என்னமோ நடக்குது’ படத்தின் மூலம் கடந்த ஆண்டு கவனிக்கத்தக்க இயக்குநராக அறிமுகமானவர் ராஜபாண்டி. நாயகன் விஜய் வசந்த், தயாரிப்பாளர் உள்ளிட்ட தனது தொழில்நுட்பக் குழுவுடன் ‘அச்சமின்றி’ என்னும் தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதைக்காகப் பாராட்டு பெற்ற அவரை சந்தித்துப் பேசியதிலிருந்து…
சினிமாவுக்கு வந்த பின்னணி...
சொந்த ஊர் மதுரை. பிபிஏ முடித்துவிட்டு சென்னை வந்து அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்றேன். நான், ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், வெங்கடேஷ், சக்தி சரவணன் அனைவரும் ஒரே பேட்ச். ‘திருடா திருடா’ படத்தில் மணிரத்னம் சாருக்கு ஸ்கிரிப்ட் அசிஸ்டெண்டாகப் பணிபுரிந்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு நானும் நண்பர்களும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, டெலிபிலிம்கள், சீரியல்கள், குறும்படங்கள் எல்லாம் பண்ண ஆரம்பித்தோம். இளையராஜாவின் தயாரிப்பு நிறுவனமான பாவலர் கிரியேஷன்ஸில் எனக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி. பாஸ்கரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் படத்தொகுப்பாளர்கள் லெனினும் வி.டி. விஜயன் சாரும். எதிர்பாராத விதமாக ஆர்.டி. பாஸ்கர் இறந்துபோனதால் எனது முதல் வாய்ப்பு அப்படியே கைவிடப் பட்டுவிட்டது. பிறகு தாமினி என்டெர்பிரைசஸ் நிறுவனம் எனக்கு முன்பணம் கொடுத்தது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில், தற்போது ‘24’ படத்தை இயக்கியிருக்கும் விக்ரம் கே.குமார், சிம்புவைக் கதாநாயகனாக வைத்து அப்போது ‘அலை’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் தோல்வியடைந்ததால் எனது படத்தையும் அந்த நிறுவனம் கைவிட்டுவிட்டது. இப்படி இரண்டு முறை வாய்ப்புகள் கைநழுவிப்போனதில் தொடந்து 12 ஆண்டுகள் போராடும்படி ஆகிவிட்டது.
பிறகு எப்படி முதல் திரைப்படத்தை இயக்கினீர்கள்?
வசந்த் தொலைக்காட்சிக்காக ‘மவுனராகம்’ என்ற டெலிபிலிமை எழுதி, இயக்கினேன். அதைப் பார்த்த வசந்த் அன் கோ உரிமையாளர் வசந்தகுமார், “இவ்வளவு நன்றாகச் செய்திருக் கிறீர்களே… நீங்கள் படம் இயக்கலாமே?” என்று சொன்னார். அதற்காகத்தான் சென்னை வந்தேன் என்று என் ப்ளாஷ்பேக்கைச் சொன்னேன். உடனே அவர் “கடந்துபோனதைப் பற்றி நினைக்க வேண்டாம். நீங்கள் நேசித்த சினிமா உங்களைக் கைவிடவில்லை பார்த்தீர்களா! திரைப்படத் தயாரிப்பைப் பார்த்துக்கொள்ளும் எனது மகன் வினோத்குமாரை உடனே பாருங்கள்” என்றார். அவரைச் சந்தித்தபோது சினிமா பற்றிய எனது எண்ணங்களும் பார்வைகளும் அவருடன் அப்படியே ஒத்துப்போயின. ‘என்னமோ நடக்குது’ படத்தின் ஒரு வரிக் கதையை அவரிடம் சொன்னதுமே அவருக்குப் பிடித்துப்போய் உடனடியாகத் திரைக்கதை எழுதுங்கள் என்றார். தயாராக இருக்கிறது என்று அவரிடம் திரைக்கதையைக் கொடுத்தேன். இப்படித்தான் அந்தப் படத்தைத் தொடங்கினோம்.
‘என்னமோ நடக்குது’ படத்தின் திரைக்கதைக்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது. நேர்த்தியான திரைக்கதை அமைக்க எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?
