‘சொல்வதெல்லாம் உண்மை’ (ஜீ தமிழ்) நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், “எங்கப்பா என்னைப் பொறியாளர் ஆக்கணும்னு ஆசைப்பட்டார். ஆனா நான் என்னுடைய தகுதிய மனசுல வெச்சு ஆசிரியர் ஆகலாம்னு விரும்பினேன்’’ என்று கூறியதும் பகீர் என்றது. ஆசிரியர் ஆவது மிக எளிது என்ற பொதுமனநிலை இருந்தால் ஆசியர்களின் தரம் ஏன் குறையாது? லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த நபர் கூறியதை ஆட்சேபித்தது கொஞ்சம் ஆறுதல்.
வரிகளில் தெரிந்த காட்சிகள்
மக்கள் டிவியில் ‘காலத்தை வென்ற கவிஞன்’ என்ற நிகழ்ச்சியில் நடிகர் மோகன்ராம் “‘கவலை இல்லாத மனிதன்’ என்ற படத்தை கண்ணதாசன் தயாரித்தபோது ‘தயாரிப்பு வேலையெல்லாம் வேண்டாம்’ என்று அவருக்கு நெருங்கிய பலரும் எச்சரித்தனர். படம் நஷ்டம். அன்றிலிருந்து கவலையுள்ள மனிதனாக மாறிவிட்டார் கவிஞர். அவர் எடுத்த ஒவ்வொரு படமும் அவருக்குப் பண நஷ்டத்தையே தந்தது’’ என்று கூறியவர் வேறொரு சுவாரசியமான நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். “ ‘கேள்வியின் நாயகனே’ பாடலை கண்ணதாசன் எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிப் படித்த கே. பாலசந்தர் கண்ணதாசனை நமஸ்கரித்தார். ‘நீங்க எழுதிக் கொடுத்தது பாட்டு இல்லே. ஷாட் ஷாட்டாகக் காட்சிகளைப் பிரிச்சு கொடுத்திருக்கீங்க. அப்படியே எடுக்க வேண்டியதுதான்’ என்றார்.”
சுய விமர்சனம்!
விஜய் டிவியின் ‘அச்சம் தவிர்’ நிகழ்ச்சி ‘வெட்கம் தவிர்’ என்ற பெயரில் கிண்டலடிக்கப்பட்டது. அந்த சேனலின் மற்றொரு நிகழ்ச்சியான ‘உங்களில் யார் கோடீஸ்வரர்?’ தொடரை நடத்துபவராக இருக்க விரும்புவதாக வேறொருவர் கூறினார். காரணம் ‘கேள்வியும் தெரிய வேணாம். பதிலும் தெரிய வேணாம். கம்ப்யூட்டரைப் பார்த்துப் படிச்சால் போதும்’ என்றார். இன்னும் சொல்ல முடியாத பல வார்த்தைப் பிரயோகங்களால் தனது நிகழ்ச்சிகளைத் தானே கிண்டலடித்துக்கொண்டது விஜய் டிவி. பாராட்ட வேண்டிய துணிச்சல்தான் என்றாலும் தவிர்க்க வேண்டிய கொச்சையான வார்த்தைகளைத் தவிர்க்கலாமே…