“படித்து முடித்து பணி நிமித்தம் மாநகரில் குடியேறிவிடும் இளம் தலைமுறையினர், கிராமத்தில் வசிக்கும் பெற்றோரை மறந்துவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நவம்பரில் வெளியாகவிருக்கும் ’மிரள்’ படத்தில் தம்பதியாக நடித்துள்ள பரத் - வாணி போஜனுக்கும் அப்படியொரு வாழ்க்கைதான். ஒரு விடுமுறைக்குத் தங்களுடைய 8 வயது மகளுடன் சொந்த கிராமத்துக்கு வரும்போது நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள்தான் படம்” என்கிறார் படத்தை எழுதி இருக்கும் எம்.சக்திவேல். அக்சஸ் பிலிம் பேக்ட்ரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிகுமார் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.
ஓட விடும் வாழ்க்கை! - ‘பீச்சாங்கை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆர். எஸ். கார்த்திக் நாயகனாகவும் காயத்ரி ரெமா நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘அஜினோமோட்டோ’. மதிராஜ் ஐயம்பெருமாள் எழுதி இயக்கி வருகிறார். அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உட்படப் பலர் நடிக்கும் இப்படத்தை, தத்தாத்ரே ஸ்டுடியோஸ் சார்பில் சிவராஜ் பன்னீர்செல்வம் - ஆ.தமிழ் செல்வன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படம் குறித்து இயக்குநர் கூறும்போது: “வாழ்க்கையின் போக்கில் நடக்கும் சில சம்பவங்கள் தொடக்கத்தில் நல்லதாகத் தோன்றும். காலப்போக்கில் அந்த சம்பவங்களின் எதிர் விளைவுகள் கேட்கும் விலை வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்களின் ஓட்டம்தான் படம்” என்றார்.
தெலுங்கில் வெளியீடு! - சர்வதேசப் போலீஸால் கண்டுபிடிக்க முடியாத குரேஷி எனும் தாதாவாக இருந்த நாயகன், அந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டு, பிரம்ம தேஜா என்கிற பெயரில் ஆந்திர அரசியலில் ‘கிங் மேக்’கராகச் செய்யும் சாதுர்யங்களைப் பேசும் படம் ‘காட்ஃபாதர்’. சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியான இப்படம், முதல் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழ் சினிமா இயக்குநரான மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்று முதல் தமிழ்நாட்டிலும் தெலுங்குப் பதிப்பை நேரடியாக வெளியிடுகிறார்கள். மலையாளத்தில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான இதை ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இதன் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட பதிப்பையும் அடுத்த சில வாரங்களில் வெளியிட இருக்கிறார்கள்.