புத்தாயிரத்தின் இளம் தலைமுறை, பழியாகக் கிடக்கும் சைபர் உலகின் பின்னணியில் ஓர் அமானுஷ்ய வலைத்தொடரை வடித்ததில் ஓடிடி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’.
தாய், தமக்கையுடன் ஏற்படும் பிணக்கு காரணமாகத் தனிக்குடித்தனம் செல்கிறாள் லாவண்யா. ஆளரவமற்ற பகுதியில், துக்க வரலாறு கொண்ட வீட்டில் தனியாகத் தங்குகிறாள்.
சமூக வலைத்தளத்தில் தன்னைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமாகக் கிடைக்கும் ஒப்பனைக் கலை சார்ந்த விளம்பர வருவாயை நம்பியிருக்கிறாள். ஆனால் ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ என்கிற லாவண்யாவின் சமூக ஊடகப் பக்கம் சோபையிழந்திருக்கிறது.
அமானுஷ்யம் மண்டிய அந்த வீட்டின் பின்னணியைப் பயன்படுத்தி சமூக ஊடகத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிடுகிறாள். வீட்டில் பேய் இருப்பதாய் அவள் கிளப்பிய உத்தியால் அதுவரை ஈயடித்த அவளது பக்கம் டிரெண்டிங்கில் முந்துகிறது.
புலி வருது கதையாக உண்மையிலேயே அந்த வீட்டில் பேய் பிரவேசம் நிகழ, அந்தச் சமூக ஊடகப் பக்கத்தில் பங்கேற்போர், பார்ப்போர் என அனைவரையும் திகில் கவ்வத் தொடங்குகிறது. கூடுதல் திகிலுக்கு லாவண்யாவின் கடந்த கால வாழ்க்கையும் சகோதரியுடனான ரகசிய முரண்களும் வெளிப்படத் தொடங்குகின்றன. இவை உட்பட ஏராளமான புதிர்களைக் கிளப்புவதோடு ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ வலைத்தொடரின் முதல் சீஸன் முடிந்திருக்கிறது.
திகில் சகோதரிகளாக ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடித்திருக்கும் இந்த வலைத்தொடரை, சௌம்யா சர்மா எழுத, பல்லவி கங்கிரெட்டி இயக்கியுள்ளார். ‘பாகுபலி’யைத் தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸின் ஓடிடி படைப்பு என்பதால், பேய்க் கதையின் நம்பகத்தன்மைக்குத் தாராளமாக மெனக்கெட்டிருக்கிறார்கள்.
நீளமான திரியில் நிதானமாகப் பொறி வளர்க்கும் அத்தியாயங்களில் பார்வையாளர்களைக் கட்டிப்போடத் தோதாக, கலை இயக்கம், பின்னணி இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலி நுட்பம் எனத் தொழில்நுட்பக் குழு பின்னணியில் தீவிரமாக உழைத்திருக்கிறது. சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் ஓடிடி தளங்களுகடன் போட்டிபோடும் வகையிலான படைப்புகளை பிராந்திய ஓடிடி தளங்களும் வழங்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைக்கிறது `ஆஹா’ தளம்.
ஏழு அத்தியாயங்களைக் கொண்ட முதல் சீஸன் முழுக்க வியாபித்திருக்கிறார் நிவேதிதா. அவரது அகலமானக் கண்களும் நிதானமான அசைவுகளும் மெல்லிய நடனமும் திகில் கதைக்கு நிரம்பவே உதவுகின்றன. ரெஜினாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்கிறபோதும் கிடைத்த வாய்ப்பில் தன்னை நிரூபித்துள்ளார்.
முழுதாகக் கதையில் கரைவதற்கு சரிபாதி அத்தியாயங்களை நீட்டித்ததுலும் ஆமையாய் நகரும் சில காட்சிகளும் அலுப்பூட்டுகின்றன. சிதையும் குடும்பங்கள், கவனமிழக்கும் குழந்தை வளர்ப்பு, சமூக ஊடக அடிமைத்தனம் எனத் திகிலுக்கு நிகரான சமூக அக்கறையை வலைத்தொடர் பதிவுசெய்திருக்கிறது.
பொதுவாக ஒரு சீஸனில் முடிச்சிட்ட புதிர்களில் கணிசமானதை விடுவிப்பதோடு, புதிய பெரும் புதிரோடு அடுத்த சீஸனுக்கான எதிர்பார்ப்பை விதைப்பார்கள். ஆனால் இந்த வலைத்தொடரில் ஏராளமான கேள்விகள் விடையின்றித் தொக்கி நிற்கின்றன. இருந்தாலும் அமானுஷ்ய படைப்புகளில் வித்தியாசமான அனுபவத்தை வழங்க முயன்றிருக்கும் `ஆன்யா’ஸ் டுடோரியல்’ குழுவுக்கு `லைக்’ போடலாம்.