இந்து டாக்கீஸ்

தலை வணங்குகிறேன் - பிரபுதேவா சிறப்பு பேட்டி

மகராசன் மோகன்

“தேவி படம் ரிலீஸானதும் நானும் என்னோட ஃபிரெண்டும் சென்னையில இருக்கும் ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க போயிருந்தோம். ஸ்கிரீன்ல ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’னு முதல்ல என்னோட பேரை பார்த்ததும் ரசிகர்கள் கிளாப்ஸ் அடிச்சாங்க. பக்கத்துல இருந்த என் ஃபிரெண்டோட கண்கள் பெருசாச்சு. அடுத்து முதல் ஸீன்ல என்னோட முகம் வந்ததும் கதை ஒரு ப்ளாஷ்பேக் உள்ள போகும். அந்த இடத்துல நான் ‘இன்ட்ரோ’ ஆகுறதை பார்த்ததும் தியேட்டர்ல அப்படி ஒரு ஆரவாரமான கிளாப்ஸ்.

கூட இருந்த என்னோட ஃபிரெண்ட், ‘‘டேய் தப்பிச்சிட்டடா, பிரபு. உன்னை இங்கே யாரும் இன்னும் மறக்கலை!’ன்னு சொன்னான். இதுக்கு மேல என்னங்க வேணும். பன்னெண்டு வருஷத்துக்குப் பிறகு திரும்பவும் ஸ்கிரீன்ல வர்றேன். இங்கே என் மேல அப்படி ஒரு அன்பு வச்சிருக்காங்க. அந்த அன்புக்கு நான் எப்படி ரியாக்ட் பண்ணனும்னுகூட தெரியலை!’’ – என்று மெல்லிய புன்னகையைச் சிதறவிடுகிறார் பிரபுதேவா.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் ‘தேவி’ படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, அடுத்தடுத்த பட வேலைகளைத் தொடங்குவதற்கு முன் சில நாட்கள் நியூயார்க் நகருக்குப் பறந்துவிட்டார். அங்கிருந்து காற்றில் தனது உற்சாகம் குறையாத குரலை படர விடுகிறார், ‘மாஸ்டர்’பிரபுதேவா. நியூயார்க்கிலிருந்து அவர் அளித்த பேட்டி இங்கே…

‘தேவி’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு எந்த மாதிரியான மனநிலையை உருவாக்கியுள்ளது?

ஒரு சின்னப் பையன் பத்தாங் கிளாஸ் பரிட்சையில நல்ல மார்க்கோட பாஸ் பண்ணிட்டா எந்த மாதிரி மனநிலையோட இருப்பானோ, அப்படி ஒரு மனநிலையைத்தான் உருவாக்கியிருக்கு. அதுக்கு நான் அனுப்பப்போற போட்டோகிராஃப்தான் பதில் (இரண்டு கைகளையும் குவித்து அவர் தலைவணங்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்).

நடிகராக ரசிகர்கள் உங்களை ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தை இயக்கப்போகிறீர்கள் என்ற செய்திகள் வந்துள்ளதே?

நடிப்பு, டைரக்‌ஷன் ரெண்டுலயுமே கவனம் செலுத்துவேன். சென்னை திரும்பியதும் சீக்கிரமே என்னோட அடுத்த பட வேலையில இறங்கப்போறேன். அது ‘என்ன படம், ஏது’ன்னு சீக்கிரமே அறிவிக்கிறேன்.

நடனம், நடிப்பு, இயக்கம் இந்த மூன்றுக்கும் ஏற்ற மாதிரி எப்படி உடனுக்குடன் உங்களை மாற்றிக்கொள்ள முடிகிறது?

எப்பவுமே நான் என்னை ‘பெஸ்ட்’னு நினைச்சதில்லை. எனக்கு சினிமாவைத் தவிர வேறதுவும் தெரியாது. பிளைட் டிக்கெட் எடுக்குறது ஒரு சின்ன வேலைதான். இருந்தாலும் அது எனக்குத் தெரியாது. ஜனங்களுக்காக நடிக்கிறேன். எல்லாமே அவங்களோட ஆதரவுதான். அது மட்டும்தான் என்னை ஜாலியா ஓட வச்சிக்கிட்டே இருக்கு.

முழு எனர்ஜியோட ‘சல்மார்’ மாதிரியான பாடல்களில் நடனம் ஆடுகிறீர்களே?

இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலைங்க. நிஜமாவே தெரியலைங்க.

‘தோழா’, ‘மகதீரா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளதே?

ஒரு படம் உண்மை, ஒரு படம் இல்லை. இப்போதைக்கு எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் முடிவெடுப்பேன்.

இயக்குநர் ஷங்கரின் படம் என்றால் உங்கள் பாட்டு ஒன்று இடம்பெற்றுவிடும். ‘எந்திரன் 2.0’ படத்தில் நீங்கள் நடனம் அமைக்கிறீர்களா?

ஷங்கர் சார்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது நடந்தா சந்தோஷம்.

‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபுதேவா, தமன்னா இருவரும் க்ளோஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிறதே?

‘தேவி’ படத்துல வர்ற ஒரு பாட்டுக்காக பதினைந்து நாட்கள் ரிகர்சல் பண்ணினோம். தமன்னா நல்ல திறமையானவங்க. நான் ஒரு குரு ஸ்தானத்துல இருந்து அவங்கள பார்க்குறேன். அவ்வளவுதான்.

ஒரு இயக்குநராவும் தயாரிப்பாளராவும் என்ன மாதிரியான படங்கள் கொடுக்க ஆசை?

ஒரு இயக்குநரா ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ‘ஸ்பைடர் மேன்’, ‘ஜங்கிள் புக்’ மாதிரியான படங்கள் டைரக்ட் பண்ணனும். ஹாரார் படங்களும் பண்ணனும்னு விருப்பம் இருக்கு. ஒரு தயாரிப்பாளரா ஜாலியான, கமர்ஷியல் கலந்த புதுமையான படம் பண்ணனும். நடிகராவும் அப்படித்தான். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி, படம் பார்க்க வர்றவங்க சந்தோஷத்தோட திரும்புற மாதிரி நடிக்கணும். இதுதான் என்னோட ஆசை.

எப்போதும் மகன்களோடுதான் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவீர்கள். இந்த ஆண்டும் அப்படித்தானே?

அமெரிக்காவிலிருந்து அதுக்காகத்தான் புறப்பட்டுக்கிட்டிருக்கேன். எனக்கும் பட்டாசு வெடிக்கப் பிடிக்கும். என்னோட பசங்களுக்கு என்னைவிட ரொம்ப ரொம்பப் பிடிக்கும். காலையில 7 மணிக்கெல்லாம் பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுடுவோம். தீபாவளின்னா எங்களுக்கு ரொம்பவே ஹேப்பி!

SCROLL FOR NEXT