இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: சரயு நதிக்கரையில் டீசர்!

செய்திப்பிரிவு

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதி புருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி - சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையில் படத்தின் டீசரை வரும் அக்டோபர் 2ஆம் தேதி அயோத்தியின் சரயு நதிக்கரையில் விழா நடத்தி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பணியிட நகைச்சுவை! - ஓடிடி உருவாக்கிக் கொடுத்துள்ள சுதந்திரம், புதுமுக இயக்குநர்களைப் புதிதுபுதிதாக யோசிக்க வைத்திருக்கிறது. ஆஹா ஓடிடி தளத்தின் ஒரிஜினல்ஸ் வரிசையில் இன்று வெளியாகியிருக்கும் ‘மேட் கம்பெனி’ இணையத் தொடர் அப்படியொரு புதிய கருத்தாக்கத்தில் வந்துள்ளது. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இதில், பிரசன்னா, கனிகா, ஹரி, சர்வா, சிந்தூரி உள்ளிட்ட பலர் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

இத்தொடரின் அறிமுக விழாவில் இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் பேசும்போது: “வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. இன்றைய தலைமுறையில், தாத்தா, பாட்டி தொடங்கி தாய் மாமன் வரை பல முக்கியமான உறவுகளை வாழ்க்கையில் தவறவிட்டவர்கள் அதிகம். இப்படித் தவறவிட்ட அல்லது நமக்கு இல்லாமல் போன ஒருவர், நம்முடைய வாழ்க்கையில் திடீரென வந்தால் நன்றாகயிருக்குமே எனப் பல தருணங்களில் நினைத்திருப்போம். அது போன்ற விஷயங்களை நடத்திக்காட்ட ஒரு நிறுவனம் இருந்தால்…!? அது தான் ‘மேட் கம்பெனி’ இணையத் தொடர். முழுவதும் பணியிட நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.

சார் வந்துட்டார்! - மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா நடத்தி வந்த ‘சினிமா பட்டறை’யில் இயக்கம் பயின்றவர் மணி சேகர். அவரது எழுத்து, இயக்கத்தில், மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சஞ்ஜீவன்’. ஸ்னூக்கர் விளையாட்டை கதைக் களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் முதல் இந்தியப் படம். இதில், வினோத் லோகிதாஸ், திவ்யா துரைசாமி, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். “சொந்தமாக ஸ்னூக்கர் கிளப் நடத்தி, பின்னர் அதை மூடிவிட்டேன், அதில் கிடைத்த அனுபவத்திலிருந்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்” என்கிறார் மணி சேகர்.

“படத்தில் உணர்வுபூர்வமான ஒரு காட்சிக்காக மழை ‘எஃபெக்ட்’ தேவைப்பட்டது. சில காரணங்களால், அந்தக் காட்சியை மழை இல்லாமல் எடுத்துவிட முடிவுசெய்து ஷாட்டுக்குத் தயாரானோம். திடீரென மேகம் திரண்டு ஒரு மணி நேரம் மழை கொட்டியது. நாங்கள் நினைத்தபடி அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம். மழையாக பாலுமகேந்திரா சார் வந்து ஆசீர்வதித்திருக்கிறார் என்று எல்லோருமே நினைத்தோம். அடுத்த நாளும் படப்பிடிப்பில் மழை பெய்தபோது ‘சார் வந்துட்டார்’ என்று சந்தோஷத்துடன் கத்தினோம். அவர் மழையைப் போன்ற ஒருவர்தான்” என்கிறார் இயக்குநர்.

வழக்கறிஞர் மாளவிகா! - ஒன்றுக்கு மூன்று கதாநாயகிகளை தனது படங்களில் நடிக்க வைத்துவிடுவது இயக்குநர் சுந்தர்.சியின் வழக்கம். ‘காபி வித் காதல்’ படத்தில் மாளவிகா, அம்ரிதா, ஐஸ்வர்யா, ராசி கண்ணா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகம் என ஆறு கதாநாயகிகளை மூன்று கதாநாயகர்களுடன் இந்தக் ‘காதல் சண்டை’ படத்தில் மோத விட்டிருக்கிறார். இந்த ஆறு பேரில் மாளவிகா சட்டம் படித்துவிட்டு, வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றுவருகிறார். தனது வழக்கறிஞர் பயிற்சிக்கு நடுவேதான் மாடலிங், சினிமா என்று களமிறங்கியிருக்கிறார். ‘காபி வித் காதல்’ படத்தில் ஜெய்யுடன் திருமண நிச்சயம் செய்துகொண்டு, ஜீவாவைக் காதலிக்கும் பெண்ணாக வருகிறாராம்.

94வது படம்! - விக்ரமன் இயக்குநராக அறிமுகமான ‘புது வசந்தம்’ தொடங்கி, கடந்த 30 ஆண்டுகளில் 93 படங்களைத் தயாரித்திருப்பவர் ஆர்.பி.சௌத்ரி. ‘சூப்பர்குட் பிலிம்ஸ்' என்கிற பேனரில் அவர் தற்போது தயாரித்துள்ள 94வது படம் ‘காட்ஃபாதர்’. டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நயன்தாரா ஆகியோருடன் சல்மான் கான் சிறப்புத் தோற்றம் ஏற்று நடித்துள்ள முதல் தெலுங்குப் படமான இது, தமிழ், இந்தியிலும் தயாராகி உள்ளது.

குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கொடுத்துள்ள தமிழ் இயக்குநரான மோகன்ராஜா இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘லூசிஃபர்’ படத்தின் மறுஆக்கமான இதில், வில்லனாக சத்யதேவ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, தான்யா ரவிச்சந்திரன், சுனில், முரளி சர்மா, ஷாயாஜி ஷிண்டே என தமிழ், மலையாள ரசிகர்களுக்குப் பரிச்சயமான பலரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்துள்ளார்.

SCROLL FOR NEXT