இந்து டாக்கீஸ்

மாயப் பெட்டி: அசத்தல் நடிப்பு

ஆபுத்திரன்

ஜெயா டி.வி.யில் தமிழருவி மணியனின் சிறப்புத் தேன்கிண்ணம். “வெண்ணிற ஆடை வெளியானபோது நான் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து பிரமித்துவிட்டேன். அது அவரது முதல் திரைப்படம் என்பதை நம்ப முடியவில்லை. ஐம்பத்தோராவது திரைப்படத்தில் காட்டக் கூடிய நடிப்பு முதிர்ச்சியை அவர் அதில் அழகாக வெளிப்படுத்தியிருந்தார் என்று பிரமித்தார்.

யாரை நொந்துகொள்வது?

பட்டிமன்றம் ஒன்றில் ஒரு பேச்சாளர் “எதிரில் இருப்பவர்கள் எதிரணியா, ஏழரை நாட்டுச் சனியா?’’ என்றார். இமான் அண்ணாச்சியின் நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பார்வையாளராக இருக்கும் தன் தாத்தாவை “தாத்தா தலைய நல்லா குனிஞ்சுக்கங்களேன்’’ என்கிறான். இமான் காரணம் கேட்க “அப்போதான் அவர் தலையிலே இருக்கிற ரவுண்டா இருக்கிற வழுக்கை தெரியும்’’ என்கிறான். இவை இரண்டும் அந்த நிகழ்ச்சிகளில் இடம் பெற்றவை மட்டுமல்ல; முன்னோட்டமாக சன் டி.வி. தேர்ந்தெடுத்து அளித்த காட்சிகள். யாருடைய ரசனையை நொந்துகொள்வது?

அடிக்கோடிட்ட காட்சி

ரொமெடி சேனலில் ‘A little bit of heaven’ என்ற படத்தைத் திரையிட்டார்கள். மார்லி என்ற அமெரிக்கப் பெண் பொறுப்பில்லாத உற்சாக வாழ்க்கை வாழ்பவள். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் குறைகளை மட்டுமே காண்கிறாள். அவளது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள். ஒரு நாள் அவளுக்கு புற்றுநோய் கடைசிக் கட்டத்தில் இருப்பதை அறிவிக்கிறார் டாக்டர் ஜூலியன்.

மார்லி தன் அப்பாவைச் சந்திக்கும் காட்சி சிறப்பு. அப்பா எது கூறினாலும் அவர் வருத்தப்படும்படியான பதில்களைக் கூறிவிட்டு அங்கிருந்து அவள் கிளம்புகிறாள். அப்போது அவளது அப்பா “நீ சிறுமியாக இருக்கும்போது என்னிடம் ‘நான் இந்த உலகில் வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நான் வேறொரு அப்பாவுக்கு மகளாக இருந்திருக்கலாம்’ என்று கூறினாய். அது என்னை தினம் தினம் கொன்றுகொண்டிருக்கிறது. நான் உன் மீது எக்கச்சக்க பாசம் வைத்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்’’ என்று அப்பா நெகிழ்ச்சியாகக் கூற, உருகும் மார்லி கண்ணீர் மல்க ‘நீங்கள் அதை இப்போது செய்துவிட்டீர்கள்’’ என்று கூறி அவரை அணைத்துக்கொள்கிறாள். உறவுகளைப் பேணிக் காக்க வேண்டியதையும், அன்பை வெளிப்படுத்த வேண்டியதையும் அடிக்கோடிட்ட காட்சி.

தரப்படாத விளக்கம்

“கோபத்தையும் துக்கத்தையும் அளவு தாண்ட விடக் கூடாது. புகை, மதுப்பழக்கங்கள் இருந்தால் விட்டுவிட வேண்டும். அளவுக்குத் தகுந்த வாழ்க்கை வாழ வேண்டும்’’ என்று மன இறுக்கத்தைப் போக்குவதற்கான மூன்று மந்திரங்களைக் கூறினார் மனவியல் மருத்துவர் கிஷோர் குமார் (சன் டி.வி. - விருந்தினர் பக்கம்). நியாயம்தான். ஆனால் பலரும் அறிந்திருக்கக் கூடிய இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்கல்லவா அவர் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்

SCROLL FOR NEXT