’அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பது சமூக வலைதள பயனர்களின் எழுதப்படாத கொள்கை. சமூக வலைத்தளங்கள் ஒரு நாள் ட்ரோல் செய்யும், மறுநாள் பாராட்டுக்களை அள்ளி வீசும். பெரும்பாலும் சுமாராக ரீமேக் செய்யப்பட்ட சினிமாக்களுக்காக ட்ரோல் செய்யப்பட்ட கன்னட திரைத்துறை இன்று பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. காரணம், மூன்று பேர். ராஜ், ரிஷப், ரக்ஷித் ஷெட்டிகள்!
2021 நவம்பர் மாதம் வெளியான ‘கருட காமன ரிஷப வாகன’ திரைப்படம் கர்நாடக மாநிலத்திற்கு வெளியிலும் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ராஜ் இயக்கத்தில் ராஜ், ரிஷப் நடிப்பில் உருவான இப்படத்தை ரக்ஷித் தயாரித்திருந்தார். அடுத்தடுத்து தங்களது தனிப்படைப்புகளால் கன்னட சினிமாவை மேலும் கவனிக்க வைத்தனர். இந்த ஆண்டு வெளியான ரக்ஷித்தின் ‘777 சார்லி’, ரிஷப்பின் ‘காந்தாரா’ திரைப்படங்கள் இதற்குச் சான்று.
தமிழ் சினிமாவில் மதுரையைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கென தனிச்சிறப்பு இருப்பதுபோல தட்சிண கன்னடா பகுதியைச் சேர்ந்த ராஜ், ரிஷ்ப், ரக்ஷித் ஆகியோரின் சினிமாக்கள் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தட்சிண கன்னடா மண்ணின் மனிதர்களை, கதைகளை, மொழியை, உணவை, கலாச்சாரத்தை திரையில் காட்சிப்படுத்தி வருகின்றனர். அவை ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் எடுக்கப்படுகின்றன. இவர்கள் தங்களது திரைப்படங்களில் தட்சிண கன்னடா மொழியை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், பெரும்பாலான கன்னட சினிமாக்களின் தட்சிண கன்னட பேச்சுவழக்கு சரியாக காட்டப்படவில்லை என்பது அவர்களது ஆதங்கம்.
2011ஆம் ஆண்டு முதல் ரிஷப், ரக்ஷித் ஆகியோர் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்தக் கூட்டணியில் கடைசியாக இணைந்தது ராஜ். திரைக்கதை எழுதுவது, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என சினிமாவின் பல துறைகளில் பணியாற்றி வரும் இந்த மூவர், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள தயங்குவதில்லை. ”ஒன்றாக கற்றுக்கொள்கிறோம். கற்றுக்கொடுக்கிறோம்” என சமீபத்தில் வெளியான நேர்காணல் ஒன்றில் ரிஷப் தெரிவித்திருக்கிறார்.
கன்னடத்தில் மட்டும் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி தமிழிலும், வரிசையாக தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டும் வெளியாகிறது. சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிப்பெறும் கன்னட சினிமாக்கள் ’ட்ரோல்’ திரையை மெல்ல மெல்ல விலக்கி வருகிறது என்பதில் சந்தேகமில்லை!