ஹாலிவுட்டின் கதைப்பட இயக்குநர்களில் மூத்தவரான ராபர்ட் ஜெமெக்கிஸ் இயக்கத்தில், 1994இல் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. ராபர்ட் ஜெமெக்கிஸுக்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும் படத்தின் நாயகன் டாம் ஹாங்க்ஸுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் ஒருசேரக் கொண்டு சேர்த்த படம்.
இதை 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ‘லால் சிங் சத்தா’ என்கிற தலைப்பில் மறுஆக்கம் செய்து நாயகனாகவும் நடித்திருக்கிறார் அமீர்கான்.
அவரது காதலியாக கரீனா கபூரும் ராணுவத்தில் பழகிய உயிர் நண்பனாக நாக சைதன்யா அக்கினேனியும் நடித்திருக்கிறார்கள். தமிழ் மொழியிலும் வெளியாகும் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்.
மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஜோடி!
பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இவானா. அதில், இவானாவின் காதலராக ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார். தற்போது பாலாவின் உதவியாளர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் ‘காம்ப்ளெக்ஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இவானா.
இரட்டைக் குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ‘லவ் டுடே’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கோமாளி’. அதை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அடுத்து தானே இயக்கி நாயகனாக நடிக்கும் ‘லவ் டுடே’ படத்தில் இவானாதான் நாயகி. இந்த இரு படங்கள் தவிர, மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
கன்னடத்திலிருந்து ஒரு பயோபிக்!
ஒரே ஒரு சரக்குப் போக்குவரத்து வாகனத்தைக் கொண்டு, 1976இல் தனது சுயதொழில் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் படிப்படியாக உயர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய ‘லாஜிஸ்டிக்’ சாம்ராஜ்ஜியத்தை நிறுவிக் காட்டியவர் கர்நாடகத்தைச் சேர்ந்த விஜய் சங்கேஷ்வர்.
அவரது மகன் ஆனந்த் சங்கேஷ்வர் என்பவர், தனது தந்தையின் வெற்றிக் கதையை ஒரு ‘பயோபிக்’ திரைப்படமாகத் தயாரித்திருக்கிறார். ‘விஜயானந்த்’ என்கிற பெயரில் தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
தடயவியல் நிபுணராக அமலா பால்!
மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில், பெண் மையக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்திருக்கும் படம் 'கடாவர்'. அமலா பாலுடன் ஹரிஷ் உத்தமன், ராம்தாஸ், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா என நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
இதில், தொடர் கொலை வழக்கு ஒன்றினை புலனாய்வு செய்யும் தடயவியல் துறை நிபுணராக, பத்ரா என்கிற கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்திருக்கிறார். தொடர் கொலைகளின் தடயங்களை நெருங்கும் பத்ரா, கொலை களுக்கான பின்னணியையும் கொலையாளி யார் என்பதையும் கண்டறிவதுதான் படம். டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று ‘கடாவர்’ வெளியாகிறது.‘காம்ப்ளெக்ஸ்’ படத்தில் இவானா