இந்து டாக்கீஸ்

திரையிசை: உன் சமையலறையில்

சுரேஷ்

பிரகாஷ்ராஜ் தமிழில் இயக்கும் இரண்டாவது படம் உன் சமையலறையில். மலையாளப் படமான சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் தமிழ் வடிவமே இப்படம். இசை இளையராஜா, பாடல்கள் அவரது ஆஸ்தான பாடலாசிரியர் பழநிபாரதி.

இளையாராஜாவின் முத்திரையான மெலடி பாடல்கள்தான் இந்த ஆடியோவின் அடையாளம். "ஈரமாய் ஈரமாய்", "தெரிந்தோ தெரியாமலோ" என இரண்டு மெலடிகள். மெட்டு, வசீகரிக்கும் குரல்கள், பின்னணி இசை என அனைத்து அம்சங்களிலும் கவர்கிறது ரஞ்சித், விபவரி பாடியுள்ள ஈரமாய் ஈரமாய் பாடல்.

என்.எஸ்.கே. ரம்யா, கார்த்திக் பாடியுள்ள "தெரிந்தோ தெரியாமலோ" முந்தைய பாடலுக்குக் குறையாத மெல்லிசைப் பாடல். இளையராஜாவே பாடியுள்ள "காற்று வெளியில்" பாடலின் தன்மையும் குரலும், உறவில் இடைவெளி விழுந்த ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

படத்தின் முதல் பாடலான "இந்த பொறப்புதான்" தமிழகத்தின் பிரபல உணவு வகைகளை விவரிக்கிறது. எச்சில் ஊற வைக்கும் வரிகள். இந்துஸ்தானி பாணியில் அமைந்த எளிமையான மெட்டும் முணுமுணுக்க வைக்கிறது. பிரச்சினை என்னவென்றால் கைலாஷ் கேர் பாடல் வரிகளை உச்சரிக்கும் விதம்தான். இந்த இடத்தில் சால்ட் அண்ட் பெப்பரில் வரும் மலையாளப் பாடலான "செம்பாவை" ஒப்பிடத் தோன்றுகிறது. மலையாள நாட்டுப்புற பாணியில் சட்டென்று ஈர்க்கும் அந்தப் பாடலின் இனிமை இதில் மிஸ்ஸிங்.

SCROLL FOR NEXT