்களின் கண்காணிப்பு, வலுவான பின்னணி ஆகிவற்றிலிருந்து வருபவர்களுக்குப் பெரும்பாலும் இத்தகைய சிக்கல்கள் இருப்பதில்லை” என்கிறார் மற்றொரு சின்னத்திரைக் கலைஞர்.

கழிவிரக்கமும் நம்பிக்கைச் சிதறலும்

“தனித்து வாழும் இளம் பெண் கலைஞர்களைப் பொறுத்தவரை, ஒரு கட்டத்துக்குப் பிறகு பெற்றோருக்கும் நம் உறவுகளுக்கும் வருமானம் மீது மட்டுமே கவனம் குவிந்திருக்கிறது. நமக்கு அடுத்து என்ன தேவை என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்ற கழிவிரக்கம் அவர்களை வாட்டத் தொடங்குகிறது. இந்த நேரத்தில் அவர்கள் நம்பியிருக்கும் ஆண் துணையும் அவர்களைப் பிரிய நேரும்போது வாழ்க்கை மீதான பிடிப்பை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். துணை கைவிட்டுப் போன பின் உலகமே இருண்டுவிட்டதுபோலவும் வாழ்க்கை முடிந்துவிட்டதுபோலவும் நினைத்துத் தங்களது பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இதிலிருந்து மீளும் முயற்சியாக மது, போதை ஆகிவற்றையும் சிலர் நாடுகிறார்கள். அதுவே அவர்களது வளர்ச்சிக்கும் தடையாக அமைந்துவிடுகிறது” என்கிறார் சின்னத்திரை இயக்குநர் ஒருவர்.

கிடைக்காத ஆலோசனை

இறந்துபோன சபர்ணா ஆனந்த் தனது நண்பர்கள் பலருக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாக இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கே மனநல ஆலோசனை தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டும் அது வெளியே தெரியாமல் போய்விட்டது. விஜய்காந்த் தலைவராகப் பதவி வகித்த காலம் முதலே நடிகர் நடிகைகளுக்கு மனநல ஆலோசனை தருவோம் என்று நடிகர் சங்கம் சொல்லிவந்தாலும் இதுவரை அதைச் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. திடீர் புகழ், அபரிமிதமான வருமானம் தரும் வசதி ஆகியவற்றைக் கையாள்வதற்குக் கற்றுக்கொடுக்க வேண்டியதும் அவசியம் என்று இந்தத் துறையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் கருதுகிறார்கள்.

இனியாவது இதுபோன்ற மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் சூழல் ஆரோக்கியமானதாக மாற வேண்டும். உண்மையான புரொஃபஷனலிசம் உருவாக வேண்டும். சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நடிகைகளுக்குப் பெற்றோர்களும் நண்பர்களும் சக கலைஞர்களும் விழிப்பாக இருந்து உதவிட வேண்டும். நம்பிக்கை இழப்பவர்களுக்கு அரவணைப்பு மட்டுமே சிறந்த மருந்து.

SCROLL FOR NEXT