திரை இசைப் பிரியர்கள் ஒரு காலத்தில் தங்களுக்குள்ளும் வாய் விட்டும் பாடிப் பார்த்த பாடலொன்று உண்டு. மிகவும் பிரமாதமாகப் பாடுபவர்கள் கூட ஐம்பது சதவீதம் கூட அப்பாடலின் வீச்சை எட்டிப்பிடிக்க முடிந்ததில்லை. ஏன் அந்தப் பாடலைப் பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியமே திரும்பவும் அதன் உன்னதத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
‘நந்தா நீ என் நிலா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற நந்தா நீ என் நிலா பாடலுக்கு இசையமைத்தவர் வி. தட்சிணாமூர்த்தி. பாடலின் ராகம் தர்மாவதி. மதுவந்தியின் சாயல் அதிகம் இருப்பதாக வாதிடுபவர்களும் உண்டு.
நெற்றி நிறைய விபூதி. சைவ மடத்தின் ஆதினம் அணிந்திருப்பதைக் காட்டிலும் அதிகமான ருத்திராட்ச மாலைகள் கழுத்தை அலங்கரிக்கும். தட்சிணாமூர்த்தியைத் திரைப்பட உலகில் எல்லோரும் சாமி என்றே அழைப்பார்கள். இசைஞானி இளையராஜா அவரைக் குருநாதர் அந்தஸ்தில் வைத்திருந்தார். அவரும் அவருடைய கிதாரிஸ்ட் சதானந்தமும் சேர்ந்து தட்சிணாமூர்த்தி இசையமைத்த எண்ணற்ற திரைப்படங்களுக்கு வாசித்திருக்கிறார்கள். கடந்த 2013-ல் சாமிகள் சென்னையில் காலமானார்.
மலையாளத் திரைப்பட உலகில் கோலோச்சிய தட்சிணாமூர்த்தி சாமிகள், தமிழில் வெகு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ஏறக்குறைய எல்லாப் பாடல்களுமே அவருடைய முத்திரையைத் தாங்கி நிற்கின்றன.
‘நந்தா என் நிலா’ பாடலுக்கும் பாடல் காட்சிக்கும் சற்றும் பொருத்தமில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம். இப்பாடலை எழுதியவர் பாண்டுரங்கன்.
சிதார் இசைப் பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும் இப்பாடலின் வரிகள் கவிதை நயம் மிக்கவை.
‘ஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே.
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போல பிறந்த வந்தாயே’
என்ற வரிகளை அப்போது சொல்லிப் பார்க்காத காதலனும் உண்டோ?
சரணத்தில் ‘ஆகமம் கண்ட சீதையும் இன்று இராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ; மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன் போகத்தில் ஆட இறங்கி வந்தாளோ” சினிமா பாடல் மிகச் சிறந்த கவிதையாக மாறி நிற்கும் தருணத்தை இந்த வரிகளில் உணர முடியும்.
அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாடும்’ என்ற அற்புதமான பாடல் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கிறது.
தட்சிணாமூர்த்தி சாமிகள் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஆலப்புழை என்றாலும் அவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி. திரை இசை அலைகள் புத்தகத்தின் ஆசிரியரான வாமனன், “தட்சிணாமூர்த்தியின் தாத்தா திருவிதாங்கூர் வங்கியில் பணியாற்றியதால் அவர் குடும்பம் கேரளத்துக்குக் குடிபெயர்ந்தது” என்று தெரிவிக்கிறார்.
தட்சிணாமூர்த்தியின் தாய் வழி தாத்தாவான சிவராமகிருஷ்ண ஐயர், தாய். தாய் மாமன்கள் எல்லோருமே இசையில் வல்லவர்கள். அவருடைய தாயார் தங்கையைத் தொட்டிலில் போட்டுப் பாடும்போது கூடவே பாடும் தட்சிணாமூர்த்தி, ஆறு வயதுக்குள் 27 தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடம் செய்திருக்கிறார். இதுவும் வாமனனிடம் அவர் சொன்ன தகவல்.
நம்பியவர்களுக்கு தெய்வம். நம்பாதவர்களுக்கு அது இல்லை. ‘வைக்கத்தப்பா அன்னதான பிரபோ’ என்று எந்நாளும் வைக்கத்தில் எழுந்தருளியுள்ள கடவுளின் பெயரை உச்சரிப்பார் தட்சிணாமூர்த்தி.
“பதினோராவது நாள். இரவு பன்னிரண்டு மணி. பயங்கர மழை. இடியும் மின்னலும். கும்மாளம் போடுறது. கதவு தட்டுற சத்தம் கேட்கிறது. ஏ தட்சிணாமூர்த்தின்னு கடுவா கிருஷ்ணய்யர்னு கஞ்சிரா வித்வான் கூப்பிட்டுண்டு நிக்கிறார். டேய் இப்பவே வைக்கத்துக்கு புறப்படணும்னார். அன்னிக்கு வைக்கத்துக்குப் போன நாளிலேயிருந்து இன்னி வரை வைக்கத்தப்பன் எனக்குப் படி அளந்திண்டிருக்கான். அவன் அன்னதானப் பிரபோதானே” என்று தன் கதையை வாமனன் புத்தகத்தில் இப்படித் தெரிவித்திருக்கிறார்.
அகில இந்திய வானொலியில் வாய்ப்பு கிடைத்ததும் சென்னைக்கு வந்தார். எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இணையாகப் பாடிக்கொண்டிருந்த வசந்த கோகிலத்துக்குப் பாட்டு வாத்தியாராகப் பணியாற்றினார்.
திரைப்பட வாய்ப்பு வந்தது. முதல் திரைப்படம் ‘ஜீவித நௌகா’. இது மலையாளப் பழக்க வழக்கங்களையொட்டி எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்.
’ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆண்டவன் இல்லா உலகம் எது ஐலசா, ஆசைகள் இல்லா இதயம் எது ஐலசா’ என்ற பாட்டுக்கு இணையான ‘ஓடப் பாடல்’ எதுவும் இல்லை.
அதிலும்
‘நதி இருந்தால் மீனிருக்கும் விதியிருந்தால் சேர்ந்திருக்கும்.
காலம் அதன் கோலம் என்றோ எங்கோ’
என்ற வரிகளில் பொதிந்திருக்கும் தத்துவம் சட்டென்று பிடிபடுவதில்லை. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஓய்ந்த இரவு நேரத்தில் திடீரென எப்.எம். ஒலிப்பெருக்கியில் இப்பாடல் ஒலிக்கும்போது உள்ளம் தாவிப் பறந்து காவிரி நதிக்கரையில் சஞ்சாரம் செய்கிறது.
அதே படத்தில் ‘நல்ல மனம் வாழ்க’ என்று வேறொருவனுக்கு மனைவியாகிவிட்ட காதலிக்காகப் பாடும் பாடலும் அருமை. நான்கு படத்தில் இசையமைத்தாலும் நச்சென இசையமைக்க வேண்டும் என்பதை நிரூபித்தவர் தட்சிணாமூர்த்தி சாமிகள்.
தொடர்புக்கு: bagwathi@gmail.com
படம் உதவி: ஞானம்