தமிழ் ரசிகர்களிடம் அவ்வப்போது தலைகாட்டும் நானி, ‘சியாம் சிங்கா ராய்’ படத்துக்குப் பிறகு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் ‘பான் இந்தியா’ படமாக உருவாகிவருகிறது ‘தசரா’. அதில், நிலக்கரி சுரங்கத் தொழிலாளியாக அவரது முதல் தோற்றத்தை பார்த்த நெட்டிசன்கள் விதவிதமாக விமர்சித்து வருகிறார்கள். இப்படத்துக்காக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘தூம் தாம் தோஸ்தான்’ பாடலில் நானி ஆடும் காட்சியிலிருந்து இந்த முதல் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறது படக்குழு.
கமல் ஹாசன் பாராட்டு! - “‘பொன்னியின் செல்வன்’ போன்ற ஒரு பிரம்மாண்டப் படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணி ரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்" என உலக நாயகன் கமல்ஹாசன் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரித்துள்ளார். படக்குழுவினருடன் பிரத்யேகக் காட்சியில் படத்தைப் பார்த்தபின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதைத் தெரிவித்தார். இச்சந்திப்பில் விக்ரம், கார்த்தி, லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மூன்று மொழிகளில் தனுஷ்! - ‘சாணி காயிதம்’ படத்தைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ’கேப்டன் மில்லர்’. தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.1930 - 40 காலகட்டத்தை பின்னணி யாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகிவரும் இதற்கு இசை ஜி.வி.பிரகாஷ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.