இந்து டாக்கீஸ்

மாயப்பெட்டி: பாராட்டுக்குரிய நடிப்பு

ஆபுத்திரன்

பாராட்டுக்குரிய நடிப்பு

முரசு சானலில் ‘அன்னை’ திரைப்படம். பொருளாதார நிலைமை காரணமாக தன் மகனை அக்கா பானுமதிக்கு தத்து கொடுத்துவிடுகிறார் செளகார் ஜானகி. அவன் தத்துப் பிள்ளை என்ற உண்மை மகனுக்குத் தெரிந்துவிடக் கூடாதே என்று பானுமதியும், சொந்த மகனிடம் பேசக்கூட முடியாத நிலையில் செளகார் ஜானகியும் காட்டும் உணர்வுகள் பாராட்டுக்குரியவை. ஆனால் இவர்களுக்கிடையே ஒரு பாலம்போல செயல்பட முயற்சிக்கும் (பானுமதியின் கணவராக வரும்) ரங்கா ராவின் அண்டர்ப்ளே நடிப்பு மேலும் சிறப்பு.

கேள்விகளை உருவாக்கும் படம்

‘ஜெ. மூவிஸ்’ சானலில் ‘பிரியங்கா’ திரைப்படம். இந்தியில் தாமினி என்ற பெயரில் சக்கைபோடு போட்ட திரைப்படத்தின் தமிழ் வடிவம். பிரியங்காவின் மைத்துனன் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவு கொள்கிறான். உண்மையை மட்டுமே பேசிவரும் பிரியங்காவின் வாயை அடைக்க முயற்சிக்கிறார்கள் புகுந்த வீட்டினர். வழக்கில் சம்பந்தப்படும் கிரிமினல் வழக்கறிஞர், தொழிலதிபர், இன்ஸ்பெக்டர், டி.ஐ.ஜி., டாக்டர் போன்ற ஒவ்வொருவரும் ஒருவித சுயநலத்திற்கு உட்பட்டே இந்த வழக்கில் செயல்படுவதை தெளிவாகக் காட்டி மனதில் சமூகம் குறித்த பல கேள்விகளை உண்டாக்குகிறது இந்தத் திரைப்படம்.

இதுதான் ரியாலிட்டி ஷோவா?

மெகா தொடர்களில் எப்படி சுவாரசியத்தைப் புகுத்தலாம் என்று யோசிப்பதைவிட எப்படியெல்லாம் அதை ஜவ்வாக இழுக்கலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். ஜி டிவியின் ‘தலையணைப் பூக்கள்’ ஓர் உதாரணம். அந்தக் குடும்பத்தின் இரண்டு ஜோடிகள் ஜி டிவியில் நவராத்திரிப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இதை வைத்துக் கொண்டே (இதுவரை) இரண்டு வாரங்கள் ஓட்டிவிட்டார்கள். ஒரே குடும்பத்துக்குள் இரண்டு வார ஷுட்டிங் எடுப்பதுதான் ஜி டிவியின் ரியாலிடி ஷோவா?

இது அநியாயம்!

ஸ்டார் விஜயில் வரும் ‘கனெக்‌ஷன்’ சுவாரசியமான கான்சப்ட் கொண்டது. ஆனால் கணிசமான கேள்விகள் அராஜகம். ஒருவர் அறைவதைப் போன்ற புகைப்படம். பக்கத்தில் ஒரு முக்கோணத்தின் படம். இரண்டையும் சேர்த்து அரக்கோணம் என்று கூற வேண்டுமாம்! இதுவே பரவாயில்லை என்பது போல்தான் வேறு பல கேள்விகள். ‘என்னய்யா கேள்வி இது அநியாயம்’ என்று சிலவற்றை நிகழ்ச்சியை நடத்தும் ஜகனே கேட்டுக் கலாய்ப்பது கொஞ்சம் ஆறுதல்.

SCROLL FOR NEXT