‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ (Love & Love only) என்ற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத் திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் நுழைந்திருக்கிறார் இளையராஜா. இந்தப் படத்துக்காக அவரை எப்படிப் பிடித்தார் இயக்குநர் ஜூலியன் கரிகாலன்? “நான் மதுரையில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடியேறி வாழ்ந்துவருகிறேன். படம் முழுவதையும் வெளிநாடுகளில் எடுத்திருக்கிறேன். இளையராஜா சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் எனப் படத்தை அவருக்குப் போட்டுக் காட்டினேன். படத்தைப் பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்தார்.
ராஜாவின் இசைக்குப் பிறகு இந்தப் படம் ஒரு காவியமாகிவிட்டது” என்று நெகிழ்ந்துபோகும் அவர், “ ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்லும் ஒரு இந்திய இளைஞனுக்கும் ஆஸ்திரேலியப் பெண்ணுக்குமான காதலும் கலாச்சார உரசலும்தான் இந்தப் படத்தின் கதை” என்கிறார்.
தமிழில் வளரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
பொதுநிதி திரட்டல் மூலம் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் கன்னட இயக்குநர் பவன்குமார். அவரது இயக்கத்தில் வெளியான ‘யூ டர்ன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அறிமுகப் படத்தைத் தொடர்ந்து உடனடியாகத் தமிழ்ப் படமொன்றில் இரண்டாவது வாய்ப்பு அமைந்துவிட்டது. கௌதம் மேனனின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இயக்க, நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தற்போது மேலும் ஒரு தமிழ்ப் படம் அவருக்குக் கிடைத்துவிட்டது. இதில் மாதவன், விஜய் சேதுபதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ‘தமிழ் படம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி?’ ‘ வாயை மூடிப் பேசவும்’ ‘ இறுதிச் சுற்று’ ஆகிய படங்களை தயாரித்த சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தம்பதி இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கும் படம் இது.
எந்திரன் ‘2.0’ முதல் பார்வை
வரிசையாக வணிக வெற்றி கொடுத்துவரும் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர்களில் ஒருவர் கரண் ஜோஹர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஏமி ஜேக்சன், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 20-ம் தேதி மும்பையில் கரண் ஜோஹர் முன்னிலையில் வெளியிடுகிறார்கள். யூடியூப் இணையத்தில் நேரடியாக ஒளிப்பரப்பாக இருக்கிறதாம் இந்த நிகழ்ச்சி.
ரசிகர்களின் வியாபாரம்!
‘சிங்கம் 3’ படத்தின் மூலம் இயக்குநர் ஹரி - சூர்யா கூட்டணி ஐந்தாவது முறையாக இணைந்திருக்கிறது. சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வெற்றிபெற்றிருக்கும் நிலையில் மூன்றாம் பாகத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடித்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கேரளா மாநிலத்தின் திரையரங்க விநியோக உரிமையை சோப்னம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘ஆல் கேரளா சிங்கம் சூர்யா ஃபேன்ஸ் அன்ட் வெல்ஃபேர் அசோஷியேன்’ என்ற கேரளத்தின் சூர்யா ரசிகர் மன்றத்தினர் வாங்கியிருக்கிறார்கள். ரசிகர்களே தங்கள் ஹீரோ படத்தின் வியாபாரத்தில் இறங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.
உலக சினிமாவில் நுழையும் தீபிகா?
தீபிகா படுகோன் பாலிவுட்டில் வெற்றிகரமாக ஒன்பது ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். பாலிவுட்டைக் கடந்து ஹாலிவுட்டிலும் கால்பதித்த அவர், வின் டீசலுடன் ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்த கையோடு, இப்போது உலக சினிமாவில் காலூன்றுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒருநாள் ‘ஸ்க்ரீன் டெஸ்ட்’டை முடித்திருப்பது இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மும்பையில் எடுக்கப்பட்ட இந்த ‘ஸ்க்ரீன் டெஸ்ட்’டின்போது தீபிகாவை அடையாளமே காண முடியவில்லை. மஜித் மஜிதி இந்தியாவில் இயக்கப்போகும் முதல் திரைப்படமான இதில் தீபகாவை ‘மேக்-அப்’ இல்லாமல் இயல்பான ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
அண்ணனின் முயற்சி
அடுத்த ஆண்டு வெளியாவதற்காக‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. அவருடைய அப்பா விஜேந்திர பிரசாத்தின் திரைக்கதைப் பங்களிப்பு ராஜமௌலிக்கு இருப்பதைப் போலவே அவருடைய அண்ணன் எஸ். எஸ்.காஞ்சியும் அவரது கதை விவாதங்களில் கண்டிப்பாக இருப்பாராம். தம்பியைத் தொடர்ந்து இவரும் சினிமா இயக்க வந்துவிட்டார். இவர் தெலுங்கில் இயக்கியிருக்கும் திரைப்படம், ‘காட்சி நேரம்’ என்ற தலைப்பில் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. ரணதீர், மீரா ஆகிய அறிமுக நட்சத்திரங்களுடன் தெலுங்குத் திரையின் முன்னணி வில்லன்கள் நடித்திருக்கும் இந்தப் படம் நவயுக தம்பதியைச் சுற்றி நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதை.