த்ரில்லர் பாணி படங்கள் ஹாலிவுட்டில் போரடித்துவிட்டதோ என்னவோ? தற்போது த்ரில்லரை அறிவியல் புனைவுக் கதைகளுடன் கலந்து கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பாணி கதை அம்சத்துடன் ஹாலிவுட்டில் திரைக்கு வரத் தயாராகியுள்ளது ‘பாசஞ்சர்ஸ்’ என்ற படம்!
நாயகன் (கிறிஸ் பிராட்), நாயகி (ஜெனிஃபர் லாரன்ஸ்) இருவரும் வேறு ஒரு கிரகத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க, ஒரு பிரம்மாண்ட விண்வெளி ஓடத்தில் பயணிக்கிறார்கள். அவர்கள் தூங்கிக் கண் விழிக்கும்போது, மர்மமாக 90 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டிய இடத்தை அடைந்துவிடுகிறார்கள். இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க இருவரும் முயல்கிறார்கள். அப்போது பல அபாயகரமான பிரச்சினைகளை இருவரும் எதிர்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி மர்மத்தை எப்படி அவிழ்க்கிறார்கள் என்பதுதான் ‘பாசஞ்சர்ஸ்’ சொல்லும் கதை.
படத்தின் டிரைலரே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விண்வெளியின் அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கும் விண்வெளி ஓடம் தனி உலகமாக இருக்கிறது. விண்வெளி ஓடம் சூரியனை நெருங்குவது போன்ற ஊகிக்க முடியாத காட்சிகள் கண்களை ஆச்சரியத்தால் விரிய வைக்கின்றன. யாருமே இல்லாத இடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எப்போது எது நடக்குமோ என்ற திகில், இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் வான்வெளியில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் எனப் பதைபதைப்புக்கு மத்தியிலும் பனித்துளிக் காதலைச் சிலிர்ப்புடன் சித்தரித்து இருக்கிறாராம் இந்தப் படத்தின் இயக்குநர் மார்ட்டன் டைல்டம். பல வெற்றிப் படங்களை வெளியிட்டுள்ள கொலம்பியா பிக்சர்ஸின் இந்தப் படம், கிறிஸ்மஸ் விடுமுறையைக் கொண்டாடும்விதமாக டிசம்பர் 21 அன்று திரைக்கு வருகிறது.