அதற்கு முழுக் காரணமும் திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஆசிரியர்களாக இருந்த ஹரிஹரன், ரவிராஜ் போன்ற மிகச் சிறந்த மாஸ்டர்களையே சேரும். அவர்கள்தான் உலக சினிமா என்று நாம் கொண்டாடுகிற கலைப்படங்களுக்கும் வெகுஜனப் படங்களுக்கும் எழுதப்படும் திரைக்கதைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றி வெகு நுட்பமாகச் சொல்லிக்கொடுத்தார்கள். இன்றைக்கு அதுபோன்ற ஆசிரியர்கள் இல்லை. சில பேர் நன்றாகக் கதை சொல்வார்கள். ஆனால், எடுக்கும்போது அது மாறிவிடும். நான் கற்றுக்கொண்ட வரை, ஒரு காட்சியை அல்லது நிகழ்வை, சம்பவங்களின் கோவையை எப்படி காட்சிகளாக மாற்றி எடுக்கிறோம் என்பதில் கதைக்கும் படப்பிடிப்புக்கும் இடையில் இருக்கும் அடித்தளம் திரைக்கதைதான் என்று நம்புகிறேன். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப்படத்தில் ஒரு காட்சியின் முடிவு அடுத்த காட்சியின் தொடக்கமாக இருக்கும். ஒரு நேர்த்தியான திரைக்கதை, பார்வையாளருடன் இருக்கும் தொடர்பை ஒரு காட்சியில்கூட அறுத்துக்கொள்ளாது. சினிமா என்பதே திரைக்கதைதான்.
‘அச்சமின்றி’ என்ற தலைப்பு கதைக்கான தலைப்பா?
கண்டிப்பாக. கொஞ்சம் கூட கூச்சமோ அச்சமோ படாமல் பல விஷயங்கள் நமக்கு மத்தியில் நடந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாகக் கல்வியில் எல்லை மீறி நடந்துகொண்டிருக்கிறது. கல்வி வியாபாரத்தை நாமே அங்கீகரிக்கிறோம். என்ன ஏது என்று விசாரிக்காமல் கண்முடித்தனமாக அல்லது கற்பனையாக சில பள்ளிக்கூடங்கள்தான் தரமானவை என்று நமக்கு நாமே நினைத்துக்கொள்கிறோம். நள்ளிரவு முதல் வரிசையில் காத்திருந்து ஒரு லட்சம் கொடுத்துக் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கிறோம். இந்த மாயையிலிருந்து வெளியே வர நாம் முயற்சிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அரசாங்கம்தான் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் நம்மிலிருந்து தொடங்கினால்தான் மாற்றம் வரும். காரணம் நாம்தான் அரசாங்கம். இந்தக் கல்விப் பிரச்சினையை நேரடியாக அணுகாமல் வேறொரு கதையில் இதைப் பொருத்தியிருக்கிறேன். நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள். விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, வித்யா. இந்த நால்வருக்கும் நான்கு சம்பவங்கள் நடக்கின்றன. இவை எப்படி ஒரு புள்ளியில் வந்து இணைகின்றன என்பதுதான் திரைக்கதை.
சமூக அநீதிகளுக்கு எதிராகத் திரைப்படங்களில் கொதித்து எழுகிறவர்கள் பெரும்பாலும் மாஸ் ஹீரோக்கள்தான். ட்ரைலரைப் பார்க்கும்போது வளர்ந்துவரும் நாயகனை வைத்து ஒரு மாஸ் ஹீரோ கதையை எடுத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது?
கதாநாயகனின் எல்லா சாகசங் களையும் முந்திச் செல்லக்கூடியதாக இந்தப் படத்தில் திரைக்கதை இருக்கும் என்பதைப் படம் பார்க்கும் போது உணர்வீர்கள். தவிர, பக்கத்து வீட்டுப் பையன் போல இருக்கும் விஜய் வசந்தின் தோற்றத்தை மாற்றியிருக்கிறோம். விஜய் வசந்தும் தனது கதாபாத்திரம் எல்லோரையும் பிரதிபலிக்கக்கூடியது என்பதை உணர்ந்து செய்திருக்கிறார். இயல் பாகவே அமைந்துவிட்ட தென்னிந்திய முகச்சாயலும் ஈர்ப்பு மிக்க கண்களும் அவருக்குப் பெரிய அனுகூலங்கள். கதைத் தேர்வில் இன்னும் அவர் கவனமாக இருந்தால் விரைவிலேயே முன்னணி இடத்துக்கு வந்துவிட முடியும்.
உங்களது தொழில்நுட்பக் குழுவை மீண்டும் பயன்படுத்தியிருக்கிறீர்களே?
எங்கள் கூட்டணி தொடரும். எங்கள் கூட்டணியின் வெற்றியும் தொடரும். ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் உடனான நட்பு, திரைப்படக் கல்லூரியில் டிப்ளமோ பிலிம் எடுக்கிறபோது தொடங்கியது. இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரனுக்கு ரத்தத்திலேயே இசை இருக்கிறது. தேசிய விருதுபெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல்., தற்போது கபாலி படத்தின் படத்தொகுப்பாளர். அதேபோல் தயாரிப்பாளர் வினோத்குமார் நல்ல கதைகளை நேசிக்கக்கூடியவர். மிகச் சிறந்த படங்களின் தயாரிப்பாளராக அவர் உருவாகிவருவார்.