சிரிக்க வைத்து, சிந்திக்க வைப்பதுடன் மக்களின் பொதுக்கருத்தைப் பிரதிபலிப்பவையாகவும் மீம்கள் இருக்கின்றன. அவற்றில் சமூக அக்கறையுடன் செய்யப்படும் மீம் விமர்சனங்கள், ஒரு பெருந்தொற்றைப் போல் பரவி, டிஜிட்டல் யுகத்தில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘மீம் பாய்ஸ்’ என்கிற இணையத் தொடர், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் நான்கு கல்லூரி மாணவர்களுக்கும் அதன் நிர்வாகத் தலைவருக்கும் இடையில் நடக்கும் ‘மீம்’ யுத்தத்தைக் கதைக் களமாகக் கொண்டிருக்கிறது.
ஆதித்யா பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா ஆகிய நான்கு மாணவர்கள் தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு ‘மீம் பாய்ஸ்’ என்கிற மீம் பக்கத்தை நடத்தி வருகிறார்கள். ‘ஐபி’ முகவரியை வைத்துக் கண்டுபிடிக்க முடியாத அந்தப் பக்கத்தின் மூலம், தங்கள் பல்கலைக்கழகத்தின் தலைவர் குரு.சோமசுந்தரத்தின் அடக்குமுறைகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் தோலுரிக்கிறார்கள்.
இந்த மாணவர்களின் ‘மீம்’கள் அடுத்தடுத்து பெரிய வரவேற்பைப் பெற, பல்கலைக்கழகம் அதுவரை ஈட்டியிருந்த நற்பெயர் பொதுவெளியில் கெடத் தொடங்குகிறது. ‘மீம் பாய்ஸ்’ யாரெனக் கண்டறிந்தால் மட்டுமே அவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கி, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை சோமசுந்தரத்துக்கு உருவாகிறது.
இதனால், மீம் பாய்ஸ் யாரெனக் கண்டுபிடிக்க அவர் என்ன மாதிரியான வழிமுறைகளைக் கையாண்டார், அதற்கு மாணவர்கள் எப்படி பதிலடி கொடுத்தனர், ஆட்டத்தின் இறுதியில் மீம் பாய்ஸ் சிக்கினார்களா, இல்லையா என்பதை நோக்கி எபிசோட்கள் விறுவிறுப்பாக விரைகின்றன.
முதல் நான்கு அத்தியாயங்கள் மெல்ல நகர்ந்தாலும் கடைசி 4 அத்தியாயங்கள் அதிரடியாகப் பரபரக்கின்றன. ‘மீம் பாய்ஸ்’களுக்கான நட்சத்திரத் தேர்வு சிறப்பு. அவர்கள் சிறப்பான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்கள். குரு சோமசுந்தரம் என்கிற நடிப்பு யானைக்குச் சரியான தீனி. மனிதர் பிய்த்து உதவியிருக்கிறார்.
பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட சில தனியார் பல்கலைக்கழகங்களின் தரம் என்ன என்பதைச் சமரசம் இல்லாமல் பகடி செய்திருக்கிறார் தொடரை இயக்கியிருக்கும் அருண் கௌசிக்.
மாணவியர் விடுதியின் சுவரில் இருக்கும் ஆளுயர ஓட்டை பார்வையாளர்களுக்குக் காது குத்து. ‘மீம்’ எனும் ஊடகத்தைக் கொண்டு பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டை நான்கு மாணவர்களால் சரிசெய்யமுடியும் என நம்ப வைப்பதில் தொடர் வெற்றிபெற்றுவிடுகிறது. ஆனால், தொடரில் காட்டப்படும் மீம்களை இன்னும் ‘கிரியேட்டிவ்’ ஆக உழைத்து உருவாக்கியிருந்தால் தொடருக்கு மேலும் ஈர்ப்பு கூடியிருக்கும்.