‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பன்னீர் செல்வம் தனது அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க விஜய் சேதுபதி நாயகனாக ஒப்பந்தமானார். இப்படத்துக்கு முதலில் நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், படப்பிடிப்பு தேதிகள் பிரச்சினையால் விலக, மஞ்சிமா மோகனிடம் பேசினார்கள். அவரும் விலக, தற்போது நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் த்ரிஷா!
மீண்டும் வா அருகில் வா
படத்தின் கிளைமேக்ஸுக்குப் பிறகு கதையின் கருவை வெளிப்படுத்தும் திரைக்கதையுடன் களமிறங்கியிருக்கிறார் ஜெ. ஜெய ராஜேந்திர சோழன். ஒரு மனநல மருத்துவரை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படம் ‘மீண்டும் வா அருகில் வா’. “ தமிழ் சினிமா வரலாற்றில் இது நிச்சயமாக ஒரு புதிய முயற்சி” என்கிறார் இயக்குநர். இந்தப் படத்தின் நாயகன் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப். “அறிமுகப் படத்துக்குப் பிறகு பல கதைகள் கேட்டதில் இந்தக் கதை மட்டுமே எனக்குப் பிடித்தது” என்கிறார் இந்த இளம் நாயகன்.
தமிழ் பேசவிருக்கும் புலி
கடந்தவாரம் வெளியாகி கேரள பாக்ஸ் ஆபீஸைக் கலங்கடித்துவரும் படம் ‘புலி முருகன்’. மோகன்லாலுக்கு ‘திருஷ்யம்’ படத்தைவிட மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜீ, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தின் மற்ற மொழிகளின் மறு ஆக்க உரிமைக்குப் போட்டி உருவாகும் அளவுக்குப் படத்தின் கதை, டோலிவுட் மற்றும் பாலிவுட் படவுலகைக் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை கைப்பற்றியிருக்கிறாராம். உடனடியாக இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் மறு ஆக்கம் செய்யவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க மூன்று மொழிகளைச் சேர்ந்த நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம்.
த்ரில் அனுபவம்
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாக ‘2.0’ என்ற தற்காலிகத் தலைப்புடன் தயாராகிவருகிறது அதன் இரண்டாம் பாகம். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துவருகிறார் ஏமி ஜாக்ஸன். “ ரஜினியுடன் நடித்து வருவது த்ரில் அனுபவமாக இருந்துவருகிறது. தற்போது 60 நாட்கள் அவருடன் நடிக்க இருக்கிறேன். இந்தப் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்த ஆண்டு பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பை இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார்” என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கூறியிருக்கிறார் ஏமி.
விஷாலுக்கு வில்லன் ஆர்யா
புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இப்படத்தின் கதையைக் கேட்டவுடனே விஷால், தானே நடித்து தயாரிப்பதாகக் கூறிக் களமிறங்கியிருக்கிறார். ‘தெறி’ படக்குழுவான ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியமஸ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகிறார்கள். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த ஆக்ஷன் கதையில் சுவாரசியம் என்னவென்றால் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவிருக்கிறார். விஷாலே ஆர்யாவிடம் பேசி ஒப்புக்கொள்ளச் செய்திருக்கிறார்.
திரும்பி வந்த மியா
‘சைத்தான்’ படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கிவிட்டது. இப்போது ‘எமன்’ படத்தில் நடித்துவருகிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தில் முதல்முறையாக அப்பா-மகனாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மியா ஜார்ஜ். ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி யிருந்தாலும் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் மலையாளப் படங்களை ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டவரை மறுபடியும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
முடிந்தது பாம்புச் சட்டை
வெற்றிகரமான இயக்குநராக இருந்து பிறகு நகைச்சுவை குணச்சித்திர நடிகராகத் தொடரும் மனோ பாலா, ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். முதல்படம் பெரிய வெற்றியாக அமைந்ததைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது தயாரிப்பை ஒரேமூச்சில் தயாரித்து முடித்திருக்கிறார். ‘பாம்புச் சட்டை’ எனத் தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா - கீர்த்தி சுரேஷ் ஜோடி. காதல் காட்சிகள் ரசனையோடு படமாக்கப்பட்டிருக்கின்றனவாம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆதம் தாசன்.