இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: ‘கார்கி’யாக வரும் சாய் பல்லவி!

செய்திப்பிரிவு

‘தென்னிந்தியாவின் சுந்தரி’ என நான்கு மாநில ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கதாநாயகி சாய் பல்லவி. நடிப்பு, நடனம், தன் கருத்துகளைத் துணிச்சலுடன் பொதுவெளியில் பகிர்வது என கவர்ந்து வருகிறார்.

அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதற்கிடையில், தற்போது சாய்பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கார்கி’ திரைப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது.

நிவின் பாலி நடித்த ‘ரிச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கும் படம் இது. பிளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் புரொடெக்ஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ், கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

கார்கி என்கிற பெண்ணுக்கும் அவளுடைய தந்தைக்கும் இடையிலான பயணமாக இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி பதிப்புகளுக்கும் சாய் பல்லவி ‘டப்பிங்’ பேசியிருக்கிறார்.

மூன்றாம் தாக்குதல்!

தமிழகத்தில் வசூல் அறுவடை செய்துவிட வேண்டும் என்பதில், தெலுங்கு சினிமாவைவிட தீவிரமாக இருக்கிறது கன்னட சினிமா. ‘கே.ஜி.எஃப்’, ‘777 சார்லி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘பனாரஸ்', ‘விக்ராந்த் ரோனா’ ஆகிய இரண்டு கன்னடப் படங்கள் அடுத்தடுத்து தமிழில் வெளிவருகின்றன.

இவற்றில் ‘பனாரஸ்’ கன்னடம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது. ஜெய தீர்த்தா இயக்கத்தில் திலகராஜ் பல்லால் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜையீத் கான் - சோனல் மோன்டோரியோ ஆகிய இருவரும் காதலர்களாக நடித்திருக்கிறார்கள்.

காசி மாநகரத்தைப் பின்னணியாகக் கொண்ட காதல் கதை இது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் இடம்பெற்றுள்ள ‘மாய கங்கா’ என்கிற பாடலை சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட விழா எடுத்து வெளியிட்டிருக்கிறது படக்குழு.

மீசை - தாடி இல்லாத பிரபுதேவா!

‘கடம்பன்’, ‘மஞ்சப்பை’ ஆகிய படங்களுக்குப் பிறகு ராகவன் இயக்கியிருக்கும் படம் ‘மை டியர் பூதம்’. குழந்தைகளைக் கவரும் வகையிலான முழு நீள ஃபேண்டசி பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இதை, அபிஷேக் பிலிம்ஸ், ரமேஷ் பிள்ளை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பிரபுதேவா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் அஷ்வந்த், ஆலியா, பரம் குகனேஷ் உள்ளிட்ட பல சிறார் நடிகர்கள் நடித்துள்ளனர். ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. ‘இந்தப் படத்துக்காக இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடினமான உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்.

இதுவரை நான் தாடி, மீசை இரண்டையும் எடுத்துவிட்டு நடித்ததில்லை. ஆனால், இப்படத்தில் வரும் சில நிமிடக் காட்சிக்காக முதல் முறையாக அதைச் செய்திருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார் படத்தில் பூதமாக விதவிதமான தோற்றங்களில் நடித்திருக்கும் பிரபுதேவா.

இயக்குநர்களின் ஒன்று கூடல்!

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு லிங்குசாமி தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்கியுள்ள படம் ‘தி வாரியர்’. இதில் ராம் பொத்தினேனி - கீர்த்தி ஷெட்டி இருவரும் நாயகன், நாயகியாக கோலிவுட்டுக்கு அறிமுகமாகின்றனர். ஏற்கெனவே இந்தப் படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி பிரபலமடைந்துள்ளன.

இந்நிலையில் படத்தின் ரிலீஸை முன்னிட்டு, சென்னையில் நடந்த ஊடகச் சந்திப்பில் படக்குழுவினருடன், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், பாலாஜி சக்திவேல், பார்த்திபன், ‘சிறுத்தை’ சிவா தொடங்கி முன்னணி இயக்குநர்களின் ஒன்றுகூடலாக இச்சந்திப்பு அமைந்தது. ஆதி வில்லனாகவும் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.

SCROLL FOR NEXT