இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: ஐஸ்வர்யா ராஜேஷின் நகைச்சுவை! 

செய்திப்பிரிவு

‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக், ‘டிரைவர் ஜமுனா’ உட்பட, தற்போது தமிழில் அதிக எண்ணிக்கையில் பெண் மையப் படங்களில் நடித்துவரும் ஒரே நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது நடிப்பில் புதிதாக உருவாகியிருக்கும் மற்றொரு பெண் மையப் படம் ‘சொப்பன சுந்தரி'.

வெளிநாடுகளில் இந்திய மொழிப் படங்களை விநியோகம் செய்துவரும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ‘லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் முதல் ‘டார்க் காமெடி’ வகைப் படம் இது.

மீண்டும் நிதின் சத்யா!

‘பேச்சிலர்’ படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் சாத்தையா இயக்கும் படம் ‘கொடுவா’. ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் நிதின்சத்யா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரபலமான தொழிலாகியிருக்கும் இறால் பண்ணைதான் கதைக் களம். இறால் பண்ணையில் வேலை செய்யும் நாயகன், ஒரு கட்டத்தில் என்னவாக மாறுகிறான் என்பது கதை. இறால் பண்ணைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றியும் பேசும் இப்படம், வட்டார வாழ்க்கைமுறை, பழிவாங்கல் கதையாக உருவாகி வருகிறது.

பாலாவின் குடும்பத்திலிருந்து..

அருள்நிதி நடிப்பில், அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள படம் ‘டைரி'. அரசுப் பேருந்தில் பயணிக்கும் சிறுவனின் பாசமான அமானுஷ்ய அம்மாவாக இதில் நடித்து கவனிக்க வைத்திருக்கிறார் ரஞ்சனா நாச்சியார்.

இயக்குநர் பாலாவின் அண்ணன் மகள்தான் இந்த ரஞ்சனா. ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் தொடங்கி, முன்னணி கதாநாயகர்களின் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் 25 படங்களுக்குமேல் நடித்துவிட்ட இவருக்கு ‘டைரி’ அடையாளம் கொடுத்திருக்கிறது.

“நான் மசாலா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் பெண் தொழில் முனைவர். அதேநேரம், பா.ஜ.கவின் கலைப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறேன். இன்னொரு பக்கம் சட்டம் படித்த வழக்கறிஞரும்தான். ஒருதுறை கைவிட்டாலும் இன்னொரு துறை கைகொடுக்கும். சினிமா எனது சிறுவயதுக் கனவுகளில் ஒன்று” எனும் ரஞ்சனா, ‘மாயன்’ என்கிற படத்தில் வில்லியாக முழு நீளக் கதாபாத்திரம் ஏற்றுள்ளாராம்.

தொகுப்பாளர் ஜீவா

‘களத்தில் சந்திப்போம்’, ‘83’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, சுந்தர்.சி. இயக்கி வரும் ‘காபி வித் காதல்’ உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. இதற்கிடையில் ஆஹா ஓடிடி தளம் தயாரிக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா' என்கிற ‘ரியாலிட்டி’ நிகழ்ச்சியைத் தொகுத்தும் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதுவொரு கேம் ஷோ. முழுவதும் உள்ளரங்கில் படமாக்கப்படும் இதில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் ஜீவாவுடன் விளையாட இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியின் புரமோ தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆர்யாவின் வில்லன்!

வேற்றுக்கிரகவாசியை மையமாக வைத்து, தமிழில் எதிரும் புதிருமாக இரண்டு படங்கள் தயாராகியிருக்கின்றன. ரவிகுமார் எழுத்து, இயக்கத்தில் வேற்றுக்கிரகவாசியை ஓர் உணர்வுபூர்வமான கதாபாத்திரமாக வடித்திருக்கும் ‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். இரண்டாவது படம் ஏலியனை உயிர்க்கொல்லி வில்லனாக வடித்து, ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருக்கும் ‘கேப்டன்’. இந்தப் படம் பற்றி ஆர்யா கூறும்போது “இதுவரையிலான எனது சினிமா வில்லன்களில் இந்த வில்லனுடன் மோதியது முற்றியும் புதிய அனுபவம்.

ஏலியன் உடனான சண்டைக் காட்சிகள் மனித வில்லனுடன் மோதுவதுபோல் இருக்காது. கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இயக்குநர் பிடிவாதமாக இருந்து ‘தி பெஸ்ட்’டைக் கொண்டுவந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT