இந்து டாக்கீஸ்

கலக்கல் ஹாலிவுட்: மூன்றாம் தாக்குதல்

ஆர்.சி.ஜெயந்தன்

அமெரிக்காவின் தற்கால நவீன இலக்கியத்துக்கும் வெகுஜன எழுத்துக்கும் நடுவில் நின்று எழுதிப் புகழ்பெற்றவர்களில் முக்கியமான ஒருவர் டான் பிரவுன். இவரது ‘டாவின்ஸி கோட்’ 2006-ல் திரைப்படமாகி உலகைக் கலங்கடிக்கும் முன்னரே 2003-ம் ஆண்டின் மிக அதிகம் விற்பனையான நாவலாகப் புகழ்பெற்றது. 24 மணிநேரத்துக்குள் நடைபெறும் விறுவிறுப்பும் பரபரப்பும் கொண்ட மர்ம, துப்பறியும் த்ரில்லர் வகை நாவல்கள் இவருடையவை. நீண்ட நெடிய கத்தோலிக்க கிறிஸ்தவ மதப் பாரம்பரியத்தில் அவிழ்க்க முடியாத பல கேள்விகளுக்கு விடைகளைக் கண்டடைய சாகசங்களை மேற்கொள்ளும் டராபர்ட் லேங்டன்தான் இவரது நாவல் வரிசையின் முதன்மைக் கதாபாத்திரம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மதக் குறியீட்டியல் துறையின் பேராசிரியராகச் சித்தரிக்கப்படும் இவர், புதையல் வேட்டையில் ஈடுபடும் ஒரு ஆக்‌ஷன் பட நாயகன் போல பார்வையாளர்களைக் கலங்கடிப்பவர். மடங்கள், பேராயர்களின் அரண்மனைகள், தேவாலயங்கள், நினைவுச் சின்னங்கள், புனிதர்களின் கல்லறைகள் ஆகிவற்றில் ஒளிந்திருக்கும் அடையாளங்களின் உண்மையான பொருள், ரகசியக் குறியீடுகள், அவை சுட்டும் கடந்தகால எதிர்கால நிகழ்வுகளின் மறைபொருள், இதில் சம்பந்தப்பட்டிருக்கும் மதம் சார்ந்த புள்ளிகள், இவற்றுக்கு இடையிலான சாத்தானின் சதி ஆகியவற்றை மையப்படுத்தி விடைதேடி அலையும் ராபர்ட் லேங்டனின் கதாபாத்திரம் கற்பனையானது. நாவலாசிரியர் சித்தரிக்கும் ரகசிய உலகமும் கற்பனையானது.

ஆனால் பிரவுனின் எழுத்துக்கள் நாவலாக வெளிவரும்போதும் பிறகு அவை திரைப்படமாகும்போதும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பையும் சர்ச்சையையும் சந்தித்துவந்திருக்கின்றன. எனினும் அமெரிக்காவில் ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்’, ‘டாவின்ஸி கோட்’ ஆகியவை அதிகம் வசூல் செய்திருக்கின்றன.

டான் பிரவுன் “எனது புத்தகங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு விரோதமானவை அல்ல, நானே தொடர்ந்து ஆன்மிகப் பயணத்திற்குள் செல்பவன்தான். எனது எழுத்துக்கள் ஆன்மிகக் கருத்து விவாதத்தை ஊக்குவிக்கும் பொழுதுபோக்குக் கதைகள் மட்டுமே” என்று கூறிச் சமாளித்திருக்கிறார்.

‘ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்’, ‘டாவின்ஸி கோட்’ படங்களைத் தொடர்ந்து தற்போது அவற்றின் தொடர்ச்சியாக ‘இன்ஃபெர்னோ’ என்ற தலைப்பில் மூன்றாம் பாகமாக உலகம் முழுவதும் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகிறது.

இந்தியாவில் அதன் பிராந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றத்துடன் வருகிறது. நடிப்புக்காக ஆஸ்கர் விருது வென்ற டாம் ஹங்க்ஸ் பேராசிரியர் ராபர்ட் லேங்டன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT