சந்தானத்தின் புதிய ஜோடி
மாடலிங் வழியே சினிமாவுக்கு வந்த காலம் போய் தற்போது நவீன நாடகங்கள் வழியே சினிமாவில் வாய்ப்புத் தேடும் உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் வடமாநிலப் பெண்கள். மராத்தி நவீன நாடகங்களில் நடித்த அனுபவத்துடன் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்
வைபவி ஷாண்டிலியா. அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்க, சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து முடித்திருக்கிறார் வைபவி. “மூன்று மாதங்கள் கதாநாயகி தேடிக் காத்திருந்தோம். அந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் கொடுத்துவிட்டார் வைபவி. பரதம், கதக் நடனங்களில் தேர்ந்தவர். அழகும் திறமையும் ஒருங்கிணைந்த வைபவி தமிழர் ரசிகர்களைக் கவர்ந்துவிடுவார்” என்று உறுதியளிக்கிறார் இயக்குநர்.
ஜூனியர் காஜல்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் பிரபுதேவாவை ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். விரைவில் வெளியாகவிருக்கும் அந்தப் படம்‘தேவி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியை இயக்குகிறார் விஜய். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, திருவின் ஒளிப்பதிவு எனத் தனதுகூட்டணியை மாற்றியிருக்கும் விஜய், இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக
ஷாயிஷா சேகல் என்ற மும்பை அழகியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இவர் பழம்பெரும் பாலிவுட் நடிகை சாயிரா பானுவின் பேத்தி. அஜய் தேவ்கனுடன் இந்தியில் நடித்துவருகிறார். தெலுங்கு, தமிழ் என்று தென்னகத்திலும் தன் கணக்கைத் தொடங்கியிருக்கும் ஷாயிஷாவை ஜூனியர் காஜல் என்று வருணிக்கிறார்கள் டோலிவுட்டில்.
பக்தி ரசம்
தமிழ் சினிமாவில் இனி பக்தி ரசத்தையே காண முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது ‘அரண்மனை 2’ படத்தில் ஒரு அம்மன் பாடலை வைத்து அதில் குஷ்புவை நடனமாட வைத்து ஆச்சரியப்படுத்தினார் சுந்தர்.சி. தற்போது நேரடியாகத் தமிழில் தயாரிக்கப்பட்ட முழுநீள பக்திப் படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை பக்திப் பரவசத்தில்ஆழ்த்தவிருக்கிறது. அந்தப் படம் இ.ஜெயபால் சுவாமி எழுதி,இயக்கித் தயாரித்திருக்கும் ‘மேற்கு முகப்பேர் கனக துர்கா’. சென்னையில் கோவில் கொண்டிருக்கும் மேற்கு முகப்பேர் அம்மனின் அற்புதங்களை விவரிக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் மகி, சரவணன்,
திவ்யா நாகேஷ், ஜான்விகா உட்பட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கிறதாம். இந்தப் படத்துக்கு ஐந்து பக்திப் பாடல்களை வழங்கி அசத்தியிருக்கிறாராம் ‘தேனிசைத் தென்றல்’ தேவா.
மோதும் படங்கள்
வரும் தீபாவளிப் பண்டிகைக்குக் கார்த்தியின் ‘கஷ்மோரா’, ஜி.வி.பிரகாஷ்குமாரின் ‘கடவுள் இருக்கான் குமாரு’, தனுஷின் ‘கொடி’ விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. தீபாவளிப் பட்டியலில் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ ,விஷாலின் ‘கத்திச் சண்டை’ ஆகிய படங்களும் இருந்தன. ரிலீஸ் தேதியை முன்னதாக அறிவித்து, சொன்ன தேதியில் வெளியிடும் விஷால் தன் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துவிட்டது ஆச்சரியம்தான். அதிக எண்ணிக்கையில் திரையங்கு கிடைக்காததுதான் வெளியீட்டைத் தள்ளிவைப்பதற்குக் காரணம் என்கிறார்கள் விஷால் தரப்பில். தற்போது சிம்புவும் தனது படத்தைத் தள்ளிவைத்துவிட்டார். விஷால் படம் எப்போது வெளியாகுமோ அப்போது சிம்புவின் படமும் வெளியாகும் என்கிறார்கள் சிம்பு வட்டாரத்தில்.
உலகப் புகழ்பெற்ற டோக்கியோ சர்வதேசப் பட விழாவில் கலந்துகொள்ளத் தேர்வாகியிருக்கிறது மாதவனின் ‘இறுதிச்சுற்று’. ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் நடிக்க வருவதைத் தவிர்த்து சென்னை பக்கம் அதிகம் தலைகாட்டாத
மாதவனின் அடுத்த சுற்று
மாதவன், ‘ஓடு ராஜா ஓடு’ என்ற தமிழ்ப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதற்காகச் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அடுத்து தமிழில் யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் என்று துருவியதில் ‘சார்லி’ மலையாளப் படத்தின் தமிழ் மறு ஆக்கத்தில் துல்கர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலோடு கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்ற சூடான தகவலும் கிடைக்கிறது.
ஸ்ரீ திவ்யாவின் வருத்தம்
சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது, ஐந்து லட்சம் நன்கொடையாக வழங்கினார். ஸ்ரீ திவ்யா. விரைவில் வெளியாக இருக்கும் ‘ரெமோ’ படத்தில் இவருக்குக் கவுரவ வேடம். இந்தப் படம் தவிர கார்த்தியின் ‘கஷ்மோரா’, சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு ஜோடியாக ‘மாவீரன் கிட்டு’, அட்லி தயாரித்துவரும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’படத்தில் ஜீவாவுக்கு ஜோடி என பிஸியாக நடித்துவருகிறார்.
விஷால், கார்த்தி போன்ற மாஸ் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டாலும் அஜித், விஜய், சூர்யா படங்களில் நடிக்க இன்னும் அழைப்பு வரவில்லையே என்று தனது நட்பு வட்டத்தில் புலம்பித் தவிக்கிறாராம் திவ்யா.
முதல் கவுரவம்
விக்ரம் ‘லவ்’ எனும் திருநங்கை கதாபாத்திரத்தில் கலக்கிய ‘இருமுகன்’ வெற்றிபெற்றுவிட்டது. அடுத்து சிவகார்த்திகேயன் பெண் நர்ஸ் வேடத்தில் நடித்திருக்கும்‘ரெமோ’ வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படங்களின் வரிசையில் ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’படங்களின் மூலம் கவர்ந்த
கதிர் பெண் வேடம் போட்டுள்ள ‘சிகை’ வெளியீட்டுக்கு முன்பே ஆல் லைட்ஸ் இந்தியா சர்வதேசப் படவிழாவில் ‘ப்ளாஸம்’ என்ற ஆங்கிலத் தலைப்புடன் திரையிடப்பட்டுப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. இன்னும் பல சர்வதேசப் பட விழாக்களின் போட்டிப் பிரிவுக்கும் பயணப்பட இருக்கிறதாம் இந்தப் படம். பெண் வேட ராசி?