தமிழ்நாட்டுப் பெண்தான். ஆனால் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரெஜினா. தற்போது மீண்டும் தமிழிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு ‘நெஞ்சம் மறப்பதில்லை', ‘சரவணன் இருக்க பயமேன்', ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்', ‘மாநகரம்', ‘மடை திறந்து' உள்படப் பல படங்களில் நடித்துவருகிறார். அவரைப் பேட்டி கண்டதிலிருந்து…
செல்வராகவன் இயக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் கிடைத்த அனுபவங்களைப் பற்றி...
செல்வராகவன் படத்தில் நடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் எனப் பயமுறுத்தினார்கள். அப்படி எதுவுமில்லை. நடிப்பைப் பொறுத்தவரை செல்வா சார் ஒரு ஆசிரியர். நான் எப்படி நடித்தேன் என்பது எனக்கே தெரியாமல், பல்வேறு விதமான நடிப்புகளை எனக்குள்ளிருந்து வாங்கியிருக்கிறார். நடிப்பது என்பது எப்படி வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். ஏனென்றால் நான் ஒரு வசனம் பேசினால், அந்த வசனத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு நடிப்பு இருக்கும். அவர் இப்படியெல்லாம் பண்ணவே கூடாது என்று சொல்லிக்கொடுத்தார். இதுவரை நான் நடித்த படங்களில் ‘நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் நடிப்பு சிறப்பானதாக இருக்கும்.
இந்தப் படத்தில் பேயாக நடித்திருக்கிறீர்களாமே… உங்களுக்குப் பேய் பயம் உண்டா?
பயமெல்லாம் கிடையாது. படப்பிடிப்புக்குச் செல்லும்போதெல்லாம் ஹோட்டல் அறையில் தனியாகத்தான் தூங்குவேன். நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் பேய்ப் படம் இதுவல்ல. முகத்தில் ரத்தக் கறை எல்லாம் போட்டுக்கொண்டு வந்து பயமுறுத்தும் காட்சிகள் எதுவும் இதில் கிடையாது. நீங்கள் படத்தில் பார்க்கும்போது இது பேயா அல்லது பெண்ணா என்பது உங்களுக்கே தெரியாது. அந்த கதாபாத்திரத்தை வித்தியாசமான முறையில் வடிவமைத்திருக்கிறார் செல்வராகவன்.
எழில் இயக்கத்தில் நடித்து வருவது பற்றி….
‘நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு அப்படியே எதிர்மறையான படம் ‘சரவணன் இருக்க பயமேன்'. அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். எழில் சார் படமென்றாலே காமெடிதான். இதிலும் அதற்கு அதிக இடம் இருக்கிறது.
தமிழில் அதிக படங்களை ஒப்புக்கொள்வ தில்லையே ஏன்?
நேரமின்மைதான் எனக்குப் பெரிய பிரச்சினை. தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவந்தேன். நான் நடிக்கும் தமிழ்ப் படங்களைப் பார்க்கும் மக்கள் சந்தோஷமடைய வேண்டும் என்று நினைப்பேன். ஏனென்றால் நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். எனவே தமிழில் நல்ல கதை, கதாபாத்திரங்களுக்காகக் காத்திருந்தேன். அதற்குத் தற்போது பலன் கிடைத்துவிட்டது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு வருடம் கழித்து, ஒரு படத்தில் நடித்தாலும் உங்களைப் பார்த்தவுடன் முந்தைய படத்தின் பெயரைச் சொல்லுவார்கள். எப்போதுமே மறக்க மாட்டார்கள். இப்போதுகூட என்னைப் பார்த்து ‘பாப்பா' என அழைக்கிறார்கள். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் அவர்களுக்கு அவ்வளவு பிடித்துப் போய்விட்டது. தெலுங்கு ரசிகர்கள் இந்த மாதிரி நிறைய ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள்.
இந்திப் பட உலகில் அறிமுகமாக இருக்கிறீர்கள். அதற்குள் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டீர்களே...
‘ஆன்கே' என்று ஒரு பிரபலமான படம். கண் தெரியாத மூன்று நபர்கள் ஒரு வங்கியைக் கொள்ளையடிப்பது பற்றிய கதை. தற்போது அப்படத்தின் 2-ம் பாகம் உருவாகிவருகிறது. அந்த மூவரும் ஒரு கேசினோவைக் கொள்ளையப்படிப்பதுதான் 2-ம் பாகத்தின் கதைக்களம். முதல் பாகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இந்தியில் என் முதல் படம் இதுதான். ஜனவரியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
அதன் தொடக்க விழாவில் நான் அணிந்த உடை சர்ச்சையானது. “இந்தித் திரையுலகில் நீங்கள் பெரிய நடிகை கிடையாது, அங்குள்ள முன்னணி நடிகைகளுக்கெல்லாம் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறது. நீங்கள் இந்தியில் நடிக்கும் முதல் படம் வெளியாகும் முன்பே எத்தனை பேப்பரில் உங்களுடைய புகைப்படம் வந்திருக்கிறது?” என்று ஆறுதல் கூறினார்கள். பின்வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அதை மனதில் இருத்திக்கொண்டேன். படக் குழுவினர் அனைவருமே ஆதரவாக இருந்தார்கள்.
திடீரென உங்களுக்குத் திருமணமாகிவிட்டது என்று செய்திகள் பரவியதே?
என்னுடைய இன்ஸ்டாக்கிராமில் நான் அனைவரையும் ஏமாற்றலாம் என்று முடிவு செய்தேன். ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படப்பிடிப்பில் இருக்கும்போது, நாம் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என்று போட்டால் அனைவரும் என்ன நினைக்கிறார்கள் எனப் பார்க்கலாம் என்று நினைத்தேன். திருமணக் காட்சி படப்பிடிப்பின்போது முகத்தை எல்லாம் மறைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டேன்.
ஆனால், அதனைப் பத்திரிகைகள் செய்தியாக்குவார்கள் என நினைக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எதையும் திட்டமிட்டது கிடையாது. கல்யாணத்தையும் திட்டமிட்ட மாட்டேன். அதுவா நடக்கும்போது நடக்கட்டும். கண்டிப்பாகக் காதல் திருமணம்தான் அது உறுதி